நாளை முதல் நிதி தொடர்பான விதிகளில் மாற்றம் ஏற்படப்போவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் நாளை தொடங்குவதால் நிதி தொடர்பான பல மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. வழக்கமாக சமையல் எரிவாயு விலை, வங்கிகளில் வட்டி விகிதம் உள்ளிட்ட மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் நாளை முதல் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
15 நாட்கள் வங்கிகள் மூடல்
நவம்பர் மாதம் அதிக நாட்கள் விடுமுறை வருவதால், பல்வேறு மாநிலங்களில் சனி, ஞாயிறு உட்பட 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே வங்கி தொடர்பான முக்கியமான வேலைகளை பட்டியலிட்டு திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
எரிவாயு சிலிண்டர் விலை
சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நாளை விலை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மாநிலத் தேர்தல் வருவதால் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதிக்கு விலக்கு
லேப்டாப்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. நவம்பரில் இது தொடர்பாக என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
மும்பை பங்குச் சந்தையின் முக்கிய அறிவிப்பு
மும்பை பங்குச் சந்தை கடந்த 20-ம் தேதி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. இது ஈக்விட்டி டெரிவேடிவ் பிரிவில் அதன் பரிவர்த்தனை கட்டணத்தை அதிகரிக்கப் போகிறது என்று தெரிவிக்கிறது. இந்த கட்டணங்கள் இது சில்லறை முதலீட்டாளர்களை அதிகம் பாதிக்கும்.
நாளை முதல் மேற்கொள்ளப்படும் இத்தகைய மாற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.