கத்திப்பாராவுக்கு தூரிகையால் அழகூட்டிய தாரகை!

எண்ணங்களை வண்ணமாக்கும் கௌசிகா
கெளசிகா
கெளசிகா

பொதுமக்கள் சுதந்திரமாகக் கூடவும், இளைப்பாறவும், விருப்பப்படி பொழுதுபோக்கவும் உலகின் புகழ்வாய்ந்த பல நகரங்களின் மையத்தில் சதுக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கம், மாஸ்கோ நகரின் சிவப்பு சதுக்கம், லண்டன் நகரின் ட்ராஃபல்கர் சதுக்கம் என பெயர் சொன்னால்போதும் அவற்றின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்
கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்

அதிலும் டைம் சதுக்கத்தில், ‘இசையின் ராஜா இங்கு வீற்றிருக்கிறார்’ என்ற வாசகத்துடன் இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான ஒளிப்படம் அண்மையில் திரையிடப்பட்டபோது, தமிழர்கள் அனைவரும் பரவசப்பட்டோமே... அந்த அளவுக்குச் சதுக்கங்கள் பெயர்பெற்றவை. சென்னைக்கும் அப்படியொரு பெருமித அடையாளத்தைக் கொடுக்கவே, கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் ரூ.14.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

க்ளோவர் இலை வடிவிலான இரட்டை அடுக்குகொண்ட கத்திப்பாரா மேம்பாலத்துக்குக்கீழே குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், அனைத்து வயதினரும் ஆறஅமர உலாவ புல்வெளி, வகை வகையான உணவருந்தி மகிழ உணவகங்கள், விருப்பப்பட்ட பொருட்களை வாங்கிச்செல்ல கடைகள் என 5.9 லட்ச சதுர அடியில் பிரம்மாண்டமாக கத்திப்பாரா சதுக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் விட, ஆலந்தூரைக் கடந்து ஈக்காட்டுதாங்கலுக்கோ, கிண்டிக்கோ கத்திப்பாரா பாலம் வழியாக வாகனங்களில் செல்பவர்களைக்கூட சதுக்கத்தை நோக்கிச் சுண்டி இழுப்பவை அதன் சுவரெங்கும் வண்ணமயமாகத் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்களே. அவற்றை வரைந்த குழுவின் தலைவி கெளசிகா ராஜேந்திரன். கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தின் பெயர்ப் பலகையை வடிவமைத்ததும் இவரே.

அவரை தொடர்புகொண்டபோது, கோடம்பாக்கம் மேம்பாலத்தின் சர்வீஸ்ரோட்டில் 15 அடி உயர முக்காலி மீது ஏறி, தனது தூரிகை கொண்டு சுவரில் நடனமாடிக் கொண்டிருந்தார் கெளசிகா. இவரது கைவண்ணத்தைப் பார்த்த பிறகு, நிச்சயம் கவின்கலை மாணவியாகத்தான் இருப்பார் என நினைத்துப் பேசினால் ஆச்சரியம் காத்திருந்தது.

சுவரோவியத்தால் சுத்தப்படுத்தலாம்!

சென்னையில் பிறந்து வளர்ந்த கெளசிகா இயற்பியலில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., படித்துவிட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றவர். அதன் பிறகு இயற்பியல் ஆராய்ச்சி மாணவியாக நிறுவனம் ஒன்றில் சிலகாலம் பணியாற்றினார். அப்போதே பல்கலைக்கழகம் தனக்கு அளித்த வீடு முழுமையும் சுவரோவியம் தீட்டி நிரப்பினார்.

கெளசிகா சிறுமியாக இருக்கும்போதே, அவரைத் தன் இஷ்டம்போல வரையச் சொல்லி அழகு பார்த்தவர் அவரது தந்தை ராஜேந்திரன். இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜேந்திரன், எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் மகளுக்கு ஊட்டினார். இதனால் தன் பணிவாழ்க்கையின் திசையை மாற்ற முடிவெடுத்து, டிஜிட்டல் ஓவியம் வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார் கெளசிகா.

“சென்னையில், குப்பை மண்டிக் கிடக்கும் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைந்து தூய்மைப்படுத்துவதில் ஆர்வம் கொண்ட தனது நண்பர் சச்சின் ஜார்ஜுடன் பேசிக்கொண்டிருந்தபோதுதான், பொது இடங்களை தூரிகை ஓவியங்களால் அழகுபடுத்தும் யோசனை தனக்குள் உதித்தது” என்கிறார் கெளசிகா.

”கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணி செய்யும் சச்சின், தான் குடியிருக்கும் பகுதியில் குவியும் குப்பைகளை அகற்ற அவ்வப்போது மாநகராட்சியுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபடுவார். ஆனால், எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் இரண்டே நாட்களில் மீண்டும் பொது இடங்களில் குப்பை குவிந்துவிடுகிறதே என்ன செய்ய என்று சொல்லிக் கொண்டிருந்தார். அத்தகைய இடங்களில் சுவரோவியம் வரைந்து அழகுபடுத்தினால் மீண்டும் குப்பை போட மனசு வராதே என எனக்குச் சட்டெனத் தோன்றியது. இதை, தனி ஆளாகச் செய்வதைவிடத் தன்னார்வலர்களுடன் இணைந்து நிகழ்ச்சியாக நடத்தினால், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வு ஊட்டலாம் என முடிவெடுத்தோம். அப்படித்தான் 2021-ன் தொடக்கத்தில், சூளைமேட்டின் தெரு சுவர்களில் ஓவியம் தீட்டி இந்தப் பயணம் தொடங்கியது” என்கிறார் கெளசிகா.

