பயன்பாட்டுக்கு வந்தது டிஜிட்டல் பணம்! சாதகம்/பாதகம் என்ன?

க்ரிப்டோகரன்சிக்கு மாற்றாகுமா டிஜிட்டல் பணம்?
பயன்பாட்டுக்கு வந்தது டிஜிட்டல் பணம்! சாதகம்/பாதகம் என்ன?

நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஜிட்டல் பணம் மற்றும் அது சார்ந்த பரிவர்த்தனைகள் டிச.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. தற்போதைக்கு முன்னோடி திட்டமாக பரிசோதனை அடிப்படையில், வரையறுக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நகரங்களிலும் மட்டுமே இந்த டிஜிட்டல் பணம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

மற்றபடி பயன்பாட்டுக்கு எளிதானதா என்பது முதல் க்ரிப்டோகரன்சிக்கு மாற்றாக அமையுமா என்பது வரை ஏராளமான ஐயங்கள், இந்த டிஜிட்டல் பணத்தை முன்வைத்து எழுந்திருக்கின்றன. க்ரிப்டோகரன்சியின் முறையற்ற முதலீடுகள், பரிவர்த்தனைகள் மற்றும் பயன்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடனே, அங்கீகாரம் பெற்ற மின் பணத்தின் தேவையை அரசு பரிசீலிக்க ஆரம்பித்தது. தற்போது க்ரிப்டோ உலகம் தள்ளாட்டத்துக்கு ஆளாகியிருப்பதன் மத்தியில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் டிஜிட்டல் கரன்சியின் தேவை தொடர்பான கேள்விகளும் நீள்கின்றன.

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம் என்பது நடைமுறையில் நாம் புழங்கும் கரன்சி தாள் மற்றும் நாணயங்களின் மதிப்பிலேயே அமைந்திருக்கும். கண்ணால் பார்க்க முடியாத டிஜிட்டல் வில்லைகளான இந்த மின் பணத்தை, வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் பெட்டக செயலிகள் மற்றும் செல்போன் வாயிலாகவே வைத்திருந்து பயன்படுத்தலாம். கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் இந்தியாவுக்கான பாதையில், நேரடி கரன்சி பயன்பாட்டை தவிர்த்து ஆன்லைன் பரிவர்த்தனைகளில் அனைத்தையும் சாதிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அதே பாதையில் டிஜிட்டல் பணத்தின் புழக்கமும் எளிதில் பயணப்படும்.

தற்போதைக்கு குறிப்பிட்ட வங்கிகள் மற்றும் நகரங்களில், வரையறுக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த முன்னோடி திட்டம் அனுமதிக்கப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கப்பெறும் அனுபவங்களின் அடிப்படையில் அடுத்த கட்டங்களுக்கு, டிஜிட்டல் பணமும் அதற்கான வங்கிகள் மற்று நகரங்களும் விரிவு செய்யப்பட இருக்கின்றன.

முதல் கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் நகரங்களின் ஸ்டேட் பேங்க், ஐசிஐசி வங்கி, யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய வங்கிகளின் வாயிலாக டிஜிட்டல் பணம் பயன்பாட்டுக்கு வருகிறது. அடுத்த கட்டமாக பரோடா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட 4 வங்கிகளுடன் 9 நகரங்களில் அவை அமலுக்கு வர இருக்கின்றன. இந்த இரண்டாம் கட்ட நகரங்களிலும் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்கள் எதுவும் ஏனோ இடம்பெறவில்லை.

டிஜிட்டல் பணத்தின் பரிவர்த்தனையை தனி நபர்களுக்கு இடையே மற்றும் தனி நபரிடமிருந்து வர்த்தகருக்கு என வழக்கமான க்யூ.ஆர் ஸ்கேனிங் வாயிலாக சாத்தியமாக்கலாம். கண்ணால் பார்க்க இயலாது என்பதற்கு அப்பால் டிஜிட்டல் பணத்தின் முதல் கட்ட பயன்பாட்டில் பெரிதாய் வித்தியாசமில்லை. டிஜிட்டல் பணத்துக்கு வட்டி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அவசியமெனில் வங்கியின் வழக்கமான கரன்சிக்கு மாற்றி இருப்பு வைக்கவோ, முதலீடு செய்யவோ முடியும்.

க்ரிப்டோகரன்சிக்கு மாற்றானதா என்பதை டிஜிட்டல் கரன்சியின் அடுத்த கட்ட பயன்பாடுகளின்போது மட்டுமே தெளிவாகும். க்ரிப்டோகரன்சிக்கு கிடைக்காத அரசின் உத்திரவாதம் டிஜிட்டல் பணத்துக்கு உண்டு என்பது பெரும் சாதக அம்சமாகும். ஆனால் க்ரிப்டோகரன்சி புழக்கத்தில் அரசால் சாத்தியப்படாத அதன் கண்காணிப்பு வளையத்துக்குள் டிஜிட்டல் பணம் எளிதில் ஆட்படும். தேச எல்லைக்கு அப்பாலான முறையற்ற பரிவர்த்தனை, கணக்கில் வராத கறுப்பு பணம், மோசடி முதலீடுகள், பயங்கரவாத தேவைகளுக்கு பயன்படுத்துதல், இருள் இணையத்தின் சட்ட விரோத தேவைகள் உள்ளிட்ட அரசுக்கு தலைவலி தரும் க்ரிப்டோகரன்சிக்கான இம்சைகள் தற்போதைய டிஜிட்டல் பணத்தில் இருக்காது.

இவ்வாறாக முன்னோடி திட்டத்தின் முதல் சுற்று பயன்பாட்டில், குடிமக்களைவிட அரசுக்கே அதிக சாதகங்களை டிஜிட்டல் பணம் அள்ளித் தருகிறது. க்ரிப்டோகரன்சியில் மோகம் கொண்ட இளம் தலைமுறையினர் மத்தியில் வேண்டுமானால் டிஜிட்டல் பணத்துக்கு வரவேற்பு தென்படலாம். அவர்களும் க்ரிப்டோகரன்சிக்கு நிகரான ஏனைய பயன்பாடுகளுக்கு, டிஜிட்டல் பணத்தின் அடுத்த கட்ட விரிவாக்கங்களுக்கு காத்திருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in