முகூர்த்த வர்த்தகம்: இன்று களைகட்டும் இந்தியப் பங்குச் சந்தைகள்

மாலை 6.15 - 7.15 இடையே நடைபெறுகிறது
முகூர்த்த வர்த்தகம்: இன்று களைகட்டும் இந்தியப் பங்குச் சந்தைகள்

பங்குச் சந்தையில் வருடந்தோறும் தீபாவளியன்று கூடும் முகூர்த்த வர்த்தகம், இன்று (நவ.4) மாலை நடைபெறுகிறது.

பன்முகக் கலாச்சார பின்னணி கொண்ட இந்தியாவில், தீபாவளி பண்டிகையை மாநிலத்துக்கு ஏற்றவாறு விதவிதமாய் கொண்டாடுகிறார்கள். புத்தாடை, பட்டாசு, பட்சணம், சினிமாவுக்கு அப்பாலும் தீபாவளி, பலவகையிலும் கவனம் பெறுகிறது. அந்த வகையில் முதலீடு செய்வதற்கான தருணமாகவும் தீபாவளி அனுசரிக்கப்படுகிறது.

தீபாவளியை ஒட்டி, முதலீடு மற்றும் சேமிப்பின் பொருட்டு சிறிதளவாவது தங்கம் வாங்குவது பலரின் வழக்கமாக இருக்கும். போனஸ், பண்டிகை செலவுகள் என கையில் புரளும் பணத்தை சற்று சேமிப்பு அல்லது முதலீட்டுக்கும் ஒதுக்குவது புத்திசாலித்தனமான முடிவாகக் கருதப்படுகிறது. வட இந்தியாவில், பங்குச் சந்தை முதலீட்டுக்கான தொடக்கத்தை தீபாவளியன்று மேற்கொள்வதை, இனிய தொடக்கமாக பாவிக்கிறார்கள். அன்றைய தினத்தில் ஏதேனும் பங்குகள் வாங்குவதை சடங்காக மேற்கொள்வார்கள். அல்லது ஏற்கனவே இருப்பில் உள்ள பங்குகளில் சிறிதளவை விற்று லாபம் பார்ப்பார்கள்.

மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் நுழையும் புதியவர்கள் மற்றும் வளர்ந்த வாரிசுகளின் பெயரில் முதலீடு செய்வதை இன்று சுப தினமாக கருதித் தொடங்குவார்கள். குழந்தைகள் வயதில் சிறியவர்கள் எனில், பெற்றோர் பெயரில் அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பங்கு பரிவர்த்தனையை குழந்தைகள் கையால் தொடங்கச் செய்வார்கள்.

இவர்களுக்காக ’முகூர்த்த வர்த்தகம்’ என்ற பெயரில், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் ஒரு மணி நேரத்துக்கு மட்டும் திறந்திருக்கும். பெயரளவிலான வணிகம் என்பதால், அதற்கேற்ப சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டெண்கள் சிறிதளவே மாற்றத்துக்கு உள்ளாகும். தீபாவளியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்றபோதும், இந்தச் சிறப்பு முகூர்த்த வணிகத்தை முன்னிட்டு, இன்று மாலை 6.15-க்கு தொடங்கி 7.15 முடிய ஒரு மணி நேரத்துக்கு மட்டும் பங்குச் சந்தைகள் செயல்படும்.

பணவீக்கத்துக்கு எதிராக திட்டமிட்ட முதலீட்டு ஆதாயத்தை அடைவதற்கு தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை என பல உபாயங்கள் உள்ளன. இவற்றில் பெருந்தொற்று காலத்திலும் பெருமளவு ஆதாயங்களை அள்ளித் தந்த வகையிலும், கையாளுவதற்கு எளிதானது மற்றும் பாதுகாப்பானது என்பதாலும், நாளுக்கு நாள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வோர் அதிகரித்து வருகின்றனர். அதற்கேற்ப மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், நாட்டின் பொருளாதாரம் நொடித்த நிலையிலும் புதிய சாதனைகளை படைத்து வருகின்றன. இவ்வாறு நாளுக்கு நாள் பங்கு வர்த்தகத்தில் நுழையும் புதிய வர்த்தகர்களுக்கான இனிய தொடக்கமாகவும் இன்றைய முகூர்த்த பரிவர்த்தனை சிறப்பு பெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in