இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னால் நிதியமைச்சகம் தயாரித்த ஆண்டுப் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.31) தாக்கல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று அது தெரிவிக்கிறது. ஆனால் இது 9.2 சதவீதமாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க நேர்ந்ததால் இந்த வளர்ச்சி குறைந்திருக்கிறது. அதேவேளையில், நம்பிக்கை ஊட்டும் தகவல்களை அதிகம் கொண்டிருக்கிறது இந்த ஆய்வறிக்கை.

உலக அளவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்ததாலும் பல நாடுகளில் போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவு சரிந்துவிட்டதாலும் உலக வாணிபமும் சரிந்தது. அதனால் அதையொட்டிய தொழில் துறை உற்பத்தி, சேவைத் துறையின் செயல்கள் சுருங்கின. உற்பத்திக்குத் தேவைப்படும் பல மூலப் பொருட்கள் கிடைக்காமல் மோட்டார் வாகனத் துறை, கணினி – செல்போன் தயாரிப்புத் துறைகள் உற்பத்தியிழப்பைச் சந்தித்தன.

நோய்த்தொற்று அச்சம் காரணமாக விமானப் போக்குவரத்து வெகுவாகக் குறைக்கப்பட்டதால் பல நாடுகளில் சுற்றுலா, ஹோட்டல் துறை உள்ளிட்ட விருந்தோம்பல் துறைகள் படு வீழ்ச்சி கண்டன. அத்தியாவசியப் பண்டங்களுக்கு தேவை அதிகரித்ததால் அவற்றின் விலையும் அதிகரித்தது. அதனால் உலகின் பெரும்பாலான நாடுகள் விலைவாசி உயர்வையும் தட்டுப்பாட்டையும் சந்தித்து வருகின்றன.

பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கச்சா பெட்ரோலிய உற்பத்தியைக் கட்டுப்படுத்தியும் - விலையை உயர்த்தியும் தங்களுடைய நிதியிழப்பைக் குறைக்க முற்படுவதால் சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பண்டங்களின் விலை அதிகரிப்பாலும் விலைவாசி மேலும் உயர்ந்து வருகிறது. கச்சா பெட்ரோலிய எண்ணெய் இப்போது ஒரு பீப்பாய் 90 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இது சற்று குறைந்து அடுத்த நிதியாண்டில் 70 முதல் 75 டாலர்களாக நிலைபெறக்கூடும் என்று ஆய்வறிக்கை எதிர்பார்க்கிறது.

ஒமைக்ரான் பரவலும் அதிகரித்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல் காரணமாக, பல நாடுகளின் மத்திய வங்கிகள் செலாவணியைத் தேவையில்லாமல் புழக்கத்தில் விடுவதைத் தடுக்க, வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன. இந்தியாவில் பேரியியல் பொருளாதார அம்சங்கள் நிலையாகவும் வலுவாகவும் அதிர்ச்சிகளைச் சமாளிக்கும் வகையிலும் உள்ளன. எனவே மேலும் புதிதாக ஏதேனும் பொருளாதார அழுத்தங்கள் ஏற்பட்டாலும் ஒரேயடியாக நொறுங்கிப் போகாமல் எதிர்கொள்ளும் திறன் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெவ்வேறு துறைகளின் மீட்சிக்கும், பொருளாதார நடவடிக்கைகள் தொய்வடையாமல் தொடரவும் எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளால் அதிக பாதிப்புகள் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களையும் உணர்த்தும் எண்பது உயர்வேக அடையாளமானிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தொழில் துறை, சேவைத் துறை, விவசாயம் ஆகிய மூன்றிலும் உற்பத்தி, விநியோகம், வேலைவாய்ப்புகளுக்குத் தடையாக உள்ள அம்சங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பெருந்தொற்று பரவிய வேகம், அளவு காரணமாக 2020-21 ஆண்டில் முழு அளவுக்குப் பொதுமுடக்க நடவடிக்கைகள் அமலில் இருந்தன. பொதுமுடக்கம் நீக்கப்பட்ட பிறகு பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக மீட்சி அடைந்து வருகின்றன. சர்வதேசத் தொடர்புள்ள துறைகள் பலவற்றில் இன்னமும் மீட்சி ஏற்படவில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் இழந்த வேலைவாய்ப்புகள் முழு அளவுக்கு மீண்டும் ஏற்பட்டுவிடவில்லை. அதே வேளையில் வங்கிகள் மூலம் கடன், கடனுக்கு ஈட்டுறுதி, ஏற்றுமதிக்கு கடன், நிதியுதவி ஆகிய நடவடிக்கைகள் மூலம் துறைகள் மீட்சி அடைய அரசு உதவிக் கொண்டிருக்கிறது. தொழில், வர்த்தக நிறுவனங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வாராக்கடன் அறிவிப்பு நிபந்தனைகள் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுவோருக்கு மேலும் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் தவணை, வட்டி வசூல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்றுமதிக்கும் உற்பத்திக்கும் கடன், மானிய உதவிகள் அறிவிக்கப்பட்டன. வரி விகிதங்கள்கூட சில இனங்களில் கைவிடப்பட்டன அல்லது குறைந்த விகிதத்துக்கு மாற்றப்பட்டன.

