லென்ஸ் சிமிட்டும் நேரம் - 25

ஹோசஹோலாலு லெட்சுமிநாராயணர் கோயில்
லென்ஸ் சிமிட்டும் நேரம் - 25

மழையும் குளிரும் கைகோத்த ரம்மியமான செப்டம்பர் மாத காலைப் பொழுதில், மாண்டியா மாவட்டத்தின் ஹோசஹோலாலு எனும் கிராமத்தில் அமைந்துள்ள அழகான லட்சுமி நாராயணர் கோயிலுக்குப் பயணமானோம்.

இந்தக் கோவிலைப் பற்றி அதிகம் இணையத்தில் படித்திருந்ததால், நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் சற்று அதிகமாகவே இருந்தது. இக்கிராமத்துக்குச் செல்ல பெங்களூருவிலிருந்து 2 வழிகள் உள்ளன. அதில் ஒன்று, இயற்கை அழகு அதிகம் கொட்டிக் கிடக்கும் கிராமங்களின் வழியே பயணிப்பது. நாங்கள் அந்த வழியே செல்ல முடிவெடுத்தோம். வழிநெடுகிலும் இயற்கையின் அழகை ரசித்தபடி மூன்றரை மணி நேரத்தில் கோயிலைச் சென்றடைந்தோம்.

13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் ஹொய்சாளர்கள் காலத்து கட்டிடக்கலையைச் சேர்ந்தது. மூன்று கர்பக்கிரஹங்களைக் கொண்ட இக்கோயில், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட அதிஷ்டானத்தைக் கொண்டுள்ளது. அதில் ராமாயணம், மஹாபாரதம் மற்றும் பாகவத புராணங்களில் வரும் காட்சிகளை மிக நேர்த்தியாக செதுக்கி இருக்கின்றனர்.

மூன்று கர்ப்பக்கிரகங்களில் நடுவில் இருப்பது நாராயணருக்கும், தெற்கில் வேணுகோபாலருக்கும், வடக்கில் இருப்பது லட்சுமி நரசிம்மருக்குமானது. மேலும், கர்ப்பக்கிரகத்தின் மேல் இருக்கும் விமானங்களில், திராவிட மற்றும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த கோயில்களில் காணப்படும் வடிவங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

நான்கரை அடி மேடையின் மேல் கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலின் ஒவ்வொரு மூலையிலும் யானைகளின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் முழுவதும் 'chloritic schist' எனப்படும் ஒருவித கல்லால் செதுக்கி இருக்கின்றனர். இக்கல்லினால் செதுக்கப்படும் சிற்பங்களில் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டுவர முடியும்.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் இருந்த சிற்பங்களின் அழகை ரசித்தபடியே, அந்த அழகை எனது கேமராவிலும் படமெடுத்துக் கொண்டேன். சிற்பங்கள் அனைத்தும் பேலூர், ஹளபேடு மற்றும் சோமநாதபுரத்தின் சிற்பங்களை ஞாபகப்படுத்தினாலும், இன்னவென்று சொல்லமுடியாத விதத்தில் அவை தனித்துவமாகத்தான் என் கண்களுக்கு காட்சி அளித்தன. நான் மேற்கூறிய கோயில்கள் பிரபலம் அடைந்ததைப்போல், இத்தலம் பிரபலமடையவில்லை. அதனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. நாங்கள் அங்கு சென்றிருந்த சமயம் எங்களைத் தவிர அங்கு யாரும் இல்லை. அதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் அமைதியாகச் சுற்றிப்பார்க்க முடிந்தது.

எதை விடுவது எதை படமெடுப்பது என தெரியவில்லை. சிற்பங்கள் அனைத்தும் அத்தனை அழகு. வீட்டுக்கு வந்து கணினியில் படங்களைப் பார்க்கும்போது, அங்கு எடுத்த ஒவ்வொரு படமும் என் மனதுக்குப் பிடித்த படங்களாகவே தோன்றின. அதிலிருந்து சில படங்களை உங்களுக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

Related Stories

No stories found.