அமேசானுக்கு ரூ.202 கோடி அபராதம்

அமேசான் - ப்யூச்சர் - ரிலையன்ஸ் விவகாரத்தில் அடுத்தகட்டம்
அமேசானுக்கு ரூ.202 கோடி அபராதம்
அமேசான்

சர்வதேச மின் வணிக நிறுவனமான அமேசானுக்கு, இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம்(சிசிஐ), ரூ.202 கோடி அபராதம் விதித்துள்ளது.

2 வருடங்களுக்கு முன்னர் ப்யூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் சிசிஐ அனுமதியுடன், அமேசான் நிறுவனம் முதலீடு மேற்கொண்டது. அப்படி அனுமதி பெறுவதற்காக, அந்நிய செலாவணி தொடர்பான சில விதிமீறல்களை அமேசான் மேற்கொண்டதாகவும் அவற்றை சிசிஐ வசம் மறைத்ததாகவும் பின்னர் குற்றச்சாட்டு எழுந்தது. அவை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிசிஐ, அமேசானின் விதிமீறல்களை உறுதி செய்தது.

சிசிஐ
சிசிஐ

இதையடுத்து ப்யூச்சர் உடனான அமேசானின் ஒப்பந்ததை தற்போதைக்கு ரத்து செய்வதுடன், 2 மாத அவகாசத்தில் முழுமையான படிவத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் வெவ்வேறு விதிமீறல்களுக்காக ரூ.200 கோடி மற்றும் ரூ.2 கோடி என, மொத்தம் ரூ.202 கோடி அமேசானுக்கு அபராதம் விதித்துள்ளது.

சிசிஐ உத்தரவின் மூலம் அமேசான் - ப்யூச்சர் - ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான விவகாரம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. 2019-ல் நட்டத்திலிருந்த ப்யூச்சர் நிறுவனத்துக்கு உதவும் வகையில் சிசிஐ அனுமதியுடன் அமேசான், ப்யூச்சர் நிறுவனத்தில் முதலீடு செய்தது. ஒரு வருடம் கழித்து ரிலையன்ஸ் நிறுவனம், ப்யூச்சரை வாங்க முயன்றபோது, அமேசானின் முந்தைய பங்கு முதலீடு பிரச்சினையானது. அமேசான் -ரிலையன்ஸ் இடையிலான மோதலில், ப்யூச்சர் நிறுவனம் ரிலையன்ஸ் பக்கம் நின்றது.

ரிலையன்ஸ்-ப்யூச்சர் இடையிலான ஒப்பந்தத்தை தடை செய்யுமாறு இதற்கான விவகாரங்களை கையாளும் சிங்கப்பூரிலுள்ள சர்வதேச நடுவர் மையத்திலும், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் அமேசான் வழக்கு தொடுத்தது. அமேசானுக்கு ஆதரவாக சிங்கப்பூரிலும் தொடர்ந்து இந்தியாவிலும் தீர்ப்புகள் வெளியாயின.

இந்நிலையில் தற்போதைய சிசிஐ உத்தரவின் மூலம் அமேசான் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமேசான், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், ’இந்த உத்தரவின் வாயிலாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை சமிக்ஞைகளை சிசிஐ தந்துள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in