இசைவலம்: சிருங்கார பக்தியைப் போற்றும் நௌகா சரிதம்!

இசைவலம்: சிருங்கார பக்தியைப் போற்றும் நௌகா சரிதம்!

திருவையாறில் தியாகராஜரின் 175-வது ஆராதனை விழா, ஒமைக்ரான் பெருந்தொற்று அச்சத்தால் பொதுமக்களுக்கு அனுமதி இன்றி, அரசின் வழிகாட்டு நெறிகளின்படி நடக்கவிருக்கிறது. பாரம்பரியமாக தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை, திரளான இசைக் கலைஞர்கள் பாடியும் வாத்தியங்களை வாசித்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள். நாம் சற்றே இதிலிருந்து விலகி, தியாகராஜரின் நௌகா சரிதத்தைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதன்மூலம் அவருக்கு நமக்கான அஞ்சலியைப் பதிவுசெய்வோம்!

தியாகராஜரையும் ராம நாமத்தையும் பிரிக்க முடியாது. அதேபோல் அவருடைய கீர்த்தனைகள் அத்தனையும் பக்தியை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் தாஸ பாவத்தில் அமைபவை. இதற்கு மாறாக தாஸ பாவத்திலிருந்து முழுவதுமாக விலகாமலும் அதேசமயத்தில் சிருங்கார பக்தியையும் கத்தி மேல் நடப்பது போல் தியாகராஜர் எழுதியிருக்கும் படைப்பு நௌகா சரிதம். சிருங்கார பக்தியை அடிப்படையாகக் கொண்ட நௌகா சரிதத்தையும் கொண்டாட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எண்ணற்ற ராம நாம கீர்த்தனைகளை எழுதியிருக்கும் தியாகராஜர், ‘யக்ச கானம்’ என்னும் இசை நாட்டிய மரபைப் பின்பற்றி பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரிதம் ஆகிய படைப்புகளையும் எழுதியிருக்கிறார்.

இதில் பிரகலாத பக்தி விஜயம் பிரகலாதனின் பக்தியைப் போற்றுவது. நௌகா சரிதம், கோபியரின் கர்வத்தைக் கண்ணன் அடக்குவது.

கோகுலத்தில் ஒரு மாலைப் பொழுது. காற்றில் தவழ்ந்துவரும் குழலோசையைக் கேட்டவுனேயே கண்ணனைத் தேடத் தொடங்குகின்றனர் கோபியர். எங்கெல்லாமோ தேடி ஓய்ந்து யமுனையின் கரையில் கண்ணனைக் காண்கின்றனர் கோபியர். அங்கிருக்கும் ஓர் ஓடத்தில் கோபியர் பயணிக்க விரும்புகின்றனர். கண்ணனையும் உடன் அழைத்துச் செல்வதா, வேண்டாமா என்று ஒரு நொடி யோசிக்கின்றனர் கோபியர். அந்தச் சந்தேக நொடிதான் கண்ணனின் திருவிளையாடலுக்கு அடிப்படை. “உங்களை ஆபத்திலிருந்து காப்பேன்” என்கிறான் கண்ணன்.

‘சரி இருக்கட்டும்’ என்று கண்ணனையும் சேர்த்துக்கொண்டு கோபியர் ஓடத்தில் பயணிக்கின்றனர். யமுனையில் ஓடம் தவழ்ந்து செல்ல, ஓடத்தில் கோபியரின் மகிழ்ச்சியும் தங்களை அலங்கரித்துக்கொள்வதும், தாம்பூலங்களை பரிமாறிக் கொள்வதும், தங்களின் அழகைப் பரஸ்பரம் புகழ்ந்து கொள்வதும், தங்களின் அழகுக்கு மும்மூர்த்திகளும் ஏன் இந்தக் கண்ணனுமே நமக்கு அடிமைதான் என்று கர்வமாய்ப் பேசுகிறார்கள். தன்னுடைய ஆற்றலை, காதலை, பாராக்கிரமத்தை கோபியரே கண்டுகொள்ளவில்லை என்றால், கண்ணன் விட்டுவிடுவானா? திடீரென்று இடி, மின்னலுடன் அடைமழை பெய்கிறது. ஓடத்தில் துளை விழுந்து ஓடத்தில் நீர் நிரம்புகிறது. கோபியர்களோ யமுனையிடம் தங்களைக் காப்பாற்ற வேண்டுகிறார்கள். இறுதியில் கண்ணனிடமே காப்பாற்ற வழி கேட்கிறார்கள். ‘கண்ணனுக்கு என்ன தெரியும்?’ என்று இருந்த கோபியர்கள், கண்ணனிடமே சரணாகதி அடைந்ததால், கரை சேர்கின்றனர்.

