நலிவடைந்த எங்களுக்கும் நல்ல சேதி சொல்லுங்க!

அரசுக்கு கோரிக்கை வைக்கும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
நலிவடைந்த எங்களுக்கும் நல்ல சேதி சொல்லுங்க!

இன்றைக்கு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் மண்பாண்டங்களுக்கு இருந்த மதிப்பே தனி தான். சமையல் செய்வதற்கு மட்டுமல்லாது குடிக்க தண்ணீர் வைத்துக் கொள்ளவும், பொருட்களைப் போட்டு பாதுகாத்துவைத்துக் கொள்ளவும் மக்கள் பெருமளவில் மண் பாத்திரங்களையே பயன்படுத்தினார்கள். அந்தக் காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பாதுகாப்பாக கையாள முடியாதது, சற்று கவனக் குறைவாகப் பயன்படுத்தினாலும் உடைந்துவிடும் ஆபத்து உள்ளிட்ட காரணங்களால் மண்பாண்டங்களை ஒதுக்கிவிட்டு, அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் மக்கள். இதனால் 80‘களிலேயே மண்பாண்டங்கன் பயன்பாடு, மக்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின. இன்றைக்கும் கிராமங்களில் மண்பாண்டங்களைப் பயன்படுத்தும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அது மிகச் சொற்பமே.

பொங்கல் பண்டிகையின்போது, சில இடங்களில் பாரம்பரிய வழக்கப்படி மண் பானைகளில் பொங்கலிடும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. கிராமத்துக் கோயில்களில் மண் பானைகளில் தான் இன்னமும் பொங்கலிடுகிறார்கள். பூச்சட்டி எடுக்கும் மக்களும் மண் சட்டிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். புரவி எடுப்பு உள்ளிட்ட கோயில் திருவிழாக்களில் மண் குதிரைகள் செய்து வைத்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது. இதுபோன்ற தேவைகள் இருப்பதாலும், இன்னமும் சிலருக்கு மண்பாண்டப் பொருட்கள் மீது மரியாதை இருப்பதாலுமே இந்தத் தொழில் இன்னும் முற்றாக அழியாமல் தொடுத்துக் கொண்டு நிற்கிறது.

பரவலாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் கோவை, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கல்லக்குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தான் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இங்குதான் இந்தப் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இருப்பினும் உற்பத்திப் பொருட்கள் தேக்கம், போதிய வரவேற்பின்மை, குடும்ப வறுமை, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலில் நீடித்து வந்த பல குடும்பங்கள் இப்போது மாற்றுத் தொழில்களை நோக்கி நகர்ந்துவிட்டன. அதுவும் கரோனா காலம், இந்தத் தொழிலாளர்களையும் நலிவின் விளிம்புக்கே தள்ளிவிட்டது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றைரை லட்சம் பேர் மட்டுமே இந்தத் தொழிலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் எல்.ஐ.சி மருதாசலம் காமதேனு இணையத்திடம் பேசும்போது, “மண்பாண்டங்களில் சமையல் செய்தால் நோய் பாதிப்புகள் குறையும். உணவு வகைகள் சத்துள்ளதாகவும், எளிதில் கெடாமலும் இருக்கும். மண்பாண்டங்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு என்பது ஒரு கலை. ஒரு பானையைச் செய்வதற்கு குறைந்த பட்சம் 6 மணி நேரம் ஆகும். உடல் உழைப்பு என்று கணக்கிட்டால் வருமானம் குறைவுதான். இருந்தாலும் தொழிலை விடமுடியாமல் இன்னும் பல குடும்பங்கள் இந்தத் தொழிலில் இருக்கின்றன.

நாளுக்கு நாள் நசிந்து வரும் மண்பாண்ட தொழிலுக்குத் தோள்கொடுக்க அரசும் சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தலாம். பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பொங்கல் பொருட்களை இலவசமாக வழங்குவது போல் மண் பானை, சட்டி, மண் அடுப்பு உள்ளிட்டவைகளையும் இலவசமாக கொடுக்கலாம். அரசு அலுவலகங்கள், பள்ளி - கல்லூரி வகுப்பறைகள் போன்றவற்றில் மண் பானைக் குடிநீரை வைக்க வலியுறுத்தலாம். அதேபோல், மண்பாண்டங்களின் மகத்துவத்தை இப்போதுள்ள தலைமுறையினரும் அறியும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் இந்தத் தொழிலில் ஈடுபட ஊக்கப்படுத்தலாம். இப்படி யெல்லாம் செய்தால் பாரம்பரிய தொழிலாளான மண்பாண்ட தொழில் தமிழகத்தில் மீண்டும் செழித்து வளரும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in