லென்ஸ் சிமிட்டும் நேரம் - 30

என்னைச் சிறைபிடித்த செம்பருத்தி!
லென்ஸ் சிமிட்டும் நேரம் - 30
Vanila

இந்த அத்தியாயத்தை அலங்கரிக்கப் போவது, என் வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த செம்பருத்திப் பூக்கள். ஓருநாள், செம்பருத்தியை வைத்துப் புதிதாக ஒரு படம் எடுத்தேன். அதன் பிறகு எனது ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்தபோது, எத்தனை ரக செம்பருத்திகளை க்ளிக்கி விட்டோம் என எனக்கு நானே வியந்து கொண்டேன். எத்தனை வண்ணங்களில் வந்தாலும் சிவப்பு செம்பருத்தியின் அழகே தனிதான். எங்கள் வீட்டு சிவப்புச் செம்பருத்திகளைப் பார்க்கும்போதே, எனக்குள் இனம் புரியாத உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அத்தகைய உற்சாகம் உங்களையும் துரத்துகிறதா என இந்தப் படங்களைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

இந்த சிவப்புச் செம்பருத்தி என் வீட்டுக்கு வந்ததே ஒரு சுவாரசியமான விஷயம். எனது கடைக்குட்டி மகன் சின்னவனாய் இருக்கும்போது, வெளியில் தூக்கிச்சென்று வேடிக்கை காட்டித்தான் சோறு ஊட்டமுடியும். ஒருநாள் அப்படியே நான் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த சமயம், தெருவில் தள்ளு வண்டியில் ஒருவர் செடிகளை விற்றுக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்ததுமே சின்னவனுக்கு குஷி. உடனே, அவரைக் கையைக்காட்டி அங்கே போகவேண்டும் என அடம்பிடித்தான்.

அவரும் இவனைப் பார்த்துவிட்டு நின்றே விட்டார். அருகில் போனதுமே முதலில் அவன் கேட்டது இந்த செம்பருத்திச் செடியைத் தான். எனக்கென்ன வருத்தம் என்றால், இதற்கு முன்பு நான் வாங்கிய செம்பருத்திச் செடிகள் எல்லாம் பூச்சிவந்து பட்டுப் போய்விட்டன. இந்தச் செடியாவது தாங்குமா என்று எனக்குள் ஒரு சிறு சஞ்சலம். ஆனால், மகனார் விட்டால் தானே... அடம்பிடித்து இந்தச் செடியை வாங்கவே வைத்துவிட்டான்.

ஒரு சமயம் பாலாஜி வியாபார நிமித்தமாக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. அவருக்கு மல்லிகை என்றாலே ஒரு தனி பிரியம். கோடையில் மல்லிகை நன்றாக மொட்டு விட்டு மலரத்தொடங்கிய வேளை. வெளிநாடு செல்பவர்கள் சில நேரத்தில் தனிமையாக இருப்பதைப் போல் உணருவார்கள். அப்படி அபர் தனிமையை உணர்ந்த வேளையில், "இங்க மல்லி நல்லா பூக்கத் தொடங்கிருச்சு”ன்னு போனில் சொன்னேன். “அப்படியா... நான் பார்க்கணுமே” என்று கேட்ட பாலாஜிக்காக நான் எடுத்த படங்கள் தான் இந்த ஆல்பத்தில் இருக்கும் மல்லிகள்.

வெறும் மல்லியை மட்டும் படமெடுத்தால் அவ்வளவு நல்ல எஃபெக்ட் இருக்காது. அதனால், பாலாஜிக்கு மிகவும் பிடித்தமான ரெட் கலரில் ஏதாவது சேர்க்கலாம் என்று நினைத்த போது செம்பருத்தி கண்முன்னால் வந்தது. உடனே அதை அருகில் வைத்தேன். என்னிடம் எக்ஸ்ட்ரா ஃபிளாஷ் எதுவும் இல்லை. ஜன்னலில் இருந்து வரும் சூரிய ஒளியிலேயே படத்தை எடுக்கலாம் என்று நினைத்து ஜன்னல் அருகே பூக்களை வைத்துப் படம் எடுத்தேன். அப்படி எடுக்கையில் செம்பருத்தி மீது வெளிச்சம் அவ்வளவாக விழவில்லை. அதனால், ரெட் கலரிலேயே ஒரு மெழுகையும் பக்கத்தில் வைத்து எடுத்தேன்.

அனுபவித்து எடுத்தப் படங்களை அப்படியே பாலாஜிக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு அத்தனை சந்தோஷம். அந்த சந்தோஷத்தைப் பார்த்து எனக்கும் ஒரு திருப்தி.

வண்டிக்காரரிடம் வாங்கும் பொழுது என் இடுப்பு வரை இருந்த இந்தச் செடி, இப்போது 2 ஆள் உயரம் வளர்ந்து நிற்கிறது. ஒருவிதத்தில் இதற்காக சின்னவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவன் அன்று அடம்பிடித்து வாங்கியதால் தானே, இந்தச் செம்பருத்தி எங்கள் வீட்டுத் தோட்டத்தின் அங்கமானது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in