அம்பேத்கர் வென்றெடுத்த 8 மணிநேர வேலை சட்டமும், வாரம் 4 நாட்கள் புதிய வேலை திட்டமும்!

’வேலையின் எதிர்காலம்’ குறித்த அலசல்
அம்பேத்கர் வென்றெடுத்த 8 மணிநேர வேலை சட்டமும், வாரம் 4 நாட்கள் புதிய வேலை திட்டமும்!

வாரத்துக்கு 40 மணிநேரம் மட்டுமே வேலை செய்யும் தீர்மானம், 1919-ல் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதிலும் இந்தியர்களுக்கும் நன்கு பரிச்சயமான அமெரிக்காவின் கெலாக்ஸ் நிறுவனம், நாளொன்றுக்கு 6 மணிநேர வேலை திட்டத்தை அன்றே அமல்படுத்தியது.

இது சாத்தியப்படக் காரணம், அதற்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து தங்களது உரிமைகளுக்காக இயக்கமாகத் திரண்டு போராடினர். அவ்வாறு வேலை நிறுத்தத்துக்கு அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்த தினமே, உழைப்பாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நாளொன்றுக்கு, 14 மணிநேரம் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட அன்றைய இந்தியத் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை, 1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்தார்.

தொழிலாளர்களுக்குமானவர்!

அதே காலகட்டத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் வாரத்துக்கு 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்வோம் என்று சொல்லவே ஊழியர்கள் பெரும்பாடுபட்டனர். நாளொன்றுக்கு 14 மணிநேரம் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட அன்றைய இந்தியத் தொழிலாளர்களுக்கு, சட்டப்பூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை 1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்தார். ஆங்கிலேய வைஸ்ராய் சபையில் தொழிலாளர் துறை அமைச்சராக நான்காண்டுகள் பதவி வகித்தபோது, தொழிலாளர்களின் நலன் காக்க அவர் இயற்றிய பல சட்டங்களில் இதுவும் ஒன்று.

“தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண... முத்தரப்பு மாநாடு ஏற்பாடு செய்த அம்பேத்கர், தொழிற்சாலையில் உருவாகும் பிரச்சினைகளைத் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர், அரசுப் பிரதிநிதி ஆகிய அமைப்பினர் சேர்ந்து பேசி நல்ல தீர்வுகள் ஏற்பட முத்தரப்பு ஒப்பந்தம் உருவாக்கச் சட்டம் இயற்றினார். தொழிலாளர்நலத் துறையில் நிலைக்குழு அமைக்கப்பட்டது. 8 மணிநேர வேலை கொண்டு வந்து, மே தினத் தியாகத்துக்கு மகுடம் சூட்டினார்” என்று அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்மையில் வெளிவந்த ‘எல்லோருக்குமானவரே’ புத்தகத்தில் பேராசிரியர் க.கணேசன் எழுதியுள்ளார்.

வேலையின் எதிர்காலம் என்ன?

இந்நிலையில், 90-களில் உலகமயமாக்கலுக்கு இந்தியப் பணிச் சந்தையின் கதவுகள் அகலத் திறக்கப்பட்டன. இதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிட்டத் தொடங்கியது. அதே வேளையில், தொழிலாளர்நலச் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அதன் அடுத்த கட்டமாக இன்று தானியங்கி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அனைத்துவிதமான வேலைகளுக்குள்ளும் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. இதனால் மனிதர்களின் இடத்தை எந்திரங்கள் பிடித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டன. இந்தப் பின்னணியில், ’வேலையின் எதிர்காலம்’ (Future of Work) என்ற பெயரில் அண்மைக்காலமாக பணிச்சூழலில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முயல்வோம்.

ஊழியர்களின் உற்பத்தித் திறனையும் மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கும்பட்சத்தில், வாரம் 4 நாட்கள் மட்டுமே செயல்படுவது தங்களது நிரந்த கொள்கையாக மாற்றப்படும்...

3 நாட்கள் விடுமுறை!

