கிரிப்டோவின் கிறுகிறு வீழ்ச்சி: பாடம் புகட்டிய கருப்பு மே!

கிரிப்டோவின் கிறுகிறு வீழ்ச்சி: பாடம் புகட்டிய கருப்பு மே!

உக்ரைன் போர்ச்சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெரும்பாலான நாடுகளைப் பதம்பார்க்கும் பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்தமான பொருளாதார மந்தம் ஆகியவற்றால் உலக நாடுகளும் அவற்றின் பங்குச்சந்தைகளும் தத்தளித்து வருகின்றன. அரசின் நேரடி கண்காணிப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சட்டபூர்வமான முதலீடுகளைக் கொண்ட பங்குச்சந்தைகளே தடுமாறும்போது, எந்த வகையில் முறைப்படுத்தலுக்கு உட்படாத கிரிப்டோகரன்சியின் நிலை என்னாகும்?

பாதாள இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் கிரிப்டோ உலகம் மேலும் அதல பாதாளத்துக்குச் சரிந்திருக்கிறது. முன்னணி கிரிப்டோவான பிட்காயின் மதிப்பு 6 மாதங்களுக்கு முன்னர் ரூ.50 லட்சத்தை தாண்டியிருந்தது. இதன் மே 26-ம் தேதிய மதிப்பு ரூ23.08 லட்சம்! பிட்காயின் மட்டுமன்றி பல செல்வாக்கான கிரிப்டோகரன்சிகள் அவற்றின் மதிப்பில் பாதிக்கும் மேலாக வீழ்ந்துள்ளன. 2022 மே, கிரிப்டோகரன்சி வரலாற்றில் கருப்பு மாதமாகி உள்ளது.

2 ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளை விதைத்த பல கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு மைனஸில் சரிய, பல்வேறு நாடுகளின் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் அவற்றைப் பரிவர்த்தனைக்கான பட்டியலில் இருந்தே நீக்கின. இதனால் அந்த கிரிப்டோவில் முதலீடு செய்தவர்களின் சொத்துகள் மாயமாகி உள்ளன. லுனா என்ற கிரிப்டோவின் மதிப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமானதில், இதில் முதலீடு செய்தவர்கள் தலையில் துண்டு விழுந்திருக்கிறது.

உலகளவில் கிரிப்டோகரன்சியால் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவில் குறைவே. இதன் பின்னணியில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் தற்போதைய மத்திய அரசுக்கு நன்றி நவின்று வருகிறார்கள். கிரிப்டோகரன்சி முதலீட்டில் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரியுடன், பரிவர்த்தனைகளுக்கு தலா 1 சதவீதம் டிடிஎஸ் விதிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புகளால் களேபரமான சாமானிய கிரிப்டோ முதலீட்டாளர்கள், சரிவுக்கு முன்பே வேகமாக வெளியேற ஆரம்பித்தனர்.

அவ்வாறு தடாலடியாக வெளியேற முடியாத கருப்புப் பண முதலைகள் மட்டுமே திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக தற்போது தவித்து வருகிறார்கள். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் சுமார் 20 லட்சம் பேர் ஈடுபட்டிருக்கும் இந்திய கிரிப்டோ சந்தையின் பாதிப்பு குறித்து மேலும் அறுதியிட்ட தகவல்கள் இல்லை.

பங்குச் சந்தைகளின் சரிவுகள் மற்றும் எழுச்சிக்கு என்று தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. முந்தைய சரிவுகளை உற்று நோக்கினால் இவை புரியும். எந்தவொரு முதலீட்டுச் சந்தையும் அவை அடையும் உச்சம் மற்றும் சரிவுகளை அடுத்து தன்னை சரிசெய்துக்கொள்வது தன்னிச்சையாய் நடந்தேறும். அதாவது திடீரென எட்டும் உச்சத்தை தொடர்ந்து சிறுதும் பெரிதுமாய் சரிவு காண்பதும், எதிர்பாரா காரணங்களால் திடீர் சரிவுக்கு ஆளாகும் சந்தை விரைவில் தனது இயல்புக்கு திரும்புவதும் வாடிக்கை. வழமையான பங்குச் சந்தைகளின் இந்த இயங்கியல் கிரிப்டோவிலும் எதிரொலித்தது. நவம்பரில் கிரிப்டோகரன்சிகள் அவற்றின் வரலாற்று உச்சத்தை தொட்டபோதே, அடுத்தக்கட்ட சரிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன.

கிரிப்டோகரன்சி சந்தையின் வீழ்ச்சியை, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அடையாளம் காணப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முன்கூட்டியே முரசறைந்தார். அதன்படியே கிரிப்டோ உலகம் ஏப்ரல், மே மாதங்களில் ரத்தக்களரியானது. “கிரிப்டோகரன்சி சந்தை விரைவில் வீழும்; ஆனால், அது பங்கு சந்தையை பாதிக்காது” என்றார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. ஆனால், 10 சதவீதத்துக்கும் மேலாக ஈக்விட்டி சந்தை விழுந்திருக்க, அதற்கு இணையான காரணிகளில் ஒன்றாக கிரிப்டோ சந்தையின் வீழ்ச்சியும் கற்பிக்கப்படுகிறது.

