லென்ஸ் சிமிட்டும் நேரம் - 15

ஸ்ரவணபெட்டா சிற்பங்கள்
லென்ஸ் சிமிட்டும் நேரம் - 15
ஸ்ரவணபெட்டா சிலைVanila Balaji

2016-ல், சின்னதாய் மைசூர் ட்ரிப் ஒன்று வைத்திருந்தோம். அப்படிச் செல்லும் வழியில், கொக்கரே பெல்லூர் எனும் ஊர் பக்கத்தில் அமைந்துள்ள ‘அர்திபுரா’ எனும் கிராமத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.

அர்திபுராவில் சமண மதத்தைச் சேர்ந்த சிலைகளும், கோயில் வளாகம் ஒன்றும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தித்தாளில் படித்திருந்தேன். அதையெல்லாம் பார்த்து படம்பிடித்துவிட்டு வரலாம் என்பதற்காகவே, நாங்கள் அங்கு சென்றோம். படிக்கும் பிள்ளைகளுக்கும் இது பிரயோஜனமாய் இருக்கும் என்பதால், அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம்.

கொக்கரே பெல்லூருக்கு தெற்கே 5 கி.மீ தொலைவில் இருக்கிறது அர்திபுரா. அங்குள்ள ஸ்ரவணபெட்டா மற்றும் சிக்கபெட்டா என்ற 2 சிறு குன்றுகளின் மேல்தான், அப்போது தொல்லியல் துறையின் அகழாய்வு நடந்துகொண்டிருந்தது.

இந்த ஆய்வில், சமணத்தைப் பின்பற்றிய மேற்கு கங்கர்கள் வம்சத்தினர் வழிபட்டுவந்த கோயில் வளாகத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோயில்கள் கருங்கல்லால் ஆன அஸ்திவாரங்களையும் (அதிஷ்டானம்) செங்கல் சுவர்களையும் கொண்டிருந்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தவை. இவை ‘ஷ்ராவணபெலகோலா’ கல்வெட்டுகளை விட பழமையானவை.

இங்கு துவாரபாலகர்கள், முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் மற்றும் சில பெண் தெய்வங்களுடைய சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளின் சிற்ப வேலைகளில் இருந்து, இவை ஹொய்சாளர்கள் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றன. ஸ்ரவணபெட்டாவில் நிறுவப்பட்ட பாகுபலியின் சிலை, ஷ்ராவணபெலகோலாவின் பாகுபலி சிலையை விட பழமை வாய்ந்தது.

சுட்டெரித்த மார்ச் மாத வெயிலை எல்லாம் பொருட்படுத்தாமல், அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளின் அழகை ரசித்துக் கொண்டே, அந்த 2 குன்றுகளையும் சுற்றிப் பார்த்தோம். நல்ல வேளையாக பிள்ளைகளுக்கும் இந்தப் பயணம் பிடித்துப்போனது. இதுவும் ரொம்ப முக்கியமான விஷயம் இல்லையா?

Related Stories

No stories found.