பெயர் பலகை உருவான கதை...
பெயர் பலகை உருவான கதை...

பெயர் வாங்கித் தந்த பலகை!

கெளசிகாவின் முன்னெடுப்பை பாராட்டிய சென்னை மாநகராட்சி, அடுத்து மெரினா கடற்கரையில் கண்ணகி சிலையைச் சுற்றியுள்ள சுவர்களிலும் நேப்பியர் பாலத்திலும் சுவரோவியம் தீட்டும்படி ஊக்குவித்தது. “மெட்ரோ ரயில் நிலையங்களில் சுவரோவியம் தீட்டும் வாய்ப்பும் தனக்கு கிடைத்தால் மகிழ்ச்சி” என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கெளசிகா தெரிவித்துள்ளார்.

தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள ஓவியக் கலைக்கான முறையான பயிற்சி இல்லாததால், 10 அடி உயர எம்.டி.எஃப். மரப் பலகை வாங்கி அதில் தூரிகைக் கொண்டு தீட்ட வீட்டிலேயே பயிற்சி எடுத்தார் இந்தத் தூரிகைப் பெண். அப்படியே டிஜிட்டல் ஓவியக்கலைஞராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். இப்படி இருக்கும்போதுதான், கத்திப்பாரா சதுக்கத்தை உருவாக்கும் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்) முன்னெடுத்தது.

”நான் வைத்த கோரிக்கையை ஏற்று சி.எம்.ஆர்.எல். அதிகாரிகள், ‘பார்வையாளர்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்படி ஓவியம் தீட்டுங்கள்’ என்று சொன்னார்கள். அதன்படி நான் நிறைய டிசைன்கள் செய்து சமர்ப்பித்தேன். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைக் குழுவாக இணைந்து தீட்டினோம்” என்கிறார் கௌசிகா.

கத்திப்பாரா சதுக்கத்தின் பெயர்ப்பலகையை நவீனமான எழுத்துருவில் அமைத்தது பற்றி நம்மிடம் பேசிய கௌசிகா, “வழக்கமான எழுத்துருவுக்குப் பதில் நான் புதிதாக வடிவமைத்து தரட்டுமா என்று ஆர்வத்தில் கேட்டு கேலிகிராஃபி மாதிரி டிஜிட்டலாக எழுதிக் கொடுத்தேன். ஆனால், அதுவே இறுதியாகத் தேர்வாகும் என கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. பெயர் பலகையைப் பார்த்தபோதுதான் எனக்கே தெரிந்தது. அதனால் ரெட்டிப்பு மகிழ்ச்சி” என்றார்.

அன்பைப் பொழியும் மக்கள்!

இதனிடையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துடன் இணைந்து, லாக் நகரில் சிதிலமடைந்த கட்டிடத்தை அப்பகுதி சிறுவர்களுடன் கைகோத்து அழகுபடுத்தும் பணியிலும் கெளசிகா இறங்கினார். அடுத்ததாக, கண்ணகி நகரில் பாழடைந்த சுவர்களையும் அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளையும் சீரமைத்து குழந்தைகள் மிதிவண்டி ஓட்டியபடி சறுக்கி விளையாடும் பூங்காவாக மாற்றும் வேலையில் மும்முரமாக உள்ளார்.

ஓவியமில்லா சுவர்
ஓவியமில்லா சுவர்
தூரிகை செய்த மாயம்
தூரிகை செய்த மாயம்

”இளம் பெண்ணான நீங்கள் நடுத்தெருவில் ஓவியம் தீட்டுவதை சென்னை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?” எனக் கேட்டபோது, “நான் வரைவதைப் பார்த்து சிறுவர்கள் ஆர்வத்துடன் நெருங்கி வருகிறார்கள். அவர்களின் கையிலும் தூரிகை கொடுத்து வரையச் சொல்கிறேன். காலையிலிருந்து வெயிலில் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து, பழ ஜூஸ் வாங்கித் தந்த பெரியவர்கள் இருக்கிறார்கள். சிலர் எங்களுடனே நின்று வரைவதையெல்லாம் பார்த்து, பிறகு சாப்பிட இறங்கும்போது அந்தப் பகுதியின் கடந்த கால வரலாற்றையெல்லாம் விளக்கியிருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக கோடம்பாக்கம் பிரிட்ஜில்தான் வரைந்துகொண்டிருக்கிறேன். இது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதி என்பதால், நாங்கள் பாதுகாப்பாக வேலை செய்யப் போக்குவரத்தை சரி செய்யச் சிலர் கனிவோடு உதவினர். இன்னும் சிலர் அவ்வப்போது எங்களுடன் சேர்ந்து ஓவியம் வரைந்துவிட்டுச் செல்வார்கள். இப்படி ஆர்வத்தில் என்னை மறந்து ஈடுபட்ட ஒரு கலை என்னுடைய வாழ்க்கைப் பணியாக மாறிக் கொண்டிருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பேசி விடைகொடுத்தார் தூரிகையின் தாரகை கெளசிகா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in