வேளாண்மைத் துறையிலும் அதை சார்ந்த தொழில்களிலும் 2020-21-ல் 3.6 சதவீதமாக இருந்த வளர்ச்சி 2021-22-ல் 3.9 சதவீதமாக உயர்ந்தது.

எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய மாற்றுப்பயிர் சாகுபடிக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று ஆய்வு கருதுகிறது.

சுரங்கத் தொழில், கட்டுமானம் உள்ளிட்ட தொழில் துறையில் 2020-21-ல் 7சதவீதமாக இருந்த வளர்ச்சி 2021-22-ல் 11.8 சதவீதமாக உயர்ந்தது.

மனிதர்கள் நேரடியாகக் களத்தில் பணிபுரியும் சேவைத் துறைகளில் பொருளாதார சுருக்கம் அதிகமாகியது. பிறகு பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு தரப்பட்ட பிறகு அது மீட்சி பெற்றது. 2020-21-ல் அதற்கு முந்தைய ஆண்டைவிட 8.4 சதவீதம் அளவுக்கு சுருங்கிய அத்துறை, 2021-22-ல் 8.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமான பொருளாதார நுகர்வு 2021-22-ல் 7 சதவீதம் வளர்ச்சி கண்டது. இதற்கு மூலதனச் செலவுகளை மத்திய அரசு அதிகப்படுத்தியதும் ஒரு காரணம்.

தனிநபர்கள், நிறுவனங்களின் சேமிப்புகளிலிருந்து தொழில் துறையில் முதலீடு செய்யும் அளவு, பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பிருந்த நிலைமைக்கும் அதிகமாகவே இருக்கிறது.

ஏற்றுமதியானது 2021-2022 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மிக வலுவாக உயர்ந்திருக்கிறது. 2021-22-ல் 16.5 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதியும் அவ்வாறே பெருந்தொற்றுக்கு முந்தைய கால அளவுக்கு மீட்சி அடைந்திருக்கிறது. அதுவும் 29.4 சதவீதம் அளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

சமூகநலத் திட்டங்களுக்கான செலவு 9.8 சதவீதம் அதிகரித்து 2022 நிதியாண்டில் 71.61 லட்சம் கோடி ரூபாயாகியிருக்கிறது.

நடுத்தர வகுப்பினர் சொந்த வீட்டுக்காக வாங்கும் கடன் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நிலவிய அளவைவிட மிகவும் குறைவாகவே கடன் பெறப்படுகிறது. பெருந்தொற்று எப்படியிருக்குமோ, வேலை நிரந்தரமாக கிடைக்குமோ என்ற அச்சங்களால் நடுத்தர வகுப்பினர் சொந்த வீடுகளை வாங்கும் முடிவுகளை ஒத்திப்போடுகின்றனர்.

ரயில்வே துறை 2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் மட்டும் 65,157 கோடி ரூபாய் மூலதனச் செலவுகளை மேற்கொண்டது. இந்த நிதியாண்டுக்கு 2.15 லட்சம் கோடி ரூபாயைச் செலவிட ஒதுக்கியிருக்கிறது. 2014 அளவுடன் ஒப்பிடுகையில் இது நான்கு மடங்காகும். தேசிய வளர்ச்சியில் முக்கியப் பங்கை ரயில்வே இனி வரும் ஆண்டுகளில் அதிகப்படுத்தும். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பொருளாதாரக் கட்டமைப்பு நாடாக இந்தியா திகழ்கிறது.

புதிய தொழில்நுட்பம், புதிய தயாரிப்பு முறைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை டெல்லியில் 5,000 பெங்களூருவில் 4,514 ஆக அதிகரித்திருக்கிறது.

2021-ல் மட்டும் யூனிகார்ன் என்று அழைக்கப்படும் தனித்துவமான தொழில்நிறுவனங்கள் 44 தொடங்கப்பட்டுள்ளன. இது ஒரு சாதனை அளவாகும்.

2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 75 தொழில்நிறுவனங்கள் பொது மக்களுக்குப் பங்குகளை வெளியிட்டதன் மூலம் 89,066 கோடி ரூபாயை மூலதனச் சந்தையில் திரட்டின.

அந்நியச் செலாவணி கையிருப்பு, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, மூலதன முதலீடு ஆகியவற்றை அரசும் ரிசர்வ் வங்கியும் ஆதரவு நடவடிக்கைகள் மூலம் நிர்வகித்தன.

தேசிய பங்குச் சந்தையில் வணிகம் செய்யும் தனிநபர் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை இந்த பெருந்தொற்றுக் காலத்திலும் 44.7 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

பங்குப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்காகவென்றே புதிதாக டிமேட் கணக்குகளைத் தொடங்குவோர் எண்ணிக்கை 2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் 221 லட்சம் கூடியிருக்கிறது.

புதிய பங்குகள் விற்பனை மூலம் 1.81 லட்சம் கோடி திரட்டப்பட்டிருக்கிறது.

புதிதாக நெடுஞ்சாலைகள் அமைத்தல் (27%), ரயில்வே (25%), மின்சார உற்பத்தி (15%), எண்ணெய்-நிலவாயுக் குழாய் அமைத்தல் (8%), தொலைத்தகவல் தொடர்பு (6%) ஆகிய ஐந்து முன்னணித் துறைகள் மூலம் மட்டும் 83% அளவுக்கு புதிய திட்டங்களுக்காகச் செலவிடப்படவிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in