தொழில் முனைவோருக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்!

இந்தியத் தொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன் கருத்து
தொழில் முனைவோருக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்!

“மத்திய பட்ஜெட்டின்போது, அது நலிவுற்ற குறு சிறு நிறுவனங்களை மீட்டெடுக்கவோ, கவனம் செலுத்தவோ இல்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். எனவே தமிழக அரசின் பட்ஜெட் அதை முன்னிறுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்த பட்ஜெட் வருத்தம் அளிக்கிறது” என இந்தியத் தொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “மேலும் மேலும் கடன் வழங்குவது அனைவருக்கும் பொருந்தாது. ஏற்கெனவே அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின்படி (ECGLS) கடன் தொகையாக மத்திய அரசு அறிவித்த 2 லட்சம் கோடி ரூபாய் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. தமிழக அரசிடம் புதிய சிந்தனை இல்லை. நலிவுற்ற தொழில் முனைவோரை மீட்டெடுப்பதில் முனைப்பும் காணப்படவில்லை. புதிய தொழில் வளர்ப்பு, குழுவாகச் செயல்படும் குறு தொழில் வளர்ப்பு, கட்டமைப்பு உருவாக்கம், நன்கு செயல்படும் தொழில்களுக்கு ஊக்கம், திறன் வளர்ப்பு என்பவை எல்லாம் ஏற்கெனவே மத்திய பட்ஜெட்டில் சொல்லப்பட்டவைதான்” என்றார்.

கே.இ.ரகுநாதன்
கே.இ.ரகுநாதன்


“தொழில்கள் வளர்ந்தால்தான் வருமானம் பெருகும். வேலைவாய்ப்பு ஏற்படும். தொலைநோக்கு அறிவிப்புகள் மட்டும் போதாது. சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் தந்த கோரிக்கைகள், பட்ஜெட் அறிவிப்பில் இல்லை. மூலப்பொருள் விலையேற்றத்தில் இருந்து காப்பாற்ற எந்த அறிவிப்பும் இல்லை. வேலைவாய்ப்பு பெருக எதிர்பார்த்த அறிவிப்பு இல்லை. மத்திய அரசு அறிவித்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பில்லாத தொழில் முனைவோருக்கு எந்தச் சலுகைகளும் இல்லை. ஏற்றுமதி நிறுவனங்கள், சேவைத் துறை நிறுவனங்கள், சுய தொழில் செய்பவர்களுக்கு இன்னும் அதிகம் செய்திருக்கலாம்” என்று கூறிய ரகுநாதன், “இந்த வருடமும் நிச்சயமில்லாத நிலையில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவை காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதில் தவறிவிட்டது” என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.