தங்கம் வாங்க, தங்கமான உபாயம்!

தங்கப் பத்திர விற்பனை தொடங்கியது
தங்கம் வாங்க, தங்கமான உபாயம்!

தங்கம் வாங்குவது, பாதுகாப்பாக வைத்திருப்பது, அதன் அனைத்து சகாயங்களையும் முழுவதுமாக அடைவது, அவசியமெனில் தங்கத்தை ரொக்கமாக்குவது என தங்கம் வாங்குதலின் அனைத்து உபாயங்களுக்கும் உதவிக்கரம் நீட்டுகிறது தங்கப் பத்திர விற்பனைத் திட்டம்.

கிரிப்டோ கரன்சியில் பணப்பரிவர்த்தனை, முதலீடு என்று உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும், சேமிப்பு, முதலீடு என்றதுமே நம் மக்களுக்கு தோன்றும் முதல் யோசனை தங்கம் வாங்குவதாகவே இருக்கிறது. அதில் ஒன்றும் தவறும் இல்லை.

ஆனால், அடிப்படையான ஆபரணத் தேவைக்கு அப்பாலும் தங்கம் வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல. ஆபரணத் தங்கம் என்பதில் தங்கத்துக்கான விலையை கொடுத்தாலும், அது முழுதும் தங்கம் கிடையாது என்பதை அறிவோம். சொக்கத் தங்கத்தை ஆபரணமாக்க தங்கம் அல்லாத பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. ஆனாலும் தங்கத்துக்கான விலையே அவற்றில் சேர்க்கப்படுகின்றன. இவை தவிர்த்து செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி வரிகள் என தங்கம் வாங்கும் எண்ணத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் பக்கவிளைவுகள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

இந்த சங்கடங்கள் தங்கம் வாங்குவதோடு நின்று விடுவதில்லை. வாங்கிய தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது எக்காலத்திலும் கூடுதல் பதைபதைப்பை உருவாக்கும். எனவே, தங்கத்தை முதலீடாகவும், எதிர்காலத்தேவைக்காகவும் வாங்க நினைப்போருக்கு உதவக் காத்திருக்கிறது தங்கப் பத்திரம் விற்பனை. தங்கம் வாங்குவதிலும், பாதுகாப்பதிலும், அவசியமெனில் ரொக்கமாக்குவதிலும் இந்த தங்க பத்திரங்கள் எத்தனை பத்திரமானவை என்பதை பார்த்து விடுவோம்.

ரிசர்வ் வங்கியே முன்வந்து தங்க பத்திரங்களை விற்பனை செய்வதால், உரசிப் பார்க்காது தங்க பத்திரங்களை துணிந்து வாங்கலாம். தங்க பத்திரம் என்பது பெயருக்கேற்ப பத்திரம் மட்டுமே என்பதால், தங்கத்துக்கான பத்திரம் குறித்த கவலைகளுக்கு அவசியமில்லை. ஒரு தனிநபர் குறைந்தது 1 கிராமில் தொடங்கி, அந்த நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கலாம். நிறுவனங்கள், அறக்கட்டளைகள் 20கிலோ வரை வாங்க இயலும். வாங்கிய தங்கத்துக்கு ஆண்டு வட்டியாக 2.25 சதவீதம் கணக்கிட்டு, 6 மாதங்களுக்கு ஒரு முறை வங்கிக் கணக்குக்கில் சேர்ந்து விடும். இடையில் விற்கலாம் என்ற போதும் முழுதாக எட்டு வருடம் வரை வைத்திருந்து ரொக்கமாக்குவோருக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு கிடைக்கும். முதிர்வடையும் நாளில் அன்றைய தங்கத்தின் விலைக்கு நிகரான தொகையைப் பெறலாம்.

பங்கு பரிவர்த்தனைக்கான டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், இணையத்தில் ஓரிரு சொடுக்கலில் தங்க பத்திரத்தை தங்கள் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு, கிராமுக்கு ரூ50 தள்ளுபடியும் உண்டு. டீமேட் இல்லாதவர்கள், வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகவும் இந்த தங்க பத்திரங்களைப் பெற முடியும். இன்று (நவ.29) தொடங்கி டிச.3 வரை இவற்றின் விற்பனை நடைமுறையில் இருக்கும். தற்போதைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ4791. இந்த நிதியாண்டில் வருடத்தில் இதற்கு முன்னதாக வெளியான விலையைவிட, தற்போதையது சுமார் ரூ250 வரை குறைவாக கிடைக்கிறது. தங்கப் பத்திரம் வாங்க செல்வோர், ஆதார் போன்ற அடையாளத்துக்கான வழக்கமான சான்றுடன் பான் கார்டு நகலையும் எடுத்து செல்வது அவசியம்.

சர்வதேசளவில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் போக்கே தென்படுகிறது. தங்கத்துக்கான தட்டுப்பாடு, சுரங்கப் பணிகளில் அதிகரிக்கும் செலவினம், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றோடு தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் பங்குச் சந்தைகள் அதிகம் தள்ளாடுவதால், முதலீட்டாளர்களின் முதன்மை உபாயமாகவும் தங்க முதலீடு மாறி வருகிறது. இவற்றின் அடிப்படையில் வரும்காலத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது.

பொறுப்பு துறப்பு: தங்கம் வாங்குவது பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதல்ல. ஆயினும் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான உபாயங்கள் எதுவாயினும் அவற்றில் முழுமையாகத் தெளிவு பெற்ற பின்னரே இறங்குவது நல்லது. தேவையான மேலதிக தகவல்களை தங்க பத்திரம் விற்பனையாகும் இடங்களில் விசாரித்து அறிந்த பிறகே, முடிவினை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in