லென்ஸ் சிமிட்டும் நேரம் - 5

என் கனவுலகுப் பூக்கள்!
லென்ஸ் சிமிட்டும் நேரம் - 5
Vanila Balaji

பூக்களின் ரசிகையான நான், அந்தப் பூக்களை படமெடுப்பதெற்கென்றே வீட்டின் அருகில் இருக்கும் நர்சரியில் இருந்தும், லால்பாக்கில் இருந்தும் சில பூச்செடிகளை வாங்கி வந்து வீட்டில் வளர்க்க ஆரம்பித்தேன். அதில் முக்கியமாக இருப்பவை என்னுடைய மழை லில்லிச் செடிகள்.

மழை லில்லி, மழைக் காலங்களில் மழைநீர் பட்டவுடன் பூப்பூக்கத் தொடங்கும். என்னுடைய பூக்களின் படங்களுள் லில்லிகளே அதிகமாக இருக்கும். அவைதான் பராமரிக்க மிகவும் எளிது. அடுத்தது, ரோஜா செடிகள். அவற்றுள், பட்டன் ரோஜா செடிகள் பராமரிக்க மிகவும் எளிதாகவும், அதிக பூக்களும் பூக்ககக் கூடியவை.

அதிகம் பூக்கள் கொடுக்கக்கூடிய செடிகள் ஏன் என்று கூறி விடுகிறேன். பூக்களைப் படமெடுக்கும்போது, அவற்றின் நிறத்துக்கு மாறான நிறத்தில் பின்புலம் இருப்பது ஒரு வகை என்றால், பூக்களின் நிறத்திலேயே பின்புலம் இருப்பது மற்றொரு வகை. 2-வது வகை மிகுந்த அழகைத் தரும் என்பது என்னுடைய எண்ணம். அப்படிப் பின்புலம் ஒரே வண்ணத்தில் இருக்காத பட்சத்தில், டபுள் எக்ஸ்போசர் (Double Exposure) மாதிரியான உத்திகளையும் கையாண்டிருக்கிறேன்.

வீட்டில் இருக்கும் செடிகளில் பூக்கள் பூக்கவில்லை என்றால், பக்கத்து சாலையில் இருக்கும் பூச்செண்டு கடைக்குப் போனால் அழகழகான பூக்கள் கிடைக்கும். அதில் 2 வகைகளை வாங்கி வந்தால் 3, 4 அழகான படங்கள் கிடைத்துவிடும். அப்படி எடுத்த படங்களும் ஏராளம்.

மேலும், ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஊட்டிக்கோ , கொடைக்கானலுக்கோ சென்று வருவது வழக்கம். அந்த சமயங்களில் அங்கு கிடைக்கும் பூக்களின் படங்களை பலநாட்கள் ரசித்து ரசித்து பிராசஸிங் செய்து பதிவிட்டு வந்திருக்கிறேன்.

பூக்களைப் படமெடுத்து அலுத்துவிடும்போது நத்தைகளையும் வைத்துப் படமெடுத்திருக்கிறேன். நத்தைகளை, முந்தைய இரவே பிடித்துக் கொண்டுவந்து அவைகளுக்கு வேண்டிய உணவுகளைக் கொடுத்து 2, 3 நாட்கள் வளர்ப்பது என் 2-வது மகனின் மனதுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை மறந்து பிள்ளைகளை விடுவிக்க இம்மாதிரியான யோசனைகள் எனக்கு அதிகம் உதவியாக இருந்திருக்கின்றன.

பூக்களின் பின்புலம் அழகாக வரவேண்டும் என்பதற்காக, சில பழைய லென்ஸ்களையும் வாங்கி உபயோகப்படுத்தி இருக்கிறேன். அதில், Helios மற்றும் Tair லென்ஸ்கள் முக்கியமானவை.

லாக் டவுண் காலத்தில் எங்கும் நகரமுடியவில்லை. அதனால், என்னிடம் உள்ள பழைய படங்களையே அதிகம் பதிவிடுகிறேன். எனினும், அவற்றை ப்ராசஸ் செய்யும் விதத்தில் சற்று மாற்றங்கள் செய்து பதிவு செய்கிறேன். இப்படிச் செய்வதால், ஏற்கெனவே பதிவிட்ட படங்களையும் வேறுமாதிரியாக ப்ராசஸ் செய்து, முற்றிலும் வேறுபட்ட படமாக மாற்றமுடிகிறது. ஆக, கேமராவில் படங்கள் எடுப்பது பாதி வேலைதான். மீதி வேலை, அதை அழகாக ப்ராசஸ் செய்வதில்தான் இருக்கிறது.

ஒரு படத்தை ப்ராசஸ் செய்ய நான் 10 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. லாக் டவுண் காலத்தில் என்னுடைய படங்களுக்கு புதுவிதமாக ப்ராசஸிங் செய்யலாம் என யோசிக்கையில், கிடைத்ததுதான் இந்த Dreamy World Project யோசனை. எப்போதுமே என்னுடைய படங்களில் பூக்களின் வண்ணத்தை ஓர் அளவை விட அதிகமாக மாற்றியது கிடையாது. ஆனால், அவற்றை அப்படியே எதிர்மறையான வண்ணங்களுக்கு மாற்றினால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தினால் உருவானதே, இந்தக் கனவுலகு பூக்கள். அவற்றை நிஜ உலகில் காணமுடியாது. நம் (என்) கற்பனையில் மட்டுமே கா முடியும். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்துடன் இந்த வேலையை மேற்கொண்டேன். உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in