விளைநிலங்களை அழித்துவிட்டு விமான நிலையமா?

போர்குரல் எழுப்பும் 12 கிராமங்கள்!
விளைநிலங்களை அழித்துவிட்டு விமான நிலையமா?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்கப் போவதாக ஆர்ப்பாட்டமாக அறிவித்திருக்கிறது அரசு. இதனால் தமிழகத்தில் இரண்டாவது தொழில்புரட்சி உருவாகும் எனத் தமிழக அரசு பெருமிதம் கொள்கிறது. இந்நிலையில், விளை நிலங்களையும் நீர்நிலைகளையும் குடியிருப்புகளையும் அழித்துவிட்டு வரும் விமான நிலையம் எங்களுக்கு வேண்டாம் என 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள்.

சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளைக் கையாண்டு வருகிறது. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் பரனூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய திறனுடன் அமையவிருக்கும் இந்த விமான நிலையத்துக்கான உத்தேச திட்ட மதிப்பீடு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள்.

புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் 6 கிராமங்களும் வாலாஜாபாத் தாலுகாவில் 6 கிராமங்களும் வருகின்றன. இதனால், பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மரப்புரம், ஏகனாபுரம், சிங்கிள்பாடி, குனகரம்பாக்கம், மகாதேவி மங்களம், மேலேரி, இடையார்பாக்கம், அக்கம்மாபுரம் ஆகிய அந்த 12 கிராமங்கள் வாழ்வாதாரங்களையும் குடியிருப்புகளையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஏகனாபுரம், நாகப்பட்டு, மேலேரி, நெல்வாய் ஆகிய நான்கு கிராமங்களும் முழுமையாக விமான நிலைய வரைபடத்துக்குள் வருகின்றன. மற்ற கிராமங்களிலும் விவசாய நிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்படும் சூழல். விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 90 சதவீதத்துக்கு மேல் நன்செய் நிலம். 2,500 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால் அதில் நீர்நிலைகளும் அடங்கி இருக்கின்றன. ஏகனாபுரத்தில் 3 ஏரிகள், நெல்வாய் கிராமத்தில் 2 ஏரிகள், நாகப்பட்டில் 2 ஏரிகள் இதனால் அழியும் ஆபத்தும் இருக்கிறது. மேலும், குளங்கள், தாங்கல்கள், கால்வாய்கள் என நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இதையெல்லாம் சுட்டிக்காட்டித்தான் அந்த 12 கிராமங்களின் மக்களும் போராடத் தயாராகி வருகிறார்கள். ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டத்தில் புதிய விமான நிலையத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய அந்த மக்கள், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது பன்னூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக சர்வே பணிகள், மண் பரிசோத னைகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், அந்தப் பகுதியில் முக்கிய அரசியல் புள்ளிகள் சிலர் நிலங்களை வாங்கிக் குவித்திருப்பதால் அங்கே விமான நிலையம் அமைக்கும் திட்டம் பாதியில் கைவிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.என்.இளங்கோ, “புதிதாக விமான நிலையம் அமையும் பகுதி விவசாயத்தையே முழுமையாக நம்பி இருக்கிற கிராமங்கள் அடங்கிய பகுதி. காலங்காலமாக விவசாயம் தான் எங்களுக்கு பிழைப்பு. விமான நிலையத்துக்காக கையக்கப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகளைக்கூட புறம்போக்கு நிலமாகக் காட்டுகிறார்கள். கிணறு வெட்டினால் இந்தப் பகுதிகளில் பத்து அடியிலேயே தண்ணீர் வரும். ஒவ்வொரு ஏரியும் சங்கிலித் தொடர்போல அமைந்திருக்கிறது. இங்கு விமான நிலையம் வந்தால் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு குறைவாக இருப்பதால் இங்கு விமான நிலையம் அமைப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கிறார்கள். இந்த நிலத்தை நாங்கள் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். வீட்டுமனையாக விற்பனை செய்திருந்தால் இதன் வழிகாட்டி மதிப்பும் கூடியிருக்கும். மக்கள் வசிக்காத தரிசு நிலத்தில் விமான நிலையம் அமைத்தால் தப்பில்லை. ஆனால், விளைநிலங்களை அழித்துவிட்டு அதை அமைப்பதுதான் தவறு. நாங்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடவில்லை. எங்களின் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பதற்கு எதிராகத் தான் போராடுகிறோம்.

இளங்கோ
இளங்கோ

பத்து நாட்களுக்கு முன்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசனையும், மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்தோம். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மனு கொடுத்தோம். ஆனால், நாங்கள் கொடுத்த மனுவை ரிஜெக்ட் செய்துவிட்டார்கள்.

இதன் பிறகுதான் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். அதுவரை, ‘எங்களுக்கு அரசு ஆணை வரவில்லை’ எனச் சொல்லிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் திடீரென மறுநாளே கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு எங்களை அழைத்தார். கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குச் சென்ற நாங்கள் பலமணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் வராததால் தமிழக அரசைக் கண்டித்துக் கோஷம்போட்டுவிட்டு வெளியேறினோம். அதன்பிறகு அங்கிருந்த சிலரை மட்டும் அழைத்து பேருக்கு கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். விமான நிலையத்தை எங்கு வேண்டுமானாலும் அமைத்துவிடலாம். ஆனால், எங்கு வேண்டுமானாலும் விவசாயம் செய்யமுடியாது என்பதை அதிகாரிகளும் ஆள்பவர்களும் உணரமாட்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தேவைக்கேற்ப விஸ்தரிப்பது அவசியம் தான். ஆனால் அதற்காக, மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விளைநிலங்களையும் நீர்நிலை களையும் அழித்துவிட்டுத்தான் அதை உருவாக்குவோம் என்று அடம்பிடிப்பது அத்தனை அழகல்லவே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in