தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குநரின் சொத்துகள் பறிமுதல்

பங்கு ஒதுக்கீட்டு முறைகேடு புகாரில் அமலாக்கத் துறை நடவடிக்கை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குநரின் சொத்துகள் பறிமுதல்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குநர் எம்ஜிஎம் மாறன் என்பவருக்கு சொந்தமான ரூ.293.91 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரூ.608 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, ரிசர்வ் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி சார்பில், அமலாக்கத் துறையிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறைகேடு 2007, 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்திருப்பதாகவும், முறைகேட்டில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியுடன், மும்பை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியும் இணைந்து ஈடுபட்டதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநரான எம்ஜிஎம் மாறன் என்கிற நேசமணி மாறன் முத்து, இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கியின் புகார் நீண்டது.

இதன் அடிப்படையில் ரூ.608 கோடிக்கு பங்கு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக, இந்த 2 வங்கிகள் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின்(ஃபெமா) கீழ் வழக்குப் பதிவு செய்து, 2 வங்கிகளுக்கும் அபராதம் விதித்தது. இந்த வகையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கிக்கு ரூ.100 கோடியும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.17 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டன.

எம்ஜிஎம் மாறன்
எம்ஜிஎம் மாறன்

இது தவிர்த்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறனுக்கு, ரூ.35 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை செலுத்தத் தவறினால் அடுத்த கட்டமாக சொத்துகளை முடக்குவது மற்றும் கைது நடவடிக்கைகள் பாயும் எனவும் அமலாக்கத் துறை எச்சரித்தது. இவற்றுடன் எம்ஜிஎம் மாறனுக்குச் சொந்தமான ரூ.293.91 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்தும் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கோண்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் இந்திய மதிப்பு அடிப்படையில், இந்த தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஎம் மாறன் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவராக இருந்தபோதும், சிங்கப்பூரில் முறைகேடாக முதலீடு செய்த பணத்துக்கு ஈடான இந்திய சொத்துகளை முடக்குவதற்கு சட்டம் வழிவகை செய்கிறது.

இதன்படி, ரூ.293.91 கோடியை நேர்செய்யும் வகையில் சதர்ன் அக்ரிஃபுரேன் இண்டஸ்ட்ரீஸ் பி.லிட்., ஆனந்த் டிரான்ஸ்போர்ட் பி.லிட்., எம்ஜிஎம் என்டர்டெயின்மென்ட் பி.லிட்., எம்ஜிஎம் டைமண்ட் பீச் ரிசார்ட்ஸ் பி.லிட்., என 4 நிறுவனங்களின் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

Related Stories

No stories found.