வாத்தியார்களுக்கு கற்றுத்தர வந்த கதை சொல்லி!

அந்தியூர் பகுதியில் களைகட்டும் வீதி வகுப்பறைகள்
வாத்தியார்களுக்கு கற்றுத்தர வந்த கதை சொல்லி!
அந்தியூர்புதூர் வீதி வகுப்பறையில்...

‘‘ஊரைச்சுத்திப் பார்க்கப் போறேன்; ஊரைச்சுத்திப் பார்க்கப் போறேன் என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!’’

‘‘ஆமாம்... கோழிக்குஞ்சு!’’

‘‘ஆமாம் ஊரைச்சுத்திப் பார்க்கப் போறேன். ஊரைச்சுத்திப் பார்க்கப்போறேன் என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு... ஆமாம் கோழிக்குஞ்சு!’’

‘‘சரி அப்புறம் என்ன பண்ணுச்சாம் கோழிக்குஞ்சு!?’’

அந்தியூர் வட்டம் கடம்பூர் மலைகளில் வரும் அந்தியூர்புதூர் கிராமத்தின் ஒதுக்குப்புறமாய் உள்ள தெரு. அங்குதான் மேற்படி பாடல்கள் எழுகின்றன. ஒரு பெண்மணி குழந்தைபோல் குதூகலித்துப் பாட, பதிலுக்கு வட்டம் சுற்றி அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியர் எசப்பாட்டு பாடுகிறார்கள். ‘டோலக்கு’ போன்ற இசைக்கருவியை வைத்து மத்தளம் கொட்டிக் கொண்டிருக்கிறார் ஓர் இளைஞர். இந்தப் பெண்மணியை எங்கோ பார்த்திருக்கிறோமே?

புத்தகங்கள் பரிசு...
புத்தகங்கள் பரிசு...

‘அட, நம்ம கதை சொல்லி வனிதாமணி!’ நினைக்கும் நேரம் இல்லை. வடகோட்டு கீழ்வானில் சிறுமின்னல். தெற்கு நோக்கி வந்த பூங்காற்று மழையையும் வாரி இரைக்கிறது. வனிதாமணி மட்டுமல்ல, அந்தக்குழந்தைகளும் ‘ஹேய்’ என்ற சப்தமெழுப்பி அருகில் உள்ள ஒரு ஓலைக் கொட்டடிக்குள் ஓடி ஒதுங்குகிறார்கள். அவர்கள் பின்னாலேயே நாமும் ஒதுங்கிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அது ஒரு வித்தியாசமான நிகழ்வு.

கரோனா காரணமாய் கடம்பூர் மலை கிராமங்களில் பள்ளி செல்லா பழங்குடியின குழந்தைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் பள்ளிகள் நடைபெறாததாலும், ஆன்லைன் வகுப்புக்கான வசதிகள் இல்லாத காரணத்தாலும் இதுவரை தான் படித்த படிப்பையே மறக்கும் விதமாக தன் தாய் தந்தையருடன் கிடைத்த கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். இதைப் பார்த்த சத்தியமங்கலத்தில் உள்ள சுடர் தன்னார்வ அமைப்பு, இந்தப் பள்ளிக் குழந்தைகளை மீட்டெடுக்கும் முகமாக, பள்ளிகள் திறந்ததும் அவர்களை புதுப்பித்து அங்கே அனுப்பும் நோக்கத்திலும் வீதி வகுப்பறைகளை ஏற்படுத்தி உள்ளன. இதுவரை 25 கிராமங்களில் 25 வீதி வகுப்பறைகள் இப்படி ஒரு மாதகாலமாக செயல்படுகின்றன.

