தொழில் துறையினரின் தற்கொலைக்கு அரசின் அலட்சியமே காரணம்!

இந்தியத் தொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன் பேட்டி
தொழில் துறையினரின் தற்கொலைக்கு அரசின் அலட்சியமே காரணம்!

2020-ல் தற்கொலை செய்துகொண்டவர்களில் விவசாயிகளை விடவும், வணிகர்கள், தொழில் துறை சார்ந்தவர்கள், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம் என சமீபத்தில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

2019-ம் ஆண்டை ஒப்பிட, வணிகத் துறையைச் சார்ந்தவர்கள் தற்கொலை செய்துகொள்வது 29 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம். இதுதொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், இந்தியத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், பெருந்தொற்றுக் காலத்தில் தொழில் துறை முடக்கம் தொடர்பாக தேசிய அளவில் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவருமான கே.இ.ரகுநாதனிடம் பேசினோம்.

சமீபத்தில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தத் தகவல்கள்கூட தவறாகவே இருக்கும் என்று கருதுகிறேன். நிஜமான எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும். அதுவும் இது 2020-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரம்தான். 2021-ல், எத்தனை பேர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது இனிமேல்தான் தெரியவரும். இப்படியெல்லாம் நடக்கும் என்பதை நாங்கள் முன்பே சொல்லிவந்தோம். சாலையின் குறுக்கே ஒருவர் செல்கிறார் என்றால், அவர் வாகனங்களில் அடிபடும் வாய்ப்பு அதிகம் என்று குழந்தைக்குக்கூட தெரியும். அப்போது என்ன செய்ய வேண்டும்? அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது வாகனங்களையாவது தடுத்து நிறுத்த வேண்டும். எதையுமே செய்யாவிட்டால் அவரை எப்படிக் காப்பாற்ற முடியும்? இதுதான் இங்கும் நடந்திருக்கிறது.

பிரச்சினை தீவிரமடைய என்ன காரணம்?

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றின் காரணமாகத் தொழில் துறையில் ஏற்கெனவே சரிவு ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில், பெருந்தொற்றுக் கால பொதுமுடக்கம் தொழில் துறையினரை மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. கடன் பிரச்சினை, தொழில் நசிவு உள்ளிட்ட காரணங்களால் ஏராளமானோர் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தாள முடியாதவர்கள் விபரீத முடிவுகளுக்கும் சென்றுவிடுகிறார்கள். தொழில் துறையைச் சேர்ந்த 11,716 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பது என்பது நாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடுகையில் ஒரு சிறிய எண்ணிக்கையாகத் தெரியலாம். ஆனால், இது தொழில் துறையின் எதிர்காலம் குறித்த ஆபத்தான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறது. இப்போதும் அரசு சுதாரிக்கவில்லை என்றால் விபரீதங்கள் தொடரும் என்றே தோன்றுகிறது.

பெருந்தொற்றுக் காலத்தில் தொழில் துறையைக் காப்பாற்ற அரசும் ரிசர்வ் வங்கியும், கடன் தவணை விலக்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. அவை தொழில் துறையினரைக் காப்பாற்ற உதவவில்லையா?

பெருந்தொற்று நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு உதவியது உண்மைதான். ஆனால், பொதுமுடக்க காலத்தில் தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அரசு என்ன செய்துவிட்டது? இரண்டே இரண்டு உதவிகள்தான் தொழில் துறையினருக்குக் கிடைத்தன. கடன் தவணையிலிருந்து 6 மாதம் விலக்கு அளிக்கப்பட்டது. சொல்லப்போனால் விலக்கு அளிக்கப்படவில்லை. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கடன் தவணைகள் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால், செப்டம்பரிலிருந்து எத்தனை நிறுவனங்களால் மீண்டுவர முடிந்தது? பொதுமுடக்கத்தின்போது எல்லா நிறுவனங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் எப்படி மீண்டு வந்திருக்க முடியும்? 10 மாதங்களுக்கு மேல் தொழில் நிறுவனங்கள் உட்பட எல்லாமே மூடப்பட்டிருந்த நிலையில், வெறும் 6 மாத தள்ளிவைப்பு எப்படி உதவியிருக்க முடியும் என்பதுதான் என் கேள்வி.

