FTX ரூ.8,000 கோடி ஏப்பம்?: கிறுகிறுத்து கிடக்கும் கிரிப்டோ உலகம்

FTX ரூ.8,000 கோடி ஏப்பம்?: கிறுகிறுத்து கிடக்கும் கிரிப்டோ உலகம்

உலகின் முன்னணி க்ரிப்டோ பரிமாற்ற மையமான ’எப்டிஎக்ஸ்’(FTX) திவால் நிலையை எட்டியுள்ளது. இதனால் அதில் தங்கள் முதலீடுகளை மீட்க முடியாது க்ரிப்டோ முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எப்டிஎக்ஸ் எதிரொலி சர்வதேச அளவில் க்ரிப்டோ சந்தையை மேலும் சரிக்கும் அபாயமும் நேரிட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாகவே க்ரிப்டோ உலகத்தில் ரத்தக்களரி நீடிக்கிறது. கரோனா காலத்தில் பெரும் வரவேற்பு பெற்ற க்ரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் படிப்படியாக தள்ளாட்டம் கண்டு வருகின்றன. பிப்ரவரி முதலே சரிவு காணத் தொடங்கிய க்ரிப்டோகரன்சிகளின் மதிப்பு, அடுத்த சில மாதங்களில் பாதிக்கும் மேலாக அடிவாங்கியது. க்ரிப்டோ சந்தையின் எழுச்சியால் கவரப்பட்டு புதிய எக்ஸ்சேஞ்சுகள் திறந்தவர்கள் பலரும் கடையை மூடிவிட்டு கிளம்பினார்கள். முதலீட்டாளர்களின் ஆதரவு பெற்ற பெரும் எக்ஸ்சேஞ்சுகள் மட்டுமே திடமாக நின்றிருந்தன.

இந்த சூழலில் உலகின் இரண்டாவது பிரம்மாண்ட க்ரிப்டோ எக்ஸ்சேஞ்சாக நீடித்த எப்டிஎக்ஸ் கலகலத்துப் போனது. முதலீட்டாளர்கள் மத்தியில் பரவிய பீதியால் இரண்டே நாளில் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலருக்கான முதலீடுகள் எப்டிஎக்ஸ் வசமிருந்து விலகின. இந்த நிலை நீடித்ததை அடுத்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பேங்க்மேன்-பிரைட் அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.

எப்டிஎக்ஸின் திவால் நிலையை சமர்ப்பித்துள்ள பேங்க்மேன், சட்டத்தின் பாதுகாப்பு கிடைத்தால் மட்டுமே முதலீடுகளை உரியவர்களுக்கு திருப்பி அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார். எப்டிஎக்ஸ் முடிவால் முதலீட்டாளர்களின் ரூ.8 ஆயிரம் கோடி இந்திய மதிப்பிலான க்ரிப்டோ முதலீடுகள் கேள்விக்குறியாகி உள்ளன. முன்னதாக முடங்கிய க்ரிப்டோ எக்ச்சேஞ்சுகளின் முதலீடுகள் அனைத்தும் மீட்க வழியின்றி இழுபறியில் இருப்பதும், முதலீட்டாளர்கள் கடும் உளைச்சலுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது

இதனிடையே சிஇஓ பதவியிலிருந்து பேங்க்மேன் நீக்கப்பட்டு அந்த பதவியல் ஜான் ஜே ரே என்பவரை நியமித்துள்ளது எப்டிஎக்ஸ் நிறுவனம். திவால் நிலையிலுள்ள நிறுவனங்களை மீட்பதில் அனுபவம் பெற்ற அவர் எப்டிஎக்ஸ் நிறுவனத்தையும் மீட்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் எப்டிஎக்ஸ் திவால் எதிரொலியால் க்ரிப்டோ சந்தையின் தள்ளாட்டம் மேலும் அதிகரித்துள்ளது. முறைப்படுத்தப்படாத க்ரிப்டோ சந்தையின் இருப்பும், அதன் முதலீடுகளும், அனைத்தையும் இயக்கும் நவீன தொழில்நுட்பமும் மீண்டும் விவாதங்களுக்கு ஆளாகி இருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in