லென்ஸ் சிமிட்டும் நேரம் - 29

கதை சொல்லும் கழுகுமலை!
லென்ஸ் சிமிட்டும் நேரம் - 29

சித்திரைத் திருவிழாவுக்காக மதுரைக்குப் போயிருந்த சமயம் சின்னதாய் ஒரு கேப் கிடைத்தது. அதை உபயோகமாக கழிக்க நினைத்து கழுகுமலைக்குச் சென்றுவந்தோம்.

கோவில்பட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் கழுகுமலை. அந்தக் காலத்தில் இம்மலை திருமலை, திருநெச்சுரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இம்மலையின் கீழ்ப்பாகத்தில் வெட்டுவான் கோயிலும், நடுவில் அய்யனார் கோயிலும், மலை உச்சியில் சின்னதாய் ஓர் முருகன் கோயிலும் இருக்கின்றன. காமதேனுவின் ‘தொல்லியல் பார்வை’ தொடரில் இந்தக் கோயில் குறித்து சகோதரர் ரமேஷ் முத்தையன் அவரது தொல்லியல் கண்கொண்டு விளக்கினார். நான் எனது பார்வையில் விவரிக்கிறேன்.

சற்று ஆர்வக்கோளாறு காரணமாக, காலை 6 மணிக்கே நாங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டோம். அதனால் 8.30 மணிக்கெல்லாம் கழுகுமலையை அடைந்தே விட்டோம். வெட்டுவான் கோயில், தொல்லியல் துறையின் கீழ் இருக்கிறது. அதன் காவலாளிக்கு போன்பொட்டுக் கேட்டால், “10 மணிக்குத் தான் வந்து கேட்டைத் திறப்பேன்” எனக் கறாராகக் கூறிவிட்டார். அவர் வரும் வரைக்கும் அங்கேயே காத்திருந்தோம்.

பாண்டியர்கள் காலத்தில் சமைக்கப்பட்ட வெட்டுவான் கோயில் 7.5 மீட்டர் உயரமான ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இது எல்லோராவின் கைலாசநாதர் கோயில், பீஜாப்பூரின் பட்டடக்கல் கோயில், பல்லவர்களின் மாமல்லபுரக் கோயில் ஆகியவற்றின் பாணியில் கட்டப்பட்டுள்ளது. முழுமை பெறாத இக்கோயிலின் கோபுரத்தில், உமா மகேஸ்வரர், தக்‌ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் சிலைகளை செதுக்கி இருக்கின்றனர். இவற்றையும் சேர்த்து மொத்தம் 122 சிலைகள் இக்கோபுரத்தில் காணப்படுகின்றன.

மலையின் நடுவே இருக்கும் அய்யனார் கோயிலுக்கு அருகே ஓர் பெரிய ஆலமரத்தின் நிழலில், சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் காணப்படுகின்றன. இவற்றுடன் சில கல்வெட்டுகளும் இருப்பதால் பக்தர்கள் இங்கே கால்நடைகளை உயிர் பலியிடுவதற்கு தடை விதித்திருக்கிறது தொல்லியல் துறை. அய்யனார் கோயில் வரை சிரமமின்றி மலை ஏறிவிட முடிகிறது. அதற்கு மேல் சற்று கடினமாகத் தான் இருந்தது. எனினும் முதல் தடவை என்பதால் மலை உச்சியைப் பார்க்கும் ஆர்வத்தில் விடா முயற்சியுடன் ஏறிவிட்டோம்.

மலை உச்சியில் சின்னதாய் ஒரு முருகன் கோயில் இருக்கிறது. அது சமீபத்தில் கட்டியது போல் தெரிந்தது. மேலே ஏற கடினமாக இருந்தாலும், மலையின் கீழ் இருக்கும் கிராமங்களின் அழகும், அங்கு சில்லென வீசிய காற்றும் மேலேறி வந்த களைப்பை தெரியாமல் செய்தன. கொஞ்ச நேரம் இயற்கை அழகை எல்லாம் ரசித்துவிட்டு பின்பு மெதுவாக கீழே இறங்கி வந்தோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in