கடன் தவணை தள்ளிவைக்கப்பட்ட விஷயத்தில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. என்ன நடந்தது அதில்?

தொழில் துறையைப் பொறுத்தவரை, நடப்புக் கணக்கில் (current account) வாங்கும் கடனில் குறுகியகாலக் கடன் (term loan), நடப்பு மூலதனம் (working capital) என 2 வகைகள் உண்டு. நடப்பு மூலதனம் என்பது வட்டி மட்டும் கட்டுவது. குறுகியகாலக் கடன் என்பது உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக வாங்கப்படும் கடன். இதற்குத்தான் மாதாந்திர தவணை கட்ட வேண்டும். இதையும் நகைக் கடனையும் எப்படி ஒரே அளவுகோலில் பார்க்க முடியும் என்பதுதான் என் கேள்வி. ஒரு பைக் வாங்கியதற்கான மாதாந்திரத் தவணையையும், பி.எம்.டபிள்யூ கார் வாங்கியதற்கான மாதாந்திரத் தவணையையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடியும்? ரிசர்வ் வங்கி செய்த தவறு இதுதான். முதல் கோணல் முற்றும் கோணல் என்றாகிவிட்டது.

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி பிணையற்ற கடன்களை அறிவித்ததே, அது எந்த அளவுக்குக் கைகொடுத்தது?

அதிலும் குழப்பம்தான் மிஞ்சியது. நன்றாக இயங்கிய நிறுவனங்களுக்குத்தான் அந்தக் கடன் உதவி வழங்கப்பட்டது. அதுதான் முக்கியத் தகுதியாகப் பார்க்கப்பட்டது. அதாவது, தத்தளித்துக்கொண்டிருப்பவர்களுக்குக் கைகொடுக்காமல் கரையேறி வந்துவிட்டவர்களுக்குக் கைகொடுப்பது என்கிற ரீதியில்தான் அந்தக் கடன்கள் வழங்கப்பட்டன. இதனால், எப்படியாவது மீண்டுவர வேண்டும் என்று தடுமாறிக் கொண்டிருந்தவர்கள் கைவிடப்பட்டனர். கடனுக்கான உத்தரவாதத்தை அரசே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், அந்த உத்தரவாதம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருந்தவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் விஷயம். கடன் கொடுப்பதுதான் வங்கியின் தொழில். ஆனால், கஷ்டப்படுபவர்களுக்குத்தானே அது கைகொடுக்க வேண்டும்? ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் இருந்த குழப்பங்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம். இதில் இருந்த ஓட்டைகளை வங்கிகள் பயன்படுத்திக்கொண்டன. பொதுமுடக்கக் காலத்தில் கட்டுப்பாடுகளுடன் தொழில் துறை இயங்கட்டும் என அரசு சொல்லியிருந்தால், இத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது; 2022-ம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 10 முதல் 10.5 சதவீதமாக இருக்கும் என்றெல்லாம் நம்பிக்கையளிக்கும் வகையில் கணிப்புகள் வெளியாகின்றன. இந்தச் செய்திகளுக்கும் நடுவே, தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக வெளிவரும் தகவல் முரணாக இருக்கிறதே?

எல்லாம் நன்றாக இருக்கிறது... நாடு மீண்டு வந்துவிட்டது என ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால், பிரச்சினைகளே கண்ணுக்குப்படாது. சிக்கல்கள் இன்னும் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனம். இதோ, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) செயல்படா சொத்துகள் (என்பிஏ) விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. இதையடுத்து என்பிஎஃப்சி இன்னும் கடுமையாக நடந்துகொள்ளும். கடன் தவணை வசூல் விஷயத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். இதனால், ஏற்கெனவே, தொழிலை எப்படி நடத்துவது, கடனை எப்படிக் கட்டுவது என்றெல்லாம் தவித்துக்கொண்டிருப்பவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவார்கள். பொதுத் துறை வங்கிகள் கடனை வசூலிக்கும் விஷயத்தில், கடன் வாங்கியவரின் பெயர் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட்டு நெருக்கடி கொடுக்கும். ஆனால், என்பிஎஃப்சி நிறுவனங்கள் நடந்துகொள்ளும் விதமே வேறு மாதிரி இருக்கும். ஏற்கெனவே இருந்த பிரச்சினைகள் குறித்து நாங்கள் எழுப்பிய குரல்கள் செவிமடுக்கப்படவே இல்லை. இப்போது, ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் இன்னும் 6 மாதங்களில் விபரீதங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்று இப்போதே சொல்கிறேன்.

