விலைவாசி உயர்வால் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் நுகர்வு: ஓர் அலசல்!

விலைவாசி உயர்வால் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் நுகர்வு: ஓர் அலசல்!

சமீபகாலமாக விலைவாசி உயர்வு காரணமாக மக்களுடைய வாங்கும் சக்தி குறைந்துவருகிறது. மக்களும் அவசியத் தேவைகளுக்கானவற்றை மட்டுமே வாங்குகிறார்கள். நுகர்பொருட்களில் உடனடியாகத் தேவைப்படுவதையும் இன்றியமையாதவை என்று கருதுபவற்றையும் மட்டுமே வாங்குகிறார்கள். கையில் சற்று சேமிப்பை அதிகப்படுத்திக்கொண்டு பிறகு வாங்கலாம் என்று முடிவை ஒத்திப்போடுகிறார்கள்.

நகர்ப்புறங்களைவிடக் கிராமங்களில் இது அப்பட்டமாகத் தெரிகிறது. கிராமவாசிகள் சிக்கனமானவர்கள். ஆடம்பரமானதையும் விலை அதிகமானதையும் வலிந்து போய் வாங்க மாட்டார்கள். கையில் பணம் இருந்தால்கூட தங்களுக்கு அதிகம் பயன்படாத பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

‘கோவிட்–19’ பெருந்தொற்றுக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமே மக்களிடம் மாறிவிட்டது. உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றோடு சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வாய் ருசிக்காகவும், வாங்கித்தான் பார்ப்போமே என்ற ஆசைக்காகவும் வாங்குவதைக் குறைத்துக்கொண்டு வருகிறார்கள். வருவாய் இழப்பைச் சந்தித்தவர்கள் புதிய வரவுக்கேற்ப, செலவினங்களைத் தேர்வு செய்கின்றனர். நகரங்களில் அதிக வாடகை கொடுத்துக்கொண்டு குடியிருந்தவர்கள் கிராமங்களில் சொந்த வீடுகளுக்கு அல்லது குறைந்த வாடகை வீடுகளுக்கு மாறிவிட்டனர். தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைப் படிக்க வைத்தவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்கின்றனர். இரு சக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் சொந்தமாக இருந்தாலும், கூடுமானவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். விலை உயர்ந்த நகைகள், துணி மணிகள் போன்றவற்றுக்குப் பதிலாக நீண்ட காலம் உழைக்கக்கூடிய நகைகளுக்கும் அதிக பராமரிப்புச் செலவில்லாத துணிகளுக்கும் முன்னுரிமை தருகின்றனர்.

திருமணம், காது குத்து போன்ற தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே தங்கம், வெள்ளி வாங்குகிறார்கள். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற நினைப்பில் சேமிப்பை அதிகப்படுத்துகிறார்கள் அல்லது பழைய கடன்களை வேகமாக அடைக்கிறார்கள். (அதேசமயம் கடந்த இரண்டாண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததாலும் இனி எதிர்காலத்தில் இப்படியெல்லாம் போக முடியுமோ முடியாதோ என்ற எண்ணத்தில் சுற்றுலாத் தலங்களுக்கும் ஆலயங்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் சொந்த ஊர்களுக்கும் விடுமுறையில் செல்கிறார்கள். இது போக்குவரத்து, சுற்றுலா, ஹோட்டல்கள் துறைக்கு ஆறுதலாக இருக்கிறது)

மக்களுடைய இந்த மனப்போக்கு சந்தைகளில் பொருட்களின் விற்பனை வேகம், அளவுகளிலிருந்து தெரிகிறது. இதைத் தொழில் நிறுவன நிர்வாகிகள், வியாபாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். ‘கோவிட் -19’ பெருந்தொற்றுக்குப் பிறகு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அது பிறகு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும் உலக அளவில் கப்பல், விமானப் போக்குவரத்து முழு அளவில் மீளவில்லை. இப்போதும் சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக வெளிப்படையாகத் தெரிவிக்காமல் பல நகரங்களில் பொது முடக்கம் கண்டிப்புடன் அமல்படுத்தப்படுகிறது. எனவே அந்நாட்டிலிருந்து உலகச் சந்தைக்கு வந்துகொண்டிருந்த ஆலைப் பொருட்களின் அளவு குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் ஆர்டர் செய்த பொருட்கள் கூட முன்பு கிடைத்ததைவிட காலதாமதமாகத்தான் கைக்குக் கிடைக்கிறது.

