இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சம்

உலகளவில் அச்சுறுத்தும் பொருளாதார சுணக்கம் மற்றும் பங்குச் சந்தைகளின் தடுமாற்றத்துக்கு மாறாக, இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சம் தொட்டுள்ளன.

கச்சா எண்ணெய் விலையில் சரிவு மற்றும் பிரதான பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்தது உள்ளிட்ட சாதக அம்சங்களால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வு கண்டிருந்தன. இது அவற்றின் புதிய சாதனை உச்சத்தை அடையவும் காரணமானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 211 புள்ளிகள் உயர்ந்து நாளின் நிறைவாக 62,504 என்றளவில் முடிவடைந்தது. இதுவே தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 18,562 என்றளவில் முடிவுற்றது. கடந்தாண்டு அல்டோபரில் நிஃப்டி எட்டியிருந்த 18,604.45 என்ற உயர்வே முந்தைய சாதனையாக இருந்தது. தினசரி வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 407.76 புள்ளிகள் உயர்ந்து தினத்தின் உச்சமாக 62,701 என எகிறி இருந்தது.

சந்தைகளின் இன்றைய உயர்வுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 3.48% அதிகரித்தது முக்கிய காரணமானது. இத்துடன் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்செர்வ், நெஸ்லே, இண்டஸ்இந்த் வங்கி, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவையும் சந்தையின் உயர்வுக்கு காரணமாயின. மாறாக டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட முக்கிய பங்குகள் பின்தங்கியிருந்தன.

தொடர்ந்து உயர்வு கண்டு வரும் இந்திய பங்குச் சந்தைகள் அவ்வப்போது சர்வதேச காரணிகளால் சரிவு காண்பதும், பின்னர் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதுமான போக்கே இன்றும் தென்பட்டது. உலக பொருளாதாரத்தில் நீடிக்கும் மந்தம், உக்ரைன் போர்ச் சூழல், சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா ஆகியவற்றால் சர்வதேச சந்தைகள் ஊசலாட்டத்தில் தவிக்கின்றன. இவற்றுக்கு மந்தியில் இந்திய சந்தைகள் சாதனை படைப்பது இந்திய முதலீட்டாளர்களுக்கு திருப்தி தந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in