தமிழகத்தில் மட்டும் தொழில் துறையைச் சேர்ந்த 1,447 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் நடவடிக்கைகள் நம்பிக்கையளிக்கின்றனவா?

துரதிர்ஷ்டவசமாக, இல்லை என்றுதான் சொல்வேன். ஆட்சிக்கு வந்து 6 மாதங்களான பின்னரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களைக் காப்பாற்ற காத்திரமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நலிவுற்ற குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க முன்னாள் அரசுச் செயலர் சுந்தரதேவன் தலைமையில் ஒரு குழு ஜூலை 28-ல் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே தவறான குழு என்பேன். 7 பேர் கொண்ட அந்தக் குழுவில் தொழில் துறையை நிஜமாகவே பிரதிநிதித்துவம் செய்பவர் ஒருவர் மட்டும்தான். தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படும் 2 பெண்கள், தொழில் துறையில் நடைமுறைச் சார்ந்து இயங்குபவர்கள் அல்ல. மற்றவர்கள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள். அந்தக் குழு 3 மாதங்களுக்குள் இதுதொடர்பாக அறிக்கை அளிக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு அறிக்கை அளிக்கவே 3 மாதங்கள் ஆகும் என்றால், தொழில் துறையின் கதி என்ன என்று அப்போதே நினைத்தோம். இவர்களின் மாண்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அந்தக் குழுவில் இவர்கள் மட்டுமே இருப்பது சரியல்ல. இதோ 3 மாதங்கள் முடிந்துவிட்டன. இப்போது என்ன நிலைமை? இதற்கு யார் பதில் சொல்வது? இந்த 3 மாதங்களில்தான் கட்டுப்பாடுகள் இல்லாமல் இயங்கும் வாய்ப்பு தொழில் நிறுவனங்களுக்குக் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் உதவிகளைச் செய்யாமல் இனி என்ன செய்துவிடப்போகிறது அரசு? இது மழைக்காலம் வேறு. பிரச்சினைகள் இன்னும் அதிகரிக்கும்.

இந்தப் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு?

இனிமேலாவது மத்திய அரசும் மாநில அரசும் விழித்துக்கொள்ள வேண்டும். தொழிலை நடத்த முடியவில்லை, அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான வழி அடைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அரசு உதவ வேண்டும். ‘தொழில் நடத்த முடியவில்லை என்று நினைப்பவர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்; அசல் தொகையில் 25 சதவீதத்தை ரத்து செய்துவிடுகிறோம்; மீதம் இருக்கும் 75 சதவீதத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும்; இதற்கு 6 மாதங்கள் அவகாசம் தருவோம்’ என்றெல்லாம் அறிவித்து அவர்கள் கவுரவமாக வெளியேறுவதற்கு ஒரு வழி ஏற்படுத்தித்தர வேண்டும். அடுத்ததாக, ‘ஏற்கெனவே செய்துகொண்டிருந்த தொழிலைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். ஆனால் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அரசுதான் உதவ வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு, ‘2 வருடங்களுக்கு தவணையைத் தள்ளிவைக்கிறோம். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கடனில் தள்ளுபடி வழங்குகிறோம்’ என்றெல்லாம் அரசு நம்பிக்கையளிக்க வேண்டும். மூன்றாவதாக, தொழிலை மாற்ற விரும்புபவர்களுக்கு மாநில அரசுகள் உடனடியாகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம். இப்படி ஒவ்வொரு துறைக்கும் பிரத்யேகமான தேவைகளைக் கண்டறிந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால்தான், விபரீதங்களைத் தடுத்து நிறுத்த முடியும். முக்கியமாக, தொழில் முனைவோரிடம் கருத்து கேட்க வேண்டும். குறு சிறு தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சினைகள் பிரத்யேகமானவை. எல்லோருக்கும் ஒரே அளவு சட்டை தந்தால் எப்படிப் பொருந்தும் அல்லது அனைவரும் பலன் அடைய முடியும் என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

Related Stories

No stories found.