குழந்தைகள் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்!

குழந்தைகளின் திடமான எதிர்காலத்துக்கு திட்டமிடுவோம் வாருங்கள்!
குழந்தைகள் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீடுகள், பள்ளி வளாகங்கள், சிறப்பு நிகழ்வுகள் வாயிலாக இனிப்புகள், பரிசு பொருட்களுடன் குழந்தைகளை மகிழ்வித்து வருகிறோம். ஆனால் குழந்தைகளுக்கான தினம் என்பது ஒரு நாளில் தீர்வதல்ல. அனுதினமும் தொடர்வது. வீட்டுக்கும் சமுதாயத்துக்கும் நலம் பயக்கும் எதிர்கால தூண்களை திடமாக கட்டமைக்க இந்த நாளில் திட்டமிடவும் செய்யலாம்.

குழந்தைகளின் வளர்ப்பு, படிப்பு, ஆரோக்கியமான எதிர்காலம் என சகலத்திலும் பொருளாதாரம் என்பதே முதுகெலும்பாக நிற்கிறது. இதற்கு நெம்புகோலாக சேமிப்பு, முதலீடு, காப்பீடு என பல உபாயங்கள் காத்திருக்கின்றன.

சேமிப்பு

குழந்தைகளின் சிறுபிராயம் தொட்டே அவர்களின் பெயரில் சேமிக்கத் தொடங்கலாம். அப்படி சேமிக்கும் தொகை சிறுதுளியாக இருப்பினும் நீண்டகால பயணத்தில் பெரும் வெள்ளமாக உருவெடுக்கும். குழந்தைகளின் சிறு பிராயம் என்பது பெற்றோருக்கும், இளம் வயது, சம்பாதித்தியம், குறைவான குடும்ப செலவுகள் என சேமிப்புக்கு உகந்த காலமாக இருக்கும். மாதம் ஒரு தொகை என வங்கி மற்றும் அஞ்சலகங்களில் எளிமையாக சேமிப்பை தொடங்க அநேக வழிகள் இருக்கின்றன.

அவற்றில் உன்னதமானது அஞ்சலகங்கள் வழங்கும் பொன்மகள் மற்றும் பொன்மகள் சேமிப்பு திட்டங்கள். இதில் செய்யப்படும் முதலீடு மற்றும் வருமானத்துக்கு வரி விலக்கு உண்டு என்பதோடு, கடன் பெறவும் வாய்ப்புண்டு. ஒப்பீட்டளவில் இதர சேமிப்பு திட்டங்களை காட்டிலும் அதிகப்படி வருமானத்தை பெறவும் இந்த திட்டங்கள் வழி வகுக்கின்றன. அருகிலுள்ள அஞ்சலக கிளையை நாடினால் மேலதிக விபரங்களை பெறலாம். குழந்தைகளுக்கான சேமிப்பு என்பது சிறுவயதில் தொடங்கி நீண்ட காலத்துக்கு தொடர்வதாக இருக்க வேண்டும். நம்பகமற்ற நிதி நிறுவனங்களை தவிர்ப்பதும் முக்கியம்.

முதலீடு

குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமண தேவைகளுக்கான திட்டமிடல் சேமிப்போடு முடிந்து விடுவதல்ல. நாம் உறங்கும் காலத்திலும் அவர்களுக்காக நாம் ஒதுக்கும் தொகை வளர்ந்தாக வேண்டும். அதற்கு முதலீட்டு உபாயங்களிலும் இறங்கியாக வேண்டும். போனஸ், திடீர் பண வரவு ஆகியவற்றில் கணிசமானதை குழந்தைகளின் எதிர்காலத்துக்கான முதலீடாக ஒதுக்கலாம். பெருந்தொகைகளை அவை கரைவதற்குள் நீண்ட கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது. சிறு தொகை எனில் மாதந்தோறும் அவற்றை தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிடலாம். இதர முதலீடுகளைவிட குழந்தைகளின் பெயரில் அவற்றை மேற்கொள்வது, அந்த முதலீடுகளை அநாவசியமாக கைவைக்கவோ, கரைக்கவோ நம்மை அனுமதிக்கவும் செய்யாது.

இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதித்திட்டங்கள் உதவும். ரூ100 என்பதில் தொடங்கி பங்குசந்தை சார்ந்த அல்லது சாராத திட்டங்களில் பெற்றோர் தம் விருப்பம் போல சேமிக்கலாம். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என்றே வடிவமைக்கப்பட்ட சிறப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை பங்கு சந்தையின் உயர்வையும் கடன் பத்திரங்களின் நம்பகத் தன்மையையும் கலந்து திட்டமிடப்பட்டிருக்கும். அதிகம் சம்பாதிக்கும் இளம் வயது பெற்றோர், நட்சத்திர பங்குகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம். பங்கு சந்தையின் அபாயங்களுக்கு உட்பட்டவை என்ற போதும் இவை வேறெந்த முதலீட்டு உபாயங்களை காட்டிலும் மிக அதிகமான ரிட்டர்ன் தருபவை.

திருமணம் உள்ளிட்டத் தேவைகளுக்காக தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், அவற்றை நடப்பு தேவைக்கு அப்பால் ஆபரணமாக வாங்குவதை தவிர்க்கலாம். செய்கூலி சேதாரம் என்று கணிசமான தொகை பறிக்கப்படுவதுடன், பொருளை பாதுகாப்பதிலும் அபாயகர நெருக்கடிகள் காத்திருக்கின்றன. எனவே தங்கத்தின் விலை சரியும்போதெல்லாம், இயன்ற அளவு டிஜிட்டல் தங்கத்தை வாங்கி நம் கணக்கில் இருப்பு வைக்கலாம். அரசு சார்பில் அறிமுகமாகும் இந்த பேப்பர் தங்கத்துக்கு காலக்கிரமத்தில் உரிய வட்டியும் கிடைக்கும். முதலீட்டின் முதிவு காலத்தில் தங்கமாகவோ அதற்கு நிகரான சொக்கமாகவோ பெறவும் வசதியுண்டு.

காப்பீடு

சேமிப்பு, முதலீடு ஆகியவற்றைக் காட்டிலும் முதன்மையானது காப்பீடு. பெரியவர்களின் எதிர்பாரா சூழலில் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை தவிர்க்கவும், குடும்பம் நிர்க்கதியாவதை தவிர்க்கவும் குடும்பத் தலைவர்கள் ஆயுள் காப்பீடு பெறுவது அவசியம். தமது வருமானம், குடும்பத்தின் தேவை ஆகியவற்றைப் பொறுத்து லட்சங்களில் தொடங்கி கோடிகளில் காப்பீடு பெறலாம். முதலீடு அல்லது காப்பீட்டு நடைமுறைகள் கலக்காத தூய ஆயுள் காப்பீடு எடுப்பதே சிறந்தது. அந்த வகையில் ப்ரீமியம் மிகக்குறைவு என்பதால், அதிக காப்பீடுக்கும் நம்மால் திட்டமிட முடியும். அதே போல காப்பீடு என்பதில் பங்கு சந்தை சார்ந்த திட்டங்களை தவிர்ப்பதும் நல்லது.

அடுத்தபடியாக குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமணம் என்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் காப்பீட்டு திட்டங்களை பரிசீலிக்கலாம். குழந்தைகளின் உயர்கல்வி காலங்களில் ஆண்டுதோறும் ஒரு பெருந்தொகை கிடைக்குமாறும், திருமண வயதில் முதிர்வு தொகை பயனளிக்கும் வகையிலும் இவை அமைந்திருக்கும். மேலும் ப்ரிமியம் கட்டும் பெற்றோர் விபத்து, நோய்வாய்ப்படுதல் உள்ளிட்ட எதிர்பாரா சூழல்களுக்கு ஆளாகும்போது, காப்பீட்டு நிறுவனமே எஞ்சிய ப்ரீமிய தவணைகளை கட்டும் அனுகூலமும் இதில் பொதிந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in