அந்த வகையில், மும்பையில் செயல்பட்டுவரும் சைபர்செக்யூரிட்டி ஐடி நிறுவனம் ஒன்று புதிய தீர்மானத்தை சில தினங்களுக்கு முன்பு நிறைவேற்றியுள்ளது. வாரம் 4 நாட்கள் மட்டுமே அலுவலகம் இயங்கும் என்று தீர்மானித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வார விடுமுறையாம். ஏற்கெனவே, கடந்த 7 மாதங்களாகச் சோதனை முயற்சியாக இப்படித்தான் அந்த நிறுவனம் செயல்பட்டுவந்ததாம். 200 ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், அவர்களது நலன் கருதியே இந்த முடிவெடுத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. ஊழியர்களின் உற்பத்தித் திறனையும் மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கும்பட்சத்தில், வாரம் 4 நாட்கள் மட்டுமே செயல்படுவது தங்களது நிரந்தரக் கொள்கையாக மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது. விரைவில், இந்தத் தீர்மானம் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

வாரம் 4 நாட்கள் மட்டுமே அலுவலகப் பணி என்று கேட்கும்போதே ’இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ எஃபக்ட் இருக்கும்!

‘தொடர்பைத் துண்டித்துக்கொள்ளும் உரிமை’ என்ற புதிய சட்டத்தை பிரான்சு அரசு பிறப்பித்தது. அதன்படி வேலை நேரம் போக மற்ற சமயத்தில் ஊழியருக்கு மின்னஞ்சல் அனுப்பக்கூடாது.

’வந்தோமா வேலையைப் பார்த்தோமா’!

ஏற்கெனவே, ஜப்பானில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2019-லேயே இது அமலுக்கு வந்துவிட்டது. பிரிட்டனிலும் ஒருசில தனியார் நிறுவனங்கள் இதைப் பின்பற்றுகின்றன. பின்லாந்தின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் ஆட்சியமைத்ததும் முன்மொழிந்த முதல் திட்டமே இதுவே. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் நாளொன்றுக்கு 6 மணிநேரம் மட்டுமே வேலை செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ’வந்தோமா வேலையைப் பார்த்தோமா’ என்கிற மனப்பான்மைக்குள் ஊழியர்கள் வந்துவிட்டதாக அறியப்பட்டது.

பிரான்ஸில் நாளொன்றுக்கு 7 மணிநேரம், 5 நாட்களுக்கு வேலை முறை என்பதே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. நாளொன்றுக்கு 15 மணிநேரம் உணவு, உறக்கம், பொழுதுபோக்குக்கு செலவழிப்பது ஒவ்வொரு ஊழியரின் தனி உரிமை என்றே அந்நாடு தொழிலாளர் சட்டம் வலியுறுத்துகிறது. ’ஓவர் டைம்’ வேலை செய்ய நேர்ந்தால், ஒருநாள் ஊதியத்தில் 50 சதவீதம்வரை அதிகமாக அளிக்கப்படுகிறது. அலுவலர்களுக்கு மட்டுமல்ல அங்காடி ஊழியர்களுக்கும் இதே சட்டம் பொருந்தும்.

’தொந்தரவு செய்யாதீர்!’

டிஜிட்டல் தொழில்முறையின் இடைஞ்சல்களில் ஒன்று, அலுவலகத்தைவிட்டுக் கிளம்பிய பிறகும் வேலை நிமித்தமாக மின்னஞ்சல் வழி தொடர்புகொள்ளப்படுதல். இதற்குத் தீர்வுகாண 2017-ல் ‘தொடர்பைத் துண்டித்துக்கொள்ளும் உரிமை’ என்ற புதிய சட்டத்தை பிரான்சு அரசு பிறப்பித்தது. அதன்படி 50 ஊழியர்களுக்கு மேல் கொண்ட நிறுவனங்கள், வேலை நேரம் போக மற்ற சமயத்தில் ஊழியருக்கு மின்னஞ்சல் அனுப்பக்கூடாது. தப்பித்தவறி மின்னஞ்சல் வந்துவிட்டாலும் ஊழியரும் அதற்குப் பதிலளிக்கக்கூடாது.

12 மணிநேர வேலைக்கு ரெடியா?

