பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுக்களை தபால் வழியாக ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பினை கடந்த மே 19-ம் தேதி வெளியிட்டது. இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதையடுத்து வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி.
இதையடுத்து, புழக்கத்தில் உள்ள எஞ்சிய ரூ.2,000 நோட்டுகளின் மதிப்பானது தற்போது ரூ.24,000 கோடி என உள்ளது. இதன்படி புழக்கத்தில் இருந்த 93 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் தங்களது வங்கிக் கணக்கில் பற்று வைத்துக் கொள்ளவும் அக்டோபா்- 7 வரை மத்திய அரசு அவகாசம் அளித்தது. அதன் பின்னா் ரிசா்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் 2,000 ருபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவோ அல்லது தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவோ ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. இதற்கு எவ்வித கால அவகாசமும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ரிசா்வ் வங்கி கிளை அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!
அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை உயிரிழப்பு! மர்ம மரணமாக வழக்குப்பதிவு!
அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துடன் ஏலக்காய்... சபரிமலையில் 6,65,000 அரவணை பாயாச டின்களை அழிப்பு!