பட்ஜெட்... பட்ஜெட் (பகுதி 1)

மினி தொடர்
பட்ஜெட்... பட்ஜெட் (பகுதி 1)

2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.31) தொடங்குகிறது. மத்திய அரசு தாக்கல் செய்யும் வருடாந்திர நிதி நிலை அறிக்கை என்பது அரசியல், பொருளாதார வட்டாரங்களுக்கு தீபாவளி – பொங்கல் போல முக்கியமான நாள். அவர்களுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள எல்லா துறைகளுக்கும் எல்லா பிரிவு மக்களுக்குமான பொருளாதார நாள் என்றும் அழைக்கலாம். இந்த நிதி நிலை அறிக்கை என்று அழைக்கப்படும் பட்ஜெட்டை, வரவு-செலவு திட்டம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுதான் என்றாலும் இதில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அநேகம். மத்திய பட்ஜெட்டைப் பற்றிய மினி தொடர் இது.

தமிழர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்

பட்ஜெட் தாக்கல் செய்வதில் கை தேர்ந்தவர்கள் தமிழர்கள். நாடு சுதந்திரம் அடைந்த உடன் முதல் நிதிநிலை அறிக்கையை அளித்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். இவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல, நீதிக்கட்சிக்காரர். காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தவர். நாடு சுதந்திரம் அடைந்தவுடன் அமையப்போகும் அரசு வெறும் காங்கிரஸ்காரர்களை மட்டுமே கொண்டதாக இருக்கக் கூடாது, தேசிய அரசாக அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். பூரண ஜனநாயகரான ஜவாஹர்லால் நேரு அதை ஏற்று அந்தப் பொறுப்பை தென்னிந்தியரான சண்முகம் செட்டியிடம் ஒப்படைத்தார். மத்திய அரசில் அவர் நிதி அமைச்சராக வேண்டும் என்ற வேண்டுகோளை, ராஜாஜி மூலம் சண்முகம் செட்டிக்குத் தெரிவித்தார் நேரு என்று ராமசந்திர குஹா தனது சமீபத்திய கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

பொருளாதார மாணவர்களுக்கு நிதிநிலை அறிக்கை தொடர்பாக பாடம் நடத்தும் கல்லூரிப் பேராசிரியர்கள், இந்தியாவின் முதல் ‘சமநிலை நிதிநிலை அறிக்கை’ ஆர்.கே. சண்முகம் செட்டியாருடையது மட்டுமே என்று சொல்ல மறக்கமாட்டார்கள்.

ஆர்.கே. சண்முகம் செட்டி, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன், ப. சிதம்பரம் இப்போது நிர்மலா சீதாராமன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் நிகழ்வு

பட்ஜெட் வாசிக்கப்படும்போது எதிர்காலம் பொன்மயமாகிவிடும் என்றே தோன்றும். நிதி நிலை அறிக்கையில் அரசுக்கு வரும் வருவாய் குறித்தும், அரசு செய்ய உத்தேசித்துள்ள செலவுகள் குறித்தும் புள்ளிவிவரங்களோடு தகவல்கள் இருக்கும். அத்துடன் அரசு புதிதாக அமல்படுத்தவிருக்கும் திட்டங்கள், கடைப்பிடிக்கப்போகும் நிதி நிர்வாகக் கொள்கைகள் விளக்கப்படும். கைவிடப்படும் வரி விகிதங்கள், நடைமுறைகள், கொள்கைகள் ஆகியவையும் தெரிவிக்கப்படும். எனவே விவசாயம், தொழில், சேவைப்பிரிவு, கல்வி, குடும்பத் தலைவிகள், ராணுவம், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, போக்குவரத்து, ரயில்வே துறை, கல்வி நிலையங்கள் என்று அனைத்துத் தரப்பினருமே இதை ஆர்வத்துடன் அல்லது ஒருவித அச்சத்துடன் எதிர்பார்ப்பார்கள். மத்திய தர வர்க்கம் பெரும்பாலும் வருமான வரிச் சலுகையை எதிர்பார்த்தே ஏமாந்து போகும்.

