தீபாவளிக்கு முன்னதாக ரயில்வே ஊழியர்கள் ’ஸ்வீட் எடு; கொண்டாடு..’ என்ற மூடுக்கு வந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மூன்று வகையிலான பணப்பலன்கள், பண்டிகை நெருக்கத்தில் அவர்களை மனநிறைவில் ஆழ்த்தி இருக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினத் தொடர்ந்து, ரயில்வே ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படை ஊதியத்தில் 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு காண்கிறது. திருத்தப்பட்ட அகவிலைப்படியாக 46 சதவீதத்துடன் இனி ரயில்வே ஊழியர்கள் தங்கள் ஊதிய விகிதங்களில் பலனடைய இருக்கிறார்கள்.
மேலும் இந்த அகவிலைப்படி உயர்வானது, 2023 ஜூலை 1 என நிலுவையுடன் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் 4 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வினை மொத்தமாக ரயில்வே ஊழியர்கள் பெற உள்ளனர்.
இவை மட்டுமன்றி ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பின்படி அவர்கள் 78 நாள் ஊதியத்தையும் பெற இருக்கிறார்கள். இவை அனைத்தையும் தீபாவளிக்கு முன்னதாக ரயில்வே ஊழியர்கள் பெற இருக்கின்றனர். இதனால் பண்டிகையை அதன் அர்த்தத்துடன் கொண்டாட ரயில்வே ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் என அகவிலைப்படி அறிவிப்பு காரணமாக, பண்டிகை தருணத்தில் பொதுவெளியில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பாகும். இது பொருளாதார வகையிலும் பணவீக்கத்தை குறைப்பதற்கான சாத்தியங்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, அதற்கான நிலுவை மற்றும் போனஸ் அறிவிப்பு உள்ளிட்டவற்றை ரயில்வே ஊழியர் சங்கங்கள் ஏகமனதாக வரவேற்றுள்ளனர். அதே வேளையில் கொரோனாவை காரணமாக்கி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான ஒன்றரை வருட காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுகளையும் தற்போது எதிர்நோக்கி காத்துள்ளனர்.
கொரோனோ நெருக்கடிகள் நிறைவுக்கு வந்தது முதலே அவற்றை நிலுவைத் தொகையாக வழங்குமாறு ரயில்வே தொழிலாளர் சங்கங்கள் போராடி வருகின்றன. தற்போதைய அகவிலைப்படி அறிவிப்பினை ஒட்டியும், கொரோனா கால நிலுவையை உடனடியாக வழங்குமாறு ஊழியர் சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு