தங்கத்தில் போரின் தாக்கம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,856 உயர்வு

தங்கத்தில் போரின் தாக்கம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,856 உயர்வு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடுப்பால், ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்துள்ளது.

உலகத்தின் எந்த மூலையில் போர் வெடித்தாலும், சர்வதேச அளவிலான பொருளாதார சமநிலையை குலைவதற்கான அச்சம் பரவும். இதனால், இதர முதலீடுகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் பாதுகாப்பு பெறவே முதலீட்டார்கள் விரும்புவார்கள். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலால், பங்குச் சந்தைகள் தள்ளாட்டம் கொண்டதும், தங்கத்தின் விலை உயரத் தொடங்கியதும் இவ்வாறே நேரிட்டது.

எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நெருக்கடி எழுந்ததில், இம்மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்வு காணத்தொடங்கியது. அவ்வப்போது சற்றே குறைந்து விலை உயர்வை நிலை நிறுத்துக்கொண்டபோதும், தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது.

நேற்று(பிப்.24) ஒரே நாளில் ரூ.1,856 உயர்ந்து, சவரன் விலை ரூ.39,608 என்றானது. இந்த வகையில் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.4,951 என்றானது. முன்னதாக சவரன் விலை ரூ.37,752 என்றும், கிராம் தங்கத்தின் விலை ரூ.4,719 என்றும் இருந்தது.

இந்திய பங்குச்சந்தையில், சர்வதேச சந்தைகளின் போக்கில் பெரும் சரிவு நேரிட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,702 புள்ளிகள் விழுந்தது. போர் அச்சம் தொடர்பான பொருளாதார ஸ்திரமின்மை கவலைகளால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக தங்கள் முதலீடுகளை தங்கத்திற்கு மாற்றியதும், இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

தங்கத்தில் அதிகமானோர் முதலீடு செய்ய முனைந்ததில், அதன் விலை இயல்பாக ஏற்றம் கண்டது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை நீடிக்கும் என்ற நிலையில், பங்குச் சந்தையின் தள்ளாட்டமும், தங்கத்தின் விலை உயர்வும் தொடரும் என்றே கணிக்க முடிகிறது.

தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தை தொடும் நிலையில் சாமானியர்கள் மத்தியில் தங்கம் எட்டாக்கனியாகி வருகிறது. ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு ஆறுதல் தந்திருக்கிறது. இடிஎஃப் வாயிலாக தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆதாயம் கண்டுள்ளனர்.

Related Stories

No stories found.