இதுபோன்ற சூழல்களில் மரபான பங்குச்சந்தைகளின் போக்கினை தினசரி வர்த்தகர்களும் தற்கால காரணிகளும் தீர்மானிக்க முயன்றாலும், நிறுவனத்தின் செயல்பாடு உள்ளிட்ட காரணங்களால் பங்குகள் தமது சரிவிலிருந்து மீண்டு தனக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளும். ஆனால், ஒழுங்குமுறை அமைப்போ, கண்காணிக்கும் பீடங்களோ, மைய அதிகாரமோ இல்லாத கிரிப்டோகரன்சி சந்தையில் சரிவு என்பது சீட்டுக்கட்டு போல சரிந்திருக்கிறது. சிறிய காரணிகளுக்குக்கூட பெரிதாய் எதிர்வினையாற்றும் பெரும்பாலான கிரிப்டோ கரன்சிகள் மீண்டும் இயல்புக்குத் திரும்புவதும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் முன்னணியில் இருந்த பல கிரிப்டோக்கள் தங்கள் மதிப்பில் தற்போது தசம ஸ்தானத்துக்கு பின்னர் பல பூஜ்ஜியங்கள் நீடிக்கின்றன. உதாரணத்துக்கு, டெரா லுனாவின் தற்போதைய மதிப்பு - 4.97% என்பதாக மைனஸில் சரிந்திருக்கிறது .

கிரிப்டோகரன்சி சகாப்தத்துக்கு இதுதான் முடிவா என்றால்... அப்படியும் சொல்லிவிட இயலாது. கிரிப்டோ உலகின் கட்டமைப்பு குறித்து மீளாய்வு செய்ய இந்த சரிவு தூண்டுகோலாகி இருக்கிறது. ‘கிரிப்டோகரன்சிக்கு என உலகளாவிய ஒழுங்குமுறை அமைப்பை நிறுவ வேண்டும், சந்தையின் போக்கினை கணிக்கும் தொழில் நுட்பங்கள் பரவலாக்கப்பட வேண்டும், பிரமிட் வர்த்தகம் போன்ற மோசடியான உள்ளடிகள் தவிர்க்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட நெடுநாள் கோரிக்கைகள் இந்த இக்கட்டான சூழலை உரசியதாய் உரத்து ஒலிக்கின்றன. இவை கிரிப்டோ சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளில், தொலைநோக்கின் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவும்.

அனைத்துக்கும் அப்பால், கிரிப்டோகரன்சி துறையின் முதுகெலும்பாக உள்ள பிளாக்செயின் நுட்பங்கள் ஒதுக்கப்பட கூடியதல்ல. எதிர்காலத்தில் எண்ணற்ற அதிசயங்கள் நிகழ்த்த காத்திருக்கும் இந்த அறிவியல் பின்புலம், கிரிப்டோகரன்சி களையும் அவற்றின் பரிவர்த்தனைகளையும் நிச்சயம் மீண்டெழச் செய்யும்.

முதலீட்டுத் துறையில் முக்கியமான கோட்பாடு உண்டு. சந்தையின் சரிவு மற்றும் வீழ்ச்சியில் மட்டுமே உள்ளே நுழைய வேண்டும் என்பதே அந்தக் கோட்பாடு. புத்திசாலியான முதலீட்டாளர்கள் அப்படி உள்ளே நுழைந்து சல்லிசாய் கிடைக்கும் பங்குகளை வாங்கி குவிப்பார்கள். ஆனால், சந்தையின் அடிப்படை புரியாத முதலீட்டாளர்கள், சந்தையின் கவர்ச்சியான எழுச்சியின்போதே உள்ளே வருவார்கள். அப்படி பேராசையுடன் அவர்கள் வாங்கிப்போடும் முதலீடு விரைவிலேயே சரியும்.

இந்த உதாரணம் கிரிப்டோகரன்சிக்கும் பொருந்தும். சுமார் 50 முதல் 80 சதவீதம் சரிவு கண்டிருக்கும் கிரிப்டோ கரன்சிகளில் திடமானவற்றை புத்திசாலி முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்து வருகிறார்கள். அதிகம் சம்பாதிக்கும் இணையத் தொழில்நுட்பம் அறிந்த இளைய வயதினரும், பெரும் செல்வத்தை முடக்க முயலும் பண முதலைகளும் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் தற்போது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இழந்தாலும் பரவாயில்லை என்றளவில் உள்ள தொகையை மட்டுமே ரிஸ்க் எடுத்து கிரிப்டோவில் முடக்குவார்கள். சாதாரண முதலீட்டாளர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் விலகி நின்று வேடிக்கை பார்க்கவும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் பாடம் கற்கவும் மட்டுமே செய்வார்கள்.

பொறுப்பு துறப்பு: கிரிப்டோகரன்சி தொடர்பான முதலீட்டு யோசனைகள் மற்றும் முடிவுகளுக்கு இந்த கட்டுரை பொறுப்பல்ல.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in