லென்ஸ் சிமிட்டும் நேரம் - 26

கண்ணுக்கு விருந்து வைக்கும் கடலைச் சந்தை!
லென்ஸ் சிமிட்டும் நேரம் - 26
Vanila Balaji

பெங்களூருவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 வருடங்களாகத்தான், பெங்களூருவையும் அதைச் சுற்றி இருக்கும் சிறு சிறு ஊர்களையும் சுற்றிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். எல்லாம் போட்டோகிராபியின் உபயம். ஊர்களை மட்டுமல்லாது பெங்களூருவில் நடக்கும் பாரம்பரிய விழாக்களையும், திருவிழாக்களையும்கூட புகைப்படக் கலைதான் என்னைக் கவனிக்க வைக்கிறது. அப்படியான பாரம்பரியமிக்க நிகழ்வுகளில் ஒன்றுதான் ‘கடலே காய் பரிக்ஷே’ எனும் கடலைச் சந்தை.

கார்த்திகை மாதத்து பவுர்ணமி நாளில், பெங்களூருவைச் சுற்றியுள்ள கிராமங்களின் கடலை விவசாயிகள், தங்களின் முதல் சாகுபடி கடலையை, ‘பசவா’ எனக் கூறப்படும் சிவனின் ‘நந்தி’க்கு காணிக்கை கொடுப்பார்கள். அதன்பிறகு மீதமிருக்கும் கடலையை அங்குள்ள கோயில் வீதியில் வைத்து விற்பார்கள்.

நான் இந்த வருடம்தான் இந்த சந்தைக்குச் சென்றேன். சில படங்களையும் எடுத்தேன். முதலில் என்னுடைய டூ வீலரில் செல்லலாம் என்றுதான் நினைத்தேன். கூட்டம் அதிகமாக இருக்கும் என கேள்விப்பட்டதால், பயணம் ஆட்டோவுக்கு மாறியது. ஆட்டோவை இரண்டு தெருவுக்கு முன்னதாக நிறுத்தி இறங்க வேண்டிய சூழல். அந்த அளவுக்கு கூட்டம் மூச்சு முட்டியது.

கூட்டத்தைப் பார்த்ததும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இதில் எப்படி உள்ளே சென்று வெளியில் வருவதென்று. ஒரு வழியாக உள்ளே நுழைந்து விட்டேன். ஆனால், எனக்கு நடக்க வேண்டிய அவசியமே இல்லாமல் அங்கிருந்த கூட்டமே என்னை நகர்த்திக் கூட்டிச் சென்றது.

கடலை வியாபாரிகள் மட்டுமல்லாது, கலர் கலர் ராட்டினங்கள், கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பவர்கள், களிமண் சிற்பங்கள், கலர் மிட்டாய் விற்பவர்கள் என ஏராளமானோர் கூடி தெருவையே திருவிழாக் கோலமாக்கி இருந்தார்கள்.

வீட்டில் இருந்து கிளம்பும்போதே பாலிதீன் கவர்கள் வாங்கக்கூடாது என்றெண்ணி பெரிய துணிப் பையைக் கொண்டு சென்றிருந்தேன். எதற்கு பை என்கிறீர்களா? எல்லாம் டூ இன் ஒன் ஐடியாதான். போட்டோ எடுத்துவிட்டு வெறும்கையோடு வீடு திரும்பாமல், கொஞ்சம் கடலையும் வாங்கிவரத்தான் அந்தத் துணிப்பை.

நான் தான் துணிப்பையைத் தூக்கிக்கொண்டு போயிருந்தேன். ஆனால், சந்தைக்கு வந்த அத்தனை பேரும் பாலிதீன் கவர்களை சர்வசாதாரணமாகக் கையாண்டார்கள். தமிழக முதல்வர் மஞ்சள் பை இயக்கம் தொடங்கி இருப்பது போல், கர்நாடக முதல்வரும் பாலிதீனை ஒழிக்க ஒரு இயக்கம் தொடங்கினால் நல்லது.

இரண்டு மூன்று வியாபாரிகளிடம் நான் கடலை வாங்கினேன். நான் துணிப்பையை எடுப்பதற்கு முன்பாகவே அவர்கள் அவசரமாய் பாலிதீன் பைகளை எடுத்தார்கள். பாலிதீன் கவர் வேண்டாம் என்று அவர்களிடம் கண்டிப்பாக மறுத்துவிட்டு, துணிப் பையில் கடலையை வாங்கினேன். இத்தனைக்கும், அருகிலுள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு வந்த மக்களிடம் பாலிதீன் பைகளை தவிர்த்து துணிப் பைகளை உபயோகியுங்கள் என சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தனர். அப்படியும் யாரும் அதை சட்டைசெய்ததாக தெரியவில்லை.

மதுரையில் மட்டுமே நான் பார்த்த ஜவ்வு மிட்டாய், இங்கும் விற்றதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பெங்களூரு பக்கம் இம்மாதியான மிட்டாய்க்காரரை நான் பார்த்ததே இல்லை. இம்மிட்டாய்களை, ரயில், பஸ், பொம்மை என பல வடிவங்களில் வளைத்து கையில் வாட்ச் மாதிரி கட்டி விடுவார். கடைசியில் கொஞ்சம் கன்னத்திலும் ஒட்டிவிடுவார். இதையெல்லாம் பார்த்த பிறகு மதுரையின் மலரும் நினைவுகள் குறும்படமாக எனக்குள் ஓடி மறைந்தது.

போதும் என்று திகட்டுமளவுக்கு கடலைக்கா சந்தையை கேமராவில் விழுங்கிக் கொண்டு, துணிப்பையில் சின்ன மூட்டையாகச் சேர்ந்திருந்த கடலையையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்ப ஆட்டோ பிடித்தேன்.

Related Stories

No stories found.