மோட்டார் வாகனத் துறையில் 7.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

மோட்டார் வாகனத் துறையில் 7.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

ரூ.26,000 கோடி உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் அறிவிப்பு

மின்சார வாகனங்களையும் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களையும் தயாரிக்க, ரூ.26,000 கோடி உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு இன்று (செப் 15) அறிவித்தது. இந்த ஊக்குவிப்பால், மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் 7.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு மோட்டார் வாகனங்கள், மோட்டார் வாகன பாகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பிரிவுகளுக்கு ரூ.57,043 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளுக்கான ஊக்குவிப்பு திட்டத்தை இதேபோல அறிவித்தது.

இப்போது அந்தத் திட்டத்தைக் சுருக்கி, ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் உற்பத்திக்கு ஏற்ப ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டமாக அறிவித்திருக்கிறது.

எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம், ஆட்டோமாடிக் டிரான்ஸ்மிஷன் அசெம்ப்ளி, சென்சார்கள், வாகனக்கூரையில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பிரிவுகள், சூப்பர் கெப்பாசிட்டர்கள், தேவைக்கேற்ப முன்புறம் விளக்கெரியும் அமைப்பு, பிற வாகனத்துடன் மோதும் வாய்ப்பை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு ஆகியவற்றின் உற்பத்திக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.

2021-22 மத்திய பட்ஜெட்டில் 13 வெவ்வேறு உற்பத்தித் துறைகளுக்கு உற்பத்தியைப் பெருக்குவதற்காக, ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியிலிருந்து இந்தத் தொகை வழங்கப்படவுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு மோட்டார் வாகனத் துறையில் நிறுவனங்களுக்கிடையே போட்டியை அதிகப்படுத்தும். அதனால் இந்தத் துறை வலுப்படும் என்று இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சயாம்) கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, மோட்டார் வாகன உறுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சந்தையில் புதன்கிழமையே உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை உள்ளிட்டவற்றில், மோட்டார் வாகனத் துறை பங்குகளின் பரிமாற்றமும் அதிகரித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in