இந்நிலையில், மீண்டும் இந்தியாவுக்கு வருவோம். வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் அமலுக்கு வந்தாலும் ஊழியர்களின் உரிமைகளைப் பேணும் சூழல் இங்கு இல்லை. அதற்கு ஒரு சோற்றுப் பதமாக மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் செய்யவிருக்கும் திருத்தங்களை எடுத்துக்கொள்ளலாம். நாளொன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யவும் ஊதியத்தில் புதிய பிடித்தங்களுக்கு ஊழியர்கள் தயாராகவும் இருந்தால் 4 நாட்கள் வேலை திட்டத்துக்குப் பச்சைக்கொடி காட்ட ரெடி என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.

இதனால், வாரம் 48 மணிநேர வேலை என்ற சட்டம் தவிடுபொடியாகும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே இன்றையச் சூழலில் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் நாளொன்றுக்கு 10 மணிநேர வேலை திட்டத்தை சத்தமின்றி நடைமுறைப்படுத்திவிட்டன. அது மட்டுமின்றி நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் வேலையை செய்து முடிக்காதபட்சத்தில் ‘ஓவர் டைம்’ செய்வது சகஜம். அப்படிச் செய்யும்போது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூடுதலாக வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதியெல்லாம் இந்தியத் தனியார் நிறுவனங்களில் காலாவதியாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

3 ஷிஃப்ட் என்பதை 4 ஷிஃப்ட் வேலைத் திட்டமாக மாற்றும் பட்சத்தில், 23 சதவீதம் வேலையில்லா பட்டதாரிகள் என்ற பூதாகரமான சிக்கலுக்கும் தீர்வுகாண முடியும்.

வேலையில்லா திண்டாட்டத்துக்குத் தீர்வு!

நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலைத் திட்டமானது, அயல் நாடுகளில் சோதிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்திருப்பதை பார்த்தோம். தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்புக்கும் இத்திட்டம் நன்மை பயக்கும் என்கிறனர் தொழிற்சங்கத்தினர். அதுமட்டுமின்றி 3 ஷிஃப்ட் என்பதை 4 ஷிஃப்ட் வேலைத் திட்டமாக மாற்றும் பட்சத்தில், 23 சதவீதம் வேலையில்லா பட்டதாரிகள் என்ற பூதாகரமான சிக்கலுக்கும் தீர்வுகாண முடியும். அதுவே 9 மணிநேரத்தை கடந்த வேலை என்பது ஊழியர்களுக்கு மன உளைச்சலையும், உயர் ரத்த அழுத்தத்தையும் உண்டாக்கும் என்று மருத்துவர்களும் கவலையுடன் எச்சரிக்கின்றனர். போதாததற்கு கரோனா காலத்தில் வீட்டிலிருந்து அலுவலகப் பணியை மேற்கொள்ளும் ’வர்க் ஃப்ரம் ஹோம்’ முறை பரவலாகிவிட்டது.

இதையடுத்து தனியார் நிறுவனங்கள் பல, அதுவரை முழுநேர ஊழியர்களாக நடத்தி வந்தவர்களையும் ’வேலைக்குக் கூலி’ என்பதாக மாற்றிவிட்டன. அன்றாடம் ஒதுக்கப்பட்ட வேலையில் 40 சதவீதம்வரை முடித்தால் சம்பளத்தில் கால் பங்கு, 70 சதவீதம்வரை முடித்தால் அரை பங்கு, 90 சதவீதத்துக்கு மேல் முடித்தால் மட்டுமே முழு சம்பளம் தருகின்றன. இதில் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இணைய வசதியில் கோளாறு போன்ற நியாயமான காரணங்களால் 40 சதவீதத்துக்கு குறைவாக வேலை செய்ய நேர்ந்தால், அன்றைய சம்பளம் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுவிடுகிறது.

உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படும் ஊழியர்களால் உற்பத்தித் திறனிலும் சிறந்து விளங்க முடியாது. ஆனால், சமீப காலமாக நடப்பவையெல்லாம் நாம் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிச் சென்றுவிட்டதையே உறுதிப்படுத்துகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களின் வசதிக்கேற்ப பணி நேரத்தை மாற்றிக்கொள்ள, தொழிலாளர் சட்ட புதிய வரைவு அனுமதிக்கும் இவ்வேளையில், தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அம்பேத்கர் முன்மொழிந்த ‘முத்தரப்பு ஒப்பந்தச் சட்டம்’ உயிரூட்டப்பட வேண்டும்.

Related Stories

No stories found.