உச்சம் தொடும் தங்கம் விலை: உக்ரைன் போர் பதட்டம் காரணமா?

உச்சம் தொடும் தங்கம் விலை: உக்ரைன் போர் பதட்டம் காரணமா?

ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் ஏற்றம் கண்டிருப்பதற்கு உக்ரைன் போர் பதட்டம் பிரதான காரணமாகி இருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான உரசல் மற்றும் உலக நாடுகள் அதற்கு எதிர்வினையாற்றுவது போன்றவை, உலகளவிலான போர் பதட்டத்தை உருவாக்கியுள்ளன. கடந்த சில தினங்களாக எகிறிவரும் தங்கத்தின் விலை உயர்வுக்கு இந்த சர்வதேச பதட்ட சூழலே காரணம் என சொல்லப்படுகிறது.

கரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதன் வரிசையில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கையை 200ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறிய இடைவெளிக்குப் பின்னர் கரோனா அலையின் வீச்சு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால், தற்போதைய தளர்வுகளை பயன்படுத்தி, காத்திருப்பில் இருந்த திருமண ஏற்பாடுகளை முடிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பொதுவாகவே, இது திருமண சீஸன் என்பதாலும், திருமண தேவைக்காக பொதுமக்கள் தங்கள் கையிருப்பை கரைத்து நகை வாங்கும் போக்கு அதிகரித்து காணப்படும். தற்போதைய தளர்வுகள் காரணமாகவும் வேகமெடுக்கும் திருமண ஏற்பாடுகளால், பொதுமக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. இது தவிர, கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார சுணக்கங்கள் சரியாகி வருவதாலும், மக்களின் இயல்பான சேமிப்பு மற்றும் வழக்கமான தேவைக்காகவும் தங்கம் வாங்குவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வைரத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் ரூ.36,192ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று(பிப்.12) ரூ.37,720ஆக உயர்ந்தது. 10 நாட்கள் இடைவெளியிலான இந்த விலை உயர்வு என்பது, தங்கம் வாங்கும் ஏற்பாட்டில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 விலை உயர்வு கண்டிருக்கிறது. கடந்த 10 நாள்களின் விலை உயர்வு ரூ1,500ஐ கடந்துள்ளது.

வழக்கமாக தங்கம் விலையின் உயர்வுக்கு பல காரணங்கள் சுட்டப்படும் என்றாலும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் பதட்டமே தற்போதைய காரணமாக முன்நிற்கிறது. இதே போர் பதட்டத்தினால், சர்வதேசளவில் கடந்த ஒரு மாதமாகவே பெரும் சரிவுகளை சந்திப்பதும், மீள முயற்சிப்பதுமான காட்சிகளை பங்குச் சந்தைகள் கண்டு வருகின்றன. இந்த பங்குச் சந்தைகளின் ஸ்திரமின்மை காரணமாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மடைமாற்றுவதும், ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வில் எதிரொலித்துள்ளது. தங்கம் மட்டுமன்றி வைரத்தின் விலையும் புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த சில தினங்களில் வைரத்தின் விலையில் 30%க்கு மேல் உயர்வு கண்டுள்ளது. இவற்றால் திருமணங்களை நிச்சயித்துவிட்டு தங்கம் வாங்கும் முடிவில் இருந்த மத்தியவர்க்கத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமையான இன்று(பிப்.13) தங்கத்தின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே தொடரும் என்பதாலும், தங்க சந்தையின் போக்கு திங்களன்று புதிய உயர்வு காணும் என்று பரவிய செய்திகளாலும், இன்று நகைக்கடைகளை நாடுவோர் அதிகரிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in