கம்பெனி டு கருவாட்டு பிசினஸ்!

பட்டையைக் கிளப்பும் பட்டதாரி இளைஞர்
கலைக்கதிரவன்
கலைக்கதிரவன்

ஐடி நிறுவனங்களில் பணியாற்றி அலுத்துப் போனவர்கள் நிம்மதியான வாழ்க்கையைத் தேடி இயற்கை விவசாயத்தில் இறங்குவது தான் இப்போது ட்ரெண்ட். அந்த வகையில், பி.டெக் பட்டதாரியான கலைக்கதிரவன் 12 ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தது போதும் என்று கருவாட்டு பிசினஸில் இறங்கி இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குவாணி வீதி தான் கலைக்கதிரவனின் சொந்த ஊர். ஒத்துவராத வேலையைச் செய்வதைவிட ஊருக்கு ஏற்ற தொழிலைச் செய்வதே மேல் என களத்தில் இறங்கிவிட்ட கதிரவனின் அலைபேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து வாழ்த்துச் சொல்லி பேசினோம்.

“பி.டெக் பயோ டெக்னாலஜி படிச்சுட்டு 12 வருஷமா தனியார் கம்பெனியில் வேலை செஞ்சேன். மாசம் 50 ஆயிரம் சம்பளம்; ஓரளவுக்கு வசதியான வாழ்க்கை தான். ஆனாலும், அங்க இங்க ஓடமா நம்ம ஊருலயே இருந்து சம்பாதிக்கணும்னு எனக்குள்ள ஒரு ஆசை ரொம்ப நாளாவே இருந்துச்சு. இது விஷயமா என்னோட ஃப்ரெண்ட் கிருஷ்ணசாமி கிட்ட பேசினேன். அவரும் அதே சிந்தனையில இருந்ததால ரெண்டு பேருமா சேர்ந்து கமகமன்னு கருவாட்டு பிசினஸை ஆரம்பிச்சுட்டேம்” என்று கலகலப்பாக தொடங்கினார் கலைக்கதிரவன்.

சொந்த ஊரில் சுயமாக தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டாலும் என்ன தொழில் செய்வது என்பதில் இவருக்கு ஏகப்பட்ட குழப்பம். "நம்ம ஊரு கருவாடு ரொம்ப ஃபேமஸ். பேசாம, அந்த தொழில்லயே இறங்கிட வேண்டியது தானே” என நண்பர்கள் தான் ஐயாவுக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

நண்பர்கள் இப்படிச் சொல்லிட்டாலும் கருவாட்டு பிசினஸை வெற்றிகரமாக கொண்டு செல்வது குறித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஸ்டடி செய்திருக்கிறார் கலைக்கதிரவன். அதன் பிறகு உதயமானது தான் 'லெமூரியன் பஜார்' என்ற இவரது கருவாட்டு வர்த்தக நிறுவனம்.

“2020 மார்ச் மாசம் கருவாட்டு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுனோம். ஒரே வாரத்துல கரோனா ஊரடங்கு வந்திருச்சு. அந்த சமயத்துல அமெரிக்காவின் டெக்ஸாஸில் இருந்து ஒரு ஆர்டர் வந்துச்சு. அதுதான், எங்களுக்கு வந்த முதல் வெளிநாட்டு ஆர்டர். ஆனால், ஊரடங்கு காரணமா அதை டெலிவரி செய்ய முடியல. ஊரடங்கு முடிஞ்ச பின்னாடிதான் பிசினஸ் பிக்கப் ஆக ஆரம்பிச்சது. இப்ப இந்தியாவுக்குள்ள மட்டுமில்லாம மலேசியா, கலிபோர்னியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கருவாடு ஷிப்பிங் பண்றோம்.

பார்ட்னர் கிருஷ்ணசாமியுடன் கலைக்கதிரவன்...
பார்ட்னர் கிருஷ்ணசாமியுடன் கலைக்கதிரவன்...
கருவாட்டு பேக்கிங்
கருவாட்டு பேக்கிங்

இப்போதைக்கு, அமேசான், ஃபிளிப்கார்ட் மூலமா பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம். 'லெமூரியன் பஜார்' என்ற எங்களோட பிரத்தியேக இ- காமர்ஸ் வெப்சைட்டும் இருக்கு. மாசத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் வருது. ஆரம்பத்துல கருவாட்டு தொழிலான்னு குடும்பத்துல சலிச்சிக்கிட்டாங்க. நல்ல வருமானம் வருதுன்றதும் அவங்களே வலிய வந்து சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க

வந்த புதுசுல கருவாடு தரம் பார்க்குறது, அதை எப்படி வாங்குறதுனெல்லாம் தெரியாம இருந்தோம். சில இடங்கள்ல ஏமாந்தும் போனோம். ஆனா, இப்ப எங்களை யாரும் ஏமாத்த முடியாது. அந்தளவுக்கு எக்ஸ்பர்ட் ஆகிட்டோம். பெரும்பாலும், விற்பனை ஆகாத பழைய மீன்லதான் கருவாடு செய்வாங்க. ஆனா, நாங்க கருவாட்டுக்குன்னே ஃப்ரெஷ்ஷா மீன் வாங்கி அதுல கருவாடு தயாரிக்கிறோம். என் மனைவி அனிதா எம்ஃபில் முடிச்சிருக்காங்க. நான் இந்தத் தொழில்ல இறங்குனதும் அவங்களும் துணைக்கு வந்துட்டாங்க. பேக்கிங் வேலை எல்லாம் அவங்க டிபார்ட்மென்ட் தான்” என்று கமகமப்புக் குறையாமல் நமக்கு விடைகொடுத்தார் கலைக்கதிரவன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in