இந்தியாவில் 800 மருந்துகளின் விலை 10.7% உயர்வு: காரணம் சீனாவா?

இந்தியாவில் 800 மருந்துகளின் விலை 10.7% உயர்வு: காரணம் சீனாவா?

இந்தியா முழுவதும் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்று முதல் 10.7 சதவீதம் கூடியுள்ளது. குறிப்பாக காய்ச்சல், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், ரத்த சோகை போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வில் பாராசிட்டமால், ஃபெனோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின், சிப்ரோஃப்ளோக்சின், ஹைட்ரோகுளோரைடு, மெட்ரானிடசோல் போன்ற மருந்துகளும் அடங்கும். இந்த விலை உயர்வை இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

கரோனா தாக்கம் காரணமாக நொடிந்துபோன மருந்து உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அத்தியாவசிய மருந்துகளின் விலையை மொத்த விலைக் குறியீட்டில் (WPI) 10.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கூறியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு விலை உயர்த்தப்பட்டதைப்போல 2022-ம் ஆண்டிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. திடீரென உயர்த்தப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்.ரமேஷ்சுந்தர்
ஆர்.ரமேஷ்சுந்தர்

ஏன் இந்த விலை உயர்வு என அகில இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தரிடம் கேட்டோம். "கரோனா காலத்தில் மருந்துத்துறை நொடித்து போனதாக மருந்து உற்பத்தியாளர்கள் காரணம் காட்டியது உண்மையில்லை. கரோனா காலத்தில் அபரீத லாபம் தரும் தொழிலாக இருந்தது மருந்து விற்பனை தொழில் மட்டும்தான். இந்தியாவில் உள்ள 800 மருந்துகளில் 18 சதவீத மருந்துகள் மட்டும்தான், மத்திய அரசின் விலைக்காட்டுப்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக மருந்து கம்பெனிகள் நினைத்த நேரத்தில் விலையை உயர்த்தி வருகின்றன. அனைத்து அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் விலையையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

இந்த விலை உயர்விற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும் பொதுத்துறை ஆலைகள் நசிந்து கிடப்பதுதான். இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் 80 சதவீதத்திற்கு சீனாவில் இருந்துதான் மூலப்பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. திடீரென மத்திய அரசு எடுத்த சீனா எதிர்ப்பு நிலைபாடு காரணமாக அங்கிருந்து மூலப்பொருட்கள் வருவது சில காலம் தடைபட்டது. தற்போது மீண்டும் நாம் அந்நாட்டை நம்பியிருப்பதால் மூலப்பொருட்களின் விலையைச் சீனா உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக மருந்துப் பொருட்களின் விலையேற்றம் உள்ளது. அத்துடன் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு 12 முதல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து மருந்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வதுடன், இந்தியாவிலேயே மருந்து பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் தொழிற்சாலைகளை மீண்டும் புனரமைக்க வேண்டும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் இன்னும் மருந்து பொருட்கள் அனைத்தும் ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் கீழ்தான் வருகிறது. மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் அனைத்து மருந்துப்பொருட்களையும் கொண்டு வருவதன் மூலம் மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதன் மூலம் மருந்துப்பொருட்களின் விலைகளையும் குறைக்க முடியும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in