உக்ரைன் போர்

‘கோவிட் 19’ பெருந்தொற்றைப் போலவே இப்போது உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்தும் போராலும் வேளாண் துறை, தொழில் துறை இரண்டிலுமே நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் ரஷ்யாவைக் கடுமையாக பாதித்தாலும், நடவடிக்கை எடுத்த நாடுகளையுமே பாதித்துக்கொண்டிருக்கிறது. இந்த முறை தொழில்துறையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் கார், மொபைல், மடிக்கணினி உள்ளிட்ட அதிக விலையுள்ள பொருட்களின் உற்பத்தியைக் கூட குறைத்து வருகின்றன. இதனால் உலகச் சந்தையில் பண்டங்களின் விலை உயர்ந்து வருகிறது. நெருக்கடியான காலமாக இருப்பதால் பொருட்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் செலவும் அதிகமாகி வருகிறது. உலக அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தியில் ஏற்பட்ட சுணக்கமும் சந்தையில் பொருட்களின் தேவையின் அளவு அதிகரித்திருப்பதும் கேட்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நுகர்வில் சரிவு

விலைவாசி அதிகமாக இருப்பதால் கிராமப்புற நுகர்வோர் தங்களுடைய தேவையைக்கூட தற்காலிகமாக கட்டுப்படுத்திக்கொண்டு வாங்குவதை ஒத்திப்போடுகிறார்கள் அல்லது வாங்க நினைத்த எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிடுகிறார்கள்.

கோத்ரேஜ் நிறுவனம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் தங்களுடைய தயாரிப்புகளை விற்க முடிந்தது. மே மாதம் தொடங்கிய பிறகு கிராமப்புறங்களில் விற்பனை வேகம் குறைந்திருக்கிறது. பல வட இந்திய மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து அனல்காற்று வீசுவது தீவிரமடைந்திருப்பதாலும் நுகர்வு குறைந்துவிட்டது. பகல் நேரத்தில் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்கள் மாலையில் வெப்பம் தணிந்ததும் அவசிய வேலைகளைத் தவிர மற்றவற்றுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்தி வரும் தாக்குதலும் அதற்கு எதிர்வினையாக அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் எடுத்த பொருளாதாரத் தண்டனை நடவடிக்கைகளும் விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை ஆகிய மூன்றையுமே பாதித்துக்கொண்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, கோதுமை, கோதுமை மாவு, காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அவசியப் பண்டங்கள் கிடைப்பது குறைந்துவிட்டதால் அவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு வருமானம் குறைவு. அவர்களில் பெரும்பகுதியினர் அமைப்பு ரீதியாக திரட்டப்படாத துறைகளிலேயே வேலை செய்கிறவர்கள் என்பதால் நுகர்வோர் விலை குறியீட்டெண் உயர்வுக்கு ஏற்ப ஊதியமும் உயர வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே நுகர்வைக் குறைக்கின்றனர்.

கிராமவாசிகள் பொருட்கள் வாங்குவதைக் குறைத்துக்கொண்டுவிட்டதை கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவன வர்த்தகப் பிரிவுத் தலைவர் கமல் நந்தி உறுதிப்படுத்துகிறார். பெருந்தொற்று காரணமாக இரண்டாண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்கள் வெளியே நடமாடத் தொடங்கியதால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 1958 முதல் குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கிய கோத்ரேஜ் நிறுவனம், இடு பொருட்கள் செலவு அதிகமாகிவிட்டதால் தங்களுடைய பண்டங்கள் சிலவற்றுக்கு விலையை உயர்த்த திட்டமிட்டிருந்தது. உக்ரைன் சம்பவமும் நுகர்வுக் குறைப்பும் அவர்களைக் கவலையடையச் செய்திருக்கிறது. இப்போதைய சூழலில் சிறிதளவு விலையை உயர்த்தினால்கூட தங்கள் பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டு மாற்ற நிறுவனப் பொருட்களுக்கு மாறிவிடுவார்களோ என்று அனைத்து நிறுவனங்களும் அஞ்சுகின்றன.

ஏப்ரல் மாதத்தில் பல பண்டங்களின் மொத்த விலையும் சில்லறை விற்பனை விலையும் - சமீபத்திய ஆண்டுகளில் இருந்திராத வகையில் - அதிகரித்தன. எனவே இந்திய ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது. இதனால் கையில் ரொக்கம் அதிகமாக வைத்திருப்பவர்கள் அதை வங்கியிலோ வேறு நிறுவனங்களிலோ முதலீடு செய்து வட்டி மூலம் கூடுதல் பெற முயற்சிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பு. ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் செயலை மீண்டும் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் சந்தைகளில் இப்போது இருக்கிறது.