இந்த நௌகா சரித்திரத்தை முழுதாக, அனைத்திந்திய வானொலி நிலையம் காணொலியாக வெளியிட்டிருக்கின்றனர். மணி கிருஷ்ணசுவாமி, ஆர்.வேதவள்ளி, எஸ்.சுகுணா, மானாமதுரை நாகலட்சுமி, டி.ஜி.பத்ரிநாராயணன் ஆகிய கலைஞர்களின் சேர்ந்திசையில் இந்தக் காணொலியைத் தயாரித்திருக்கிறார் முடிகொண்டான் வெங்கட்ராம அய்யர்.

நௌகா சரிதம் காணொலியைக் காண: https://www.youtube.com/watch?v=mHWKkWcuEJI

அவளே பிணி; அவளே மருந்து!

‘அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கலைகளின் ஆலயம்’ என்று தொடங்கி, காதலியை தமிழோடு ஒப்புமைப்படுத்தும் ஒரு பழைய திரைப்பாடல். இப்போதெல்லாம் காதலியைக் கவர நாய்ப்படாத பாடு படுகிறார்கள் இளைஞர்கள்!

காதலியின் முகவரியைக் கேட்டதெல்லாம் அந்தக் காலம். ‘பெண்ணே கொஞ்சம் நில்லடி... உன் இன்ஸ்டா ஐடி சொல்லடி..’ எனத் தொடங்கும் பாடலில் அடுத்தடுத்து வரும் வரிகள் நம்மை அசரடிக்கின்றன. பாடலைப் பாடியிருக்கும் விதுன் கோபாலும் பாடலுக்கான காட்சிகளின் தொகுப்பும் ரசனையோடு இருக்கின்றன.

“நீ காதல் பட்டாம்பூச்சி பசி தாகம் மறந்தேபோச்சி

நீ என்னைத் தாண்டிப்போக பத்திக்கிச்சி காதல்

உன் பேரை என் நெஞ்சில் குத்திக்கொள்ளட்டா

ஊரெங்கும் உன் போலே சிற்பம் வைக்கட்டா

நான் உந்தன் தலையாட்டும் பொம்மை அல்லவா

நீ காட்டும் திசை போகும் ‘பப்பி’ அல்லவா?”

என்று வர்ணனையில் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

பாடல் அமைதியான ஓடையாகச் சென்றாலும் இறுதியில் அதிரடியாக, சொல்லிசைக் கலைஞர் மிஸ்டர் ஆன்ட்டின் குரல் ஒலிக்கிறது. ஊன்றிக் கவனிக்கும் போதுதான், அது

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து”

எனும் திருக்குறள் என்பது புரிந்தது. அவளே நோய்க்குக் காரணமாகிறாள். அவளே அந்தப் பிணிக்கு மருந்தும் ஆகிறாள் என்பதுதான் காமத்துப் பாலில் இடம்பெறும் அந்தக் குறளின் அர்த்தம். நவீன சொல்லிசைக் கலைஞர்களிடையேயும் குறள் ஒலிக்கிறது!

காதலின் கானத்தைக் கேட்க:

https://www.youtube.com/watch?v=R9Nzg3VecOg&list=PL5pk30dTND1jEXX_pN--zB8p_kQ4Ikr9z&index=8

இசைந்து செய்யும் உதவி!

கர்னாடக இசைக் கலைஞர்களுக்கும் இசையில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் நிறைய சந்தேகங்களும், பாரம்பரியமான இசை வடிவத்தில் பல சந்தேகங்களும் இருக்கும். கர்னாடக இசை குறித்த புரிதல்களை மேலும் விரிவடையச் செய்வதற்காக தன்னுடைய பெயரிலேயே ஒரு யூடியூப் வலைதளத்தை உருவாக்கி, அதில் இசை குறித்த புரிதல்களை ஏற்படுத்திவருகிறார் காயத்ரி வெங்கட்ராகவன்.

‘‘கர்னாடிக் ஜர்னி’ எனும் தலைப்பில் தொடர்ந்து வெளிவரும் காணொலிகளில், கர்னாடக இசையில் ஸ்ருதியில் தொடங்கி ஆலாபனை, நிரவல் போன்ற பல உத்திகளின் முக்கியத்துவங்களும் அதைப் பற்றிய விரிவான அணுகுமுறையுடன் கூடிய செயல்வடிவங்களும் இருக்கும்.

இப்படியொரு விஷயத்தை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் சங்கீதம் படிக்கும் மாணவர்கள் விரும்பினர். அதைத் தொடர்ந்துதான் இதைச் செயல்படுத்தி வருகிறேன்” என்றார் காயத்ரி.

இசையோடு இணைய: https://www.youtube.com/user/gayathrivenkat1

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in