அந்தந்த ஊரில் மாலைநேரங்களில் 1 முதல் 10 வரை பள்ளிப் படிக்கும் குழந்தைகளை திரட்டி ஓரிடத்தில் அமர வைக்கும் தன்னார்வலர்கள், அவர்களுக்கு 18 மாத காலமாக மறந்துவிட்ட எண், எழுத்து, கணிதம் அறிவியல் உள்ளிட்ட பள்ளிப்பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றனர். இந்த வகுப்புகளை அந்தந்த கிராமத்தில் உள்ள ப்ளஸ் டூ அல்லது கல்லூரி படிக்கும் மாணவர்கள், இளைஞர்களை ஆசிரியர்களாக வைத்தே பாடம் நடத்துகின்றனர். அவர்களை வெறுமனே ‘இதைப்படி, இதைச் சொல்லு‘ என்று கட்டாயப்படுத்திப் பாடம் எடுப்பதை விட, அந்த குழந்தைகளோடு குழந்தைகளாக ஒன்றி பாடம் எடுப்பதே மேலானது; அதற்கு கதை வடிவமே தோதானது!’ என்று முடிவு செய்து இந்த வீதி வகுப்பறை வாத்தியார்களுக்கு பயிற்சி கொடுக்க கதைசொல்லி வனிதாமணியை கடம்பூருக்கு அழைத்து பயிலரங்கை நடத்தியது சுடர் அமைப்பு.

வீதி வகுப்பறை வாத்தியார்களுக்கு ‘எப்படி கதை வடிவில் குழந்தைகளோடு குழந்தைகளாக ஒன்றி பாடம் எடுக்கலாம்’ என்பதை அக்டோபர் 1-ம் தேதி ஒரு நாள் முழுக்க சொல்லிக் கொடுத்த வனிதாமணி, இறுதியில், அந்தியூர்புதூர் கிராமத்தில் வீதி வகுப்பறையை கூட்டி நேரடியாகவே குழந்தை களுக்கு கதை,பாடல் வடிவில் பாடம் நடத்திக் காட்டினார். அதுதான் நாம் மேலே கண்ட காட்சி.

இதுகுறித்து கதைசொல்லி வனிதாமணியிடம் பேசினோம்.

‘‘மலை கிராமங்களில் அதுவும் பழங்குடியின குழந்தைகள் கல்வி கற்க வருவதே அபூர்வம். அப்படி வந்தாலும் இடைநிற்றல் இல்லாமல் படிப்பது அபூர்வத்திலும் அபூர்வம். அதையெல்லாம் கடந்து அவர்களுக்கு படிப்பின் மீதான நாட்டத்தை சுடர் அமைப்பு ஏற்படுத்தி வந்துள்ளது. இடைநிற்றல் மாணவர்களை வைத்து பாடம் சொல்லிக் கொடுத்து அவர்களை உகந்த பள்ளிகளில் சேர்த்தும் அந்த அமைப்பு சேவை செய்கிறது. அந்த அடிப்படையில் அவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு வந்து ஏற்கெனவே கதை சொல்லி சென்றுள்ளேன்.

இப்போது கரோனா சூழல் அந்தப் பழங்குடி கிராமக் குழந்தைகளின் படிப்பை சுத்தமாகவே புரட்டிப்போட்டு விட்டது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் நிறைய மாணவர்கள், தான் இதுவரை எழுதி வந்த தமிழ் எழுத்துக்களையே மறந்து விட்டனர். ஒன்றும் மூன்றும் நான்கு என்ற கூட்டல் கணக்கைக்கூட சொல்லத் தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது பள்ளிகள் திறக்க அரசு உத்திரவிட்டிருந்தாலும், இந்தப் பிள்ளைகள் உடனே பள்ளிக்குப் போய் ஏற்கெனவே படித்ததை நினைவுபடுத்தி அடுத்த நிலை கல்வியை கற்கும் நிலை இல்லை. அதை சரிசெய்யவே இந்த வீதிவகுப்பறைகளை உருவாக்கியிருப்பதாக சுடர் அமைப்பின் நிறுவனர் நடராஜ் சொன்னார். அப்படியான குழந்தைகளுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்த கதைபாணிதான் சிறந்தது என்பதற்காகவே என்னை அழைத்து பயிற்சி கொடுக்கச் சொன்னார்கள்.

