கால் வாரியதா எல்ஐசி ஐபிஓ?

தள்ளாடும் சந்தையும், தவிக்கும் முதலீட்டாளர்களும்!
கால் வாரியதா எல்ஐசி ஐபிஓ?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாட்டின் மிகப்பெரும் பங்கு வெளியீடாக, இன்று இந்திய பங்கு சந்தைகளில் வலதுகால் வைத்தது எல்ஐசி ஐபிஓ. நிலைகுலைந்து கொண்டிருக்கும் சந்தையின் போக்கினை மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ, முதலீட்டாளர்களின் நம்பிக்கைகளுக்கு காப்பு தந்திருக்கிறதா? எல்ஐசி பங்கின் எதிர்காலம் என்னாகும்? தள்ளாடும் பங்கு சந்தை எப்போது மீளும் உள்ளிட்ட கேள்விகளும் இதனையொட்டியே எழுந்திருக்கின்றன.

சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலையே நிலவி வருகிறது. உக்ரைன் மீதான் ரஷ்யாவின் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, எகிறிய பணவீக்கம், கரோனா காரணமாக நசிவிலிருந்து மீளாத தொழில்துறை என ஏராளமான அம்சங்கள் இந்த சர்வதேச மந்த நிலையின் பின்னிருக்கின்றன.

கரோனா பொதுமுடக்க காலத்தின்போதுகூட விழுந்து மீண்ட இந்திய பங்கு சந்தைகள், தற்போதைய சர்வதேச காரணிகளால் நிலை தடுமாறி வருகின்றன. இவற்றுக்கு அப்பால், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் கொந்தளிப்பான அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளும், இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்மறை கணிப்புகளை விதைத்து வருகின்றன.

ரஷ்யாவின் போர் தொடுப்பு, அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட இந்தியாவுக்கு வெளியிலான காரணங்களால், கடந்த சில மாதங்களாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களின் இருப்புகளை விற்று வெளியேறத் தொடங்கினார்கள். உள்நாட்டு முதலீட்டாளர்களின் அகலாத நம்பிக்கைகளே இந்திய சந்தையை சரிவிலிருந்து காப்பாற்றி வந்தன.

இவற்றின் மத்தியில் இந்திய ஐபிஓ வரலாற்றில் பெரும் பாய்ச்சலான எல்ஐசி குறித்த எதிர்பார்ப்பும் இந்திய சந்தைகளுக்கு மேலும் உரமூட்டின. ஆனால், பங்கு வெளியீட்டு நாளான இன்று (மே 17), முதலீட்டாளர்களை ஏமாற்றி இருக்கிறது எல்ஐசி.

எதிர்பார்ப்புகள் மட்டுமன்றி பல தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், எல்ஐசியின் பங்கு சந்தை பிரவேசம் குறித்து வெகுநாளாக விவாதிக்கப்பட்டு வந்தது. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, விரிவாக்கம், எதிர்காலத்திட்டம் உள்ளிட்டவற்றுக்கே பெரும்பாலும் அவற்றின் பங்குகள் பொதுவெளிக்கு வரும். ஆனால், மத்திய அரசின் தேவைக்காக எல்ஐசியின் பங்குகள் வெளியிடப்படுவது குறித்து ஆட்சேபங்களே அதிகம் எழுந்தன.

எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி திரட்டலாம் முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்வதேசளவில் நிலவிய எதிர்மறை போக்கினால், பின்னர் அவை 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டன. இந்த வகையில் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட முடிவானது. பங்கு வெளியீட்டின் விலைப்பட்டையானது ரூ.902 - ரூ.949 என வரையறுக்கப்பட்டது.

இதில் எல்ஐசி நிறுவன ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு என தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பெருமளவிலான முதலீட்டாளர்கள் பங்கு சந்தை பக்கம் ஒதுங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்திய பங்கு சந்தையை அலைக்கழிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கடிவாளமிட, உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் சந்தைக்குள் நுழைந்தாக வேண்டும். இதற்கு எல்ஐசி போன்ற அரசின் பின்புலமும், வெகுஜனத்தின் நம்பிக்கையும் பெற்ற நிறுவன ஐபிஓக்கள் பெரும் திறப்பாக வழி செய்யும்.

வெண்கலக் கடை யானையாக இந்திய பங்கு சந்தை வரலாற்றில் இதற்கு முன்னதாக அதிர்வுகளை ஏற்படுத்திய ரிலையன்ஸ் பவர், ஜிஐசி, எஸ்பிஐ கார்டு, பேடிஎம் போன்ற மிகப்பெரும் ஐபிஓக்களின் சாதனையை எல்ஐசி ஐபிஓ முறியடித்தது. ரூ.18,300 கோடி மதிப்பில் கடந்தாண்டு வெளியான பேடிஎம் பங்கு வெளியீட்டின் சாதனையை ரூ.21 ஆயிரம் கோடிக்கான எல்ஐசி தற்போது முறிடித்திருந்தது.