பதுக்கலுக்கும் வழிவகுக்கும்

பட்ஜெட்டுக்குப் பிறகு வரி விதிப்புகளால் பொருட்களின் விலை உயரும் என்பதால் வியாபாரிகள் முக்கியமான பொருட்களைப் பதுக்கிவிடுவார்கள். இதனால் பட்ஜெட்டுக்குச் சில நாட்களுக்கு முன்பிலிருந்தே சில பொருட்கள் சந்தையில் காணாமல்போய்விடும். இதில் முக்கிய இடம் பிடிப்பவை சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள். புகையிலை உடலுக்குக் கெடுதல் என்பதாலும் அதைப் பழகிவிட்டவர்கள் அதன் விலை எவ்வளவு உயர்ந்தாலும் வாங்கிவிடுவார்கள் என்பதாலும் அதன் மீது வரியை உயர்த்திக்கொண்டே செல்வது வழக்கம். வரி விதிக்கும்போது மூன்றுவித அணுகுமுறைகளைக் கையாள்வார்கள். ஏழை மக்கள் அல்லது பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், நவதானியங்கள், சமையலுக்கு இன்றியமையாத பொருட்கள், அனைவரும் அணியும் ஆடைகளுக்கான பருத்தித் துணி, துணியைத் தயாரிக்க உதவும் நூல் போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிப்பார்கள் அல்லது வரி விகிதத்தை மிகவும் குறைவாக வைத்திருப்பார்கள். மக்களுக்கு மிகவும் அவசியமல்லாத அல்லது உடலைக் கெடுக்கக் கூடிய மதுபானம், சிகரெட்-பீடி-சுருட்டு உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் போன்றவற்றுக்கு வரியை அதிகப்படுத்திக்கொண்டே வருவார்கள். மக்களால் ஒரேயொருமுறை வாங்கப்படும் நுகர்பொருள் என்று கருதும் மின்சார சாதனங்கள், மின்னணு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள் போன்றவற்றுக்கு அவற்றின் விலை மதிப்பு அடிப்படையில் வரி விதிப்பார்கள். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்குப் பெரும்பாலும் வரி விதிக்கமாட்டார்கள். உலகச் சந்தையில் இந்தியப் பொருட்கள் போட்டி போட அவற்றின் விலை, வெளிநாட்டவர்களால் வாங்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதால் வரி விதிக்க மாட்டார்கள். அதே வேளையில் இந்தியாவிலேயே நுகர்வுக்குத் தேவைப்படும் பொருள் என்றால் அது முழுக்க ஏற்றுமதியாகி இங்கே தட்டுப்பாடு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்றுமதி மீதும் சில தருணங்களில் வரி விதிப்பார்கள். அதுமட்டுமல்லாது சில பொருட்களை வாங்கிப் பழகிய வெளிநாட்டவர்களால் அதைத் தொடர்ந்து வாங்காமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகு, வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காக ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது வரியை உயர்த்துவார்கள்.

இறக்குமதிக்கு வரி

இறக்குமதியாகும் பொருட்கள் இந்தியாவில் நேரடி நுகர்வுக்கான உணவுப் பொருளாகவோ, உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப் பொருளாகவோ துணைப் பொருளாகவோ இருக்கும்பட்சத்தில் அதற்கு வரி விதிக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே அது தயாராகிறது எனும்போது வெளிநாட்டிலிருந்து விலை மலிவாக இறக்குமதி செய்து அதை விற்றால், இந்தியப் பொருளின் விலைக்குச் சமமாக வரும்படி அதன் மீது வரி விதிப்பார்கள். இது விலையைச் சமன் செய்யும் வரி என்று அழைக்கப்படும். அதிக விலையாக இருந்தாலும் வெளிநாட்டுப் பொருள் தரமானதாக இருந்தால் அவற்றை வாங்குவதை நம்மவர்கள் நிறுத்த மாட்டார்கள். சீனா போன்ற நாடுகள் சில வேளைகளில் இந்திய சரக்குகளுக்கு சந்தை இருக்கக்கூடாது என்று நினைத்தோ அல்லது தங்களுக்கு அரிய அந்நியச் செலாவணி வேண்டும் என்பதற்காகவோ விலையை ஒரேயடியாகக் குறைத்து விற்றால் அதன் மீது ‘பொருள் குவிப்பு தடுப்பு வரி’ விதிப்பார்கள்.

மத்திய அரசு வசூலிக்கும் வரிகள் சில மாநிலங்களால் வசூலிக்கப்பட முடியாதபடி அரசியல் சட்டத்திலேயே மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல்கள் பிரிக்கப்பட்டுவிட்டன. தொழில் நிறுவனங்கள் மீதான நிறுவன வரி (கார்ப்பரேட் டேக்ஸ), தனிநபர் வருமான வரி (இன்கம் டேக்ஸ்), சுங்க வரி (கஸ்டம்ஸ் டூட்டி), உற்பத்தி வரி (எக்சைஸ் – கலால்) போன்றவை மத்திய அரசு மட்டுமே விதிக்கும் உரிமையுள்ள இனங்கள். வரி ஏய்ப்பு என்பது சட்டப்படி குற்றம். ஆனால் எல்லா வரிகளையும் ஏய்க்கும் பழக்கம் மக்களிடமும் அந்தந்த துறைகளிலும் தொடர்கிறது. வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால் ரொக்க அபராதம் சிறைத்தண்டனை இரண்டும் உண்டு. ஆனால் இந்த தண்டனையும் அபராதமும் போதுமானதாக இல்லாததால் அப்படி பிடிபடும்போது அபரதாம் கட்டுவதையும் கூடுதல் வரியாகவே நினைக்கும் போக்கும் இருக்கிறது.

(பட்ஜெட் ரகசியம்...நாளை)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in