பொதுவாக ‘இதை இப்படி செய். இந்த கணக்கை நீ செஞ்சுட்டு வராட்டி உனக்கு இன்ன தண்டனை. இத்தனை தோப்புக்கரணம் போடணும்!’ என்று சொல்லுவது எல்லாம் வாத்தியார்தனம். அப்படியல்லாமல் குழந்தைகளை நாம் முதலில் ஈர்க்கணும். அவர்கள் ஒன்றரை அடி இருக்கிறார்கள் என்பதற்காக நாம் நமது ஐந்தரை அடி உயரத்தைக் காட்டி பயமுறுத்தக்கூடாது. அந்தக் குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றரை அடி உயரத்திற்கு இறங்கிச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் மனதில் நமக்கு இந்த வாய்ப்பாடு வரலையே என்று இருக்கும். உடனே ‘இந்த வாய்ப்பாடு கூட உனக்குத் தெரியலையா? அவனைப் பாரு. உன்னைவிட சின்னவன். எப்படி சொல்றான் பாரு’ ன்னு சொல்லக்கூடாது. அப்படி சொல்லுவது அந்தக்குழந்தையை நம்மிடம் ஒட்டாமல் செய்து விடும். அதற்குப் பதிலாக, ‘பாருடா... உனக்கு இரண்டாம் வாய்ப்பாடுதானே தெரியலை. உன் வயசுல அத்தை நான் ஒண்ணாம் வாய்பாடே தெரியாம இருந்தேன். நீயாவது கணக்குல ஏழு மார்க் வாங்கியிருக்கே. நான் ரெண்டு மார்க் வாங்கினேன் தெரியுமா?’ன்னு நம்மை கீழிறக்கிப் பேசணும். அதுக்கும் முன்னாடி அவங்களை ஆடல், பாடல், கதை சொல்லல் மூலமா நம்மோட நெருங்கிப் பழக விடணும்.

வீதி வகுப்பறையில் சாக்பீஸ், பிளாக் போர்டு, பேனா, பென்சில் எல்லாம் தேடக்கூடாது. ஒரு மரத்தடியில் பாடம் சொல்லிக் கொடுக்கறோம்னா, ஒண்ணும் ரெண்டும் மூணு, மூணும் மூணும் ஆறுன்னு மரத்திலிருந்து விழுந்த இலைகளை எடுத்து வரிசையாக வைத்தே கூட்டிக் காட்டி எளிமையாக சொல்லிக் கொடுக்கணும். இது போல நிறைய பயிற்சிகளை இந்த பயிலரங்கில் சொல்லிக் கொடுத்திருக்கேன். இதுபோல பாடம் கற்றுக் கொடுக்க கொடுக்க உங்கள் ஒவ்வொருவருக்கும் புதுசு, புதுசா யோசனைகள் அனுபவங்கள் கிடைக்கும். அதை மத்தவங்களோடவும் பகிர்ந்துக்கணும்னும் சொல்லியிருக்கேன். இது எல்லாம் இந்த பழங்குடி குழந்தைகளுக்கான வீதி வகுப்பறைகளுக்கு மட்டுமல்ல, நம்ம சாதாரண பள்ளிகளுக்கும், ஆசிரியர்-மாணவர் உறவுக்கும் பொருந்தும்’’ என்றார் வனிதாமணி.

இந்த வீதி வகுப்பறை மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் 50 சிறார் கதை நூல்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார் வனிதாமணி. “இந்தப் புத்தகங்களை எல்லாம் எல்லோரும் படிக்கணும். அது கிழிந்தாலும், அதை ஒட்ட வச்சு, பத்திரப்படுத்தி படிக்கணும். அதை படிச்சிட்டு ஒருவருக்கொருவர் அவரவர்க்கு புரிஞ்சிட்ட மாதிரி கதைகள் சொல்லிக்கணும். அப்பத்தான் கிரியேட்டிவிட்டி நம்மளுக்குள்ளே வளரும்” என்று வாசிப்பின் மேன்மையை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அழகாய் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் வனிதாமணி.

Related Stories

No stories found.