எதிர்பார்த்தது போலவே எல்ஐசிக்கான பங்கு கோரி குவிந்த விண்ணப்பங்களும் புதிய சாதனை படைத்தன. சுமார் 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்ததில், நிராகரிக்கப்பட்ட பல லட்சம் விண்ணப்பதாரர்கள், பட்டியிலப்படும்போது பங்கின் விலையேற்றத்துக்கு காரணமாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பங்கு வெளியீட்டுக்கு முன்பான, நிழல்சந்தையின் கணிப்புகள் எதிர்மறையில் விழுந்தன.

உக்ரைன் போர் தொடங்கியது முதலே சர்வதேச பொருளாதார இழுபறிக்கு இந்திய சந்தைகளும் அலைபாய்ந்து வருகின்றன. சாண் ஏறி முழம் சறுக்கிய கதையாக பல நாள் சரிவு ஒரு நாள் உயர்வு என நிச்சயமற்ற தன்மை இந்திய சந்தைகளை படுத்தி வந்தன. பெரும்நிறுவன காலாண்டு முடிவுகளின் ஏமாற்றம், ரிசர்வ் வங்கி அறிவித்த கடன்களுக்கான வட்டி விகித உயர்வு, தொடரும் எரிபொருள் விலை உயர்வு, அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை சுற்றி வளைத்து சந்தையை பதம் பார்த்தன. இதனால் எல்ஐசியின் வெளியீடு ஏமாற்றமளிக்கும் என்றே பங்குசந்தை வல்லுநர்கள் கடந்த சில நாட்களாகவே ஆருடம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து ’க்ரே மார்க்கெட்’டிலும் எல்ஐசியின் விலை சரிந்தே கிடந்தது.

அதற்கேற்ப எல்ஐசி பங்கின் விலை அதன் வெளியீட்டு நாளான இன்று சுமார் 9 சதவீதம் வரை சரிவு கண்டது. முதலீட்டாளர் மத்தியில் ஐபிஓ விண்ணப்பத்துக்கு அதிகரித்த ஆர்வம், பட்டியலிடப்பட்டபோது நீர்த்துப் போயிருந்தது. ஆனபோதும், தேசத்தின் மிகப்பெரும் நிறுவனத்தின் நுழைவால், பங்குச் சந்தைகள் சுமார் 2.63 சதவீதம் வரை உயர்வு கண்டன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் அதிகபட்சமாக 54,014 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 16,168 புள்ளிகளும் அதிகபட்சமாக உயர்ந்தன. ஆனால், தனிப்பட்ட வகையில் எல்ஐசி தனது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே தந்திருக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் 949 என்ற அறிமுக விலையிலிருந்து, 860 வரை சரிந்த எல்ஐசி, அதிகபட்சமாக 920 வரை உயர்ந்தது. வர்த்தக நாளின் முடிவில் 875ல் முடிவடைந்திருக்கிறது.

நாட்டின் மிகப்பெரும் ஐபிஓ என்ற இடத்தை இதற்கு முன்னதாக வகித்திருந்த பேடிஎம், கடந்தாண்டு பட்டியிலிடப்பட்டபோது அதன் நிறுவனரான விஜய் சேகர் சர்மா ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பேடிஎம் ஐபிஓ ஒதுக்கீடு பெற்றவர்கள் அதிர்ஷ்டம் கிட்டியதாக இறுமாந்திருந்தனர். ஆனால், அடுத்தடுத்த சரிவுகளில் சுமார் 60 சதவீதம் வரை பங்கு மதிப்பு சரிந்ததில் தற்போது முதலீட்டாளர்களை கண்ணீரில் தள்ளியிருக்கிறது பேடிஎம்.

பேடிஎம்மை விட அளவில் பெரிய ஐபிஓ என்ற சாதனையுடன் களமிறங்கியிருக்கும் எல்ஐசி, முதல் நாளைப் பொறுத்தவரை தன்னை நம்பியவர்களுக்கு ஏமாற்றமே தந்திருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமான சந்தையின் உயர்வுக்கு இதர காரணங்களுடன் எல்ஐசியும் சேர்ந்திருக்கிறது. இதன் மூலம் இனிவரும் நாட்களிலும் இந்தப் போக்கு தொடருமா, எல்ஐசி மீதான நம்பிக்கையும் சந்தையின் எழுச்சியும் மீளுமா என்ற எதிர்பார்ப்பையும் எல்ஐசி விதைத்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in