
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால் பங்குச்சந்தையை அது எந்தளவுக்கு பாதிக்கும் என சர்வதேச சந்தை நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ் வுட் என்பவர் உலகளாவிய பங்குச்சந்தை ஆலோசனை நிறுவனம் ஒன்றின் தலைவராக இருக்கிறார். இவர் கடந்த 2004 மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி, ஆட்சி மாற்றம் தொடர்பாக அளித்த முதலீட்டு ஆலோசனை அப்படியே பலித்தது. தற்போது மற்றுமொரு மக்களவைத் தேர்தல் சமீபத்தில், கிறிஸ் வுட் மீண்டும் திருவாய் மலர்ந்துள்ளார்.
2004 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக தோற்றால் இந்திய பங்குச்சந்தை சுமார் 25 சதவீதம் வரை சரியும் என கிறிஸ் வுட் கணிப்பு வெளியிட்டிருந்தார். அவர் சொன்னபடியே சந்தை 20 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. முதலீட்டார்களை அதிர வைத்த அந்த சரிவு, ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு, முந்தைய பாஜக அரசின் திட்டங்கள் தொடரும் என உறுதி அளித்த பிறகே படிப்படியாக மீண்டது.
தற்போது அதே போன்ற கணிப்பு ஒன்றினை கிறிஸ் வுட் வெளியிட்டுள்ளார். இதன்படி 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியுற்றால் இந்திய பங்குச்சந்தை 25 சதவீதம் வரை சரியும் என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார். ஆட்சி மாற்றம் நேரும் போதெல்லாம் பங்குச்சந்தையிலும் அதன் அதிர்வுகள் தென்படுவது வழக்கம். ஆனால் 25 சதவீதம் வரை சந்தை வீழ்வது முதலீட்டாளர்களை அச்சுறுத்தக்கூடியது.
இந்திய பங்குச்சந்தைகள் தற்போது வரலாற்று உச்சத்தை தொட்டு, இஸ்ரேல் போர் காரணமாக சரிவைக் கண்டுள்ளன. இது இந்தியாவுக்கு வெளியிலுள்ள காரணி என்பதால், இந்த சரிவிலிருந்து இந்திய பங்குச்சந்தைகள் விரைவில் மீண்டு விடும். ஆனால் ஆட்சி மாற்றம் தொடர்பான சரிவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் ஆளாவது, முதலீட்டாளர்களை வெகுவாய் பாதிக்கும். எனவே கிறிஸ் வுட் அடித்திருக்கும் எச்சரிக்கை மணி இந்தியாவில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறவது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!