டாபர் இந்தியா நிறுவனமும், தங்களுடைய பண்டங்களுக்கான கேட்பு குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்நிறுவனம் ஷாம்பு முதல் பற்பசை, தேன், பழரசம் போன்றவை வரை விற்கிறது. இவை அனைத்துமே அவசியப் பொருட்களாகக் கருதப்படுபவை அல்ல. கடந்த சில மாதங்களாகவே உணவு தானியங்களின் விலையும் விலைவாசியும் போட்டி போட்டுக்கொண்டே உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்துஸ்தான் யூனி லிவர் நிறுவனமும் கடந்த மாத இறுதியிலிருந்தே சந்தையில் கேட்பு வேகமாகச் சரிந்து வருகிறது என்று உறுதி செய்கிறது. இந்நிறுவனம் டோவ் சோப்பு, வாசலைன், ஹார்லிக்ஸ் என்று பலதரப்பட்ட நுகர் பொருட்களை விற்கிறது. இவற்றிலும் கூட அவசியம் என்று கருதும் பொருட்களை மக்கள் வாங்கிவிடுகிறார்கள் என்று நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் சந்தையில் விலை உயர்ந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த உயர்வில் ஓரளவைத் தாங்களே ஏற்றுக்கொண்டு விலையை உயர்த்தாமல் தொடர்ந்து விற்பனை செய்யும். இப்போதுள்ள நிலைமை எப்படி என்றால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வாலோ, வரி விதிப்பினாலோ விலை உயர்ந்தால் அதை நுகர்வோரிடமே வசூலித்தாக வேண்டிய அளவுக்கு நிறுவனங்களின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது. கோவிட் பெருந்தொற்றால் பொது முடக்கம் அறிவித்த கடந்த இரண்டாண்டில் முழு அளவு உற்பத்தியையும் விற்பனையையும் மேற்கொள்ள முடியாமல் தவித்தன இந் நிறுவனங்கள். அதே வேளையில் ஊழியர்களுக்கான ஊதியம் உள்பட கோடிக்கணக்கான ரூபாய்களைத் தொடர்ந்து செலவழித்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே ரொக்கக் கையிருப்பும், வங்கிக் கணக்கில் உபரியும் வற்றிவிட்டன. எனவே விலைவாசி உயர்வு எதனால் ஏற்பட்டாலும், எவ்வளவாக இருந்தாலும் அதை நுகர்வோர் தோளில் ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை நிறுவனங்களுக்கு.

வெளிநாட்டு நிறுவனங்களும் விலைவாசி உயர்வால் விற்பனைச் சரிவு ஏற்படுவதைத் தெரிவிக்கின்றன.

அரசுக்கும் ஆபத்து

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் விலைவாசி உயர்வு மிகப் பெரிய அச்சுறுத்தல். பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு மக்களால் தாங்க முடியாத அளவுக்குப் போய்விட்டது. இது அடுத்து நடைபெறவிருக்கும் குஜராத் உள்ளிட்ட மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் தங்களுடைய பொருள்களின் விலையை சிறிதளவு உயர்த்திய வோல்டாஸ் நிறுவனம், பொருள்களுக்கான உத்தரவாத காலத்தை இரட்டிப்பாக்கியும், கடனில் வாங்குவோருக்கு எளிதில் தங்கள் நிறுவனம் மூலமே வட்டிக்குக் கடன் கொடுத்தும் விற்பனை சரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டது.

கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசூகியும் சந்தை நிலவரம் குறித்து இதையே தெரிவிக்கிறது. தொடக்க நிலை விலையில் இருக்கும் சிறிய கார்கள்தான் கிராமங்களில் அதிகம் விற்பனையாகும். இந்த மாதம் அவற்றின் விற்பனைக் குறைந்துவிட்டது. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் உயர் வருவாய்ப் பிரிவினரும் வாங்கக்கூடிய கார்களின் விற்பனை அதிகரித்தது!

சர்வதேச செலாவணி சந்தையிலும் பங்குச் சந்தைகளிலும் ஏற்படும் மாற்றங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதனால் இறக்குமதியாளருக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. இதனாலும் பல பண்டங்களின் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பிருக்கிறது. இப்படியே போனால் பண்டிகைக்கால விற்பனையும் மந்தமாகிவிடுமே என்று உற்பத்தியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in