கதிகலங்க வைக்கும் ’கிக்’ பொருளாதாரம்!

கதிகலங்க வைக்கும் ’கிக்’ பொருளாதாரம்!

அண்மையில் அதிகம் புழங்கும் சொல்லாக ‘கிக்’ மாறியிருக்கிறது. இது குறித்து ஆசிரியரும் எழுத்தாளருமான சுரேஷ் காந்தன் தனது முகநூல் பக்கத்தில் இட்ட பதிவு:

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, இந்த ஆண்டு இதுவரையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆங்கில வார்த்தைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கிக் எகானமி (Gig Economy) என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சின்னச் சின்ன வேலைகளை இங்கிலாந்தில் ‘கிக்’ என்று அழைக்கிறார்கள். குறிப்பிட்ட வேலையை மட்டும் பார்த்துவிட்டு அதற்குரிய பணம் மட்டும் பெற்றுக்கொண்டு கிக் பணியாளர் போய்விடுவார். அவர் எந்த நிறுவனத்திலும் முழுநேர ஊழியராக இருக்கமாட்டார்.

உதாரணமாக, நரிமேடு சிங்கம் அண்ணன் கடையில் பரோட்டா வாங்கி தல்லாகுளம் ஆறுமுகம் அண்ணன் கடை மிளகுக் குழம்பு ஊற்றிப் பிசைந்து... பிசைந்து என்ன பிசைந்து... குழப்பிச் சாப்பிட விரும்புகிறீர்கள். போனை எடுத்து அதற்கென இருக்கும் செயலியில் உங்கள் கோரிக்கையை உள்ளிட்டால், யாரோ ஒருவனோ அல்லது ஒருத்தியோ வந்து நீங்கள் விரும்பிய அந்த 2 உணவு வகைகளையும் உங்கள் வீட்டில் கொண்டுவந்து தந்துவிட்டு காசு வாங்கிக்கொண்டு போய்விடுவார்.

காலை 9 முதல் மாலை 5 மணிவரை வேலைகள் என்கிற கருத்து மெல்ல உடைபடத் தொடங்கி இருக்கிறது. எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது ஒரு வேலையைப் பார்த்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டு போய்விடுவது. இங்கிலாந்தில் தொடங்கிய இந்த வேலைக் கலாச்சாரம் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகெங்கிலும் பரவ ஆரம்பித்து இருக்கிறது. கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுயமாக வேலைசெய்ய விரும்புபவர்களும், ஒரு குறிப்பிட்ட வேலையைத் திறம்பட செய்துமுடிக்கும் ஒருவருக்கு அதற்கு மட்டும் ஊதியம் தந்தால் போதுமானது என்று நிறுவனங்களும் எண்ணத் தொடங்கியதன் விளைவே இந்த கிக் எகானமி. இதை ஃப்ரீலான்ஸ் எகானமி (Freelance Economy) என்றும் அழைக்கிறார்கள். தற்போதைக்கு ஐடி, சாப்ட்வேர், கல்வி, நிர்வாகம், கணக்கீடு, புராஜெக்ட்டுகள், எழுத்துத் துறை போன்ற துறைகளில் இந்த கிக் எகானமி வேகமாக வளர்ந்து வருகிறது.

- சுரேஷ் காந்தன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in