கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனையின் புதிய முறை: 6 மாதம் தள்ளிப்போகிறது

கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனையின் புதிய முறை: 6 மாதம் தள்ளிப்போகிறது

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உபயோகத்தில் புத்தாண்டு முதல் அமலாக இருந்த புதிய பரிவர்த்தனைப் பயன்பாடு, மேலும் 6 மாதங்களுக்கு தள்ளிப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மின் வணிகம் மற்றும் இணையவழி உபயோகங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து வந்தன. கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் மறுமுனையிலிருக்கும் சர்வர்களில் சேமித்து வைக்கப்படுவதே, இந்த முறைகேடுகளுக்கு காரணமாவதாக ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. எனவே, அவ்வாறு கார்டுதாரரின் தனிப்பட்ட தகவல்களை தங்கள் சர்வரில் சேமிக்க, மின் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு முறையும், கார்டுதாரர் தங்கள் பெயர், கார்டின் 16 இலக்க எண், சிவிவி ரகசிய எண், அதன் பின்னர் அலைபேசிக்கு வரும் ஓடிபி எண் ஆகிய நடைமுறைகளை பதிவு செய்த பிறகே இணையவழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியதானது. இதற்கு பதிலாக. சுலபமான கார்டு ஆன் ஃபைல் டோக்கனைஷேசன் (card-on-file tokenisation) என்ற முறையை அமல்படுத்த முடிவானது. இதன் மூலம் ஒவ்வொரு மின் வணிக நிறுவனத்துக்கும் பிரத்யேக டிஜிட்டல் டோக்கன் பெற்று தங்களது பரிவர்த்தனையை முடித்துக்கொள்ளலாம்.

இந்த முறையில் கார்டு தகவல்கள் எதிர்முனை சர்வரில் பதிவு செய்யப்படாது என்பதோடு, கார்டுதாரர் ஒவ்வொரு முறையும் எல்லாத் தகவல்களையும் உள்ளிட அவசியமில்லை. பாதுகாப்பான மற்றும் துரிதமான பரிவர்த்தனைக்கு இந்த டோக்கனைசேஷன் உத்தரவாதமளிக்கும்.

சிறப்பு வாய்ந்த இந்த புதிய முறை, புத்தாண்டு முதல் அமலாக இருந்தது. ஆனால் புதிய தொழில்நுட்ப ஏற்பாடுகளுக்கு தாங்கள் இன்னமும் தயாராகவில்லை என பெரும்பாலான வங்கிகள் கைவிரித்தன. இதையடுத்து மேலும் 6 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 2020 மார்ச்சில் உத்தேசிக்கப்பட்ட இந்தப் புதிய திட்டம், பல்வேறு தடைகள் காரணமாக தள்ளிப்போடப்பட்டு வந்ததில், தற்போது மற்றுமொரு முறையாக 6 மாத அவகாசத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022, ஜூலை 1 முதல் புதிய முறை நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.