ஆசைப்பட்டால் இப்பவே வாங்கிடுங்க! : பொருளாதாரம் பேசுவோம்

ஆசைப்பட்டால் இப்பவே வாங்கிடுங்க! : பொருளாதாரம் பேசுவோம்

இந்தியாவின் மிக முக்கிய பொருளாதார பிரச்சினையாக Negative Real Interest Rate உருவெடுத்திருக்கிறது. முதலில், Real Interest Rate என்றால் என்ன என்று பார்ப்போம்.

நீங்கள் வங்கியில் வைப்புத் தொகை (fixed deposit ) கணக்கை தொடங்குகிறீர்கள். வட்டி விகிதம் வருடத்துக்கு 7 சதவீதம் என்று வைத்துக்கொள்வோம். அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு வருடத்துக்கு உங்களுக்கு ரூ.7,000 வட்டி கிடைக்கும். அதே ஒரு வருடத்தில் விலைவாசியும் ஏறி இருக்கும் இல்லையா? அந்த விலைவாசி ஏற்றம் பண வீக்க விகிதம் (inflation rate) என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, இப்போதைய பணவீக்க விகிதம் 5.5 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம்.

இந்நிலையில்,Real Interest Rate என்பது உங்களது வைப்புத் தொகை வட்டி விகிதத்திலிருந்து பணவீக்க விகிதத்தை கழித்தால் கிடைப்பது. மேற்சொன்ன உதாரணத்தின்படி, 7 சதவீத வட்டியில் இருந்து 5.5 சதவீத பண வீக்கத்தை கழித்தால் 1.5 சதவீதம் வரும். இதுதான் உங்கள் முதலீட்டுக்கான உண்மையான வட்டி விகிதம். வங்கிகள் கொடுக்கும் வைப்புத் தொகை வட்டி விகிதத்தை விட பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தால், அது Negative Real Interest Rate.

இப்போது, ஒரு வருடத்துக்கான வைப்புத் தொகை வட்டி விகிதம் 5 சதவீதம். இந்தியாவின் சராசரி பணவீக்க விகிதம் 5.3 முதல் 5.7 சதவீதம் வரை நிலவுகிறது.

கடந்த இரண்டரை வருடங்களாக, இந்தியாவில் இந்த வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் Real Interest Rate, மைனஸில் இருக்கிறது. அதாவது வைப்புத் தொகை வட்டி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. 2009-ல் இந்திய வங்கிகளில் 9 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் படிப்படியாகக் குறைந்து இப்போது 5 சதவீதமாக இருக்கிறது. மறுபக்கம் பணவீக்க விகிதம் ஏறிக்கொண்டே போகிறது.

கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் குறைவாக இருப்பது வசதியாக இருக்கும். சேமிப்பவர்களுக்கு இது கொடுங்காலம்தான்!

நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?

ஒரு அலைபேசி வாங்க நினைக்கிறீர்கள். உங்களிடம் ரு.20,000 இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சேமித்தால் இதைவிட நல்ல அலைபேசி வாங்கிவிடலாம் என்று எண்ணி, அதை வைப்பு நிதியில் செலுத்துகிறீர்கள். அதற்கான வட்டி 5 சதவீதம். ஒரு வருடத்தில் உங்களுடைய 20,000 வட்டியுடன் ரூ.21,000 ஆக மாறி இருக்கும்.

ஆனால், நீங்கள் வாங்க நினைத்த அலைபேசியின் விலை 5.7 சதவீத பண வீக்க விகிதத்தில் ரூ.21,140 ஆக ஏறி இருக்கும். எனவே, நீங்கள் வாங்க நினைத்த அலைபேசியும்கூட ஒரு வருடத்தில் விலை ஏறி இருக்கும். இந்த மாதிரி பொருளாதார சூழலில் நுகர்வை இப்போதே செய்வதுதான் நல்லது.

Negative Real Interest Rate இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளில் பெரும் பிரச்சினையாக கிளம்பியுள்ளது. கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் குறைவாக இருப்பது வசதியாக இருக்கும். சேமிப்பவர்களுக்கு இது கொடுங்காலம்தான்!

வைப்புத் தொகையில் இருந்து வரும் வட்டியை வைத்து வாழ்க்கை நடத்தும் எண்ணற்ற 'சீனியர் சிட்டிசன்கள்’ இருக்கிறார்கள். அவர்களின் நிதி நிலைமை பெரும் சவாலாக இருக்கும். இந்த நிலை 2022 வரை தொடரும் என்று சொல்கிறார்கள்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in