இசை வலம்: சொல்லிசை எனும் சுதந்திரக் காற்று!

இசை வலம்: சொல்லிசை எனும் சுதந்திரக் காற்று!

எல்லா கலைகளும் மக்களுக்காக என்பார் பாரதியார். கலைகள் மக்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கக் கூடாது. மக்களின் மகிழ்ச்சியைப் பாட வேண்டும். துயரையும் பாட வேண்டும். துயரை மக்களுக்குக் கொடுப்பவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும். கலை வெறுமனே எளிய மக்களை சந்தோஷப்படுத்துவதற்கான ஏற்பாடு அல்ல, அதை மட்டுமே கலையின் நோக்கமாக ஒரு கலைஞன் நினைக்கக் கூடாது எனும் எண்ணம் நிகவித்ரனின் `டிஸ்ஹானர்ட்’ சொல்லிசை தொகுப்பின் ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுகிறது.

கிராஃபிக் டிசைனராகப் பணிபுரியும் நிகவித்ரனின் பொழுதுபோக்கு எழுதுவது, பாடுவது. சொல்லிசைக் கலைஞராக வெளிப்பட்டிருக்கும் இந்த 24 வயது இளைஞரின் ஹிட் லிஸ்ட்டில், அன்றாடப் பிரச்சினைகள் முதல் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பதுவரை எல்லாமே பாடலுக்கான கருப்பொருளாகி இருக்கின்றன.

பெரும்பாலான இளைஞர்கள் சினிமா பாடல்களின்மீது கொண்ட மயக்கத்தினாலும், நாயக பிம்பங்களின் வாய் அசைவில் ஒலிக்கும் திரைப்பாடல்களிலும் மெய் மறந்திருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நேர் திசையில் ஒலிப்பதுதான் ‘சுயாதீன இசை’ எனப்படும் சொல்லிசை.

“மக்களுக்கான அந்தக் கலையை வளர்ப்பதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் வெகுஜன ஊடகங்கள் சிறிது முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்கிறார் சொல்லிசைக் கலைஞர் நிகவித்ரன்.

அண்மையில் 'டிஸ்ஹானர்ட்’ சொல்லிசை தொகுப்பின் முதல் பாடலின் காணொலியை வெளியிட்டார். நிகவித்ரன் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை தன்னிலை விளக்கமாக அவரே விவரிக்கும் பாடல் இது. அடுத்தடுத்த பாடல்களை ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட பல்வேறு இசை செயலிகளில் கேட்கலாம்.

‘சிங்கம் ஒன்னுதான்- எங்களைச் சுத்தி கழுதைப் புலி

உங்களுக்குக் கேக்குதா நாங்க வாங்கப்போறோம்

இப்ப பழிக்குப் பழி...’

- எதிரியைக்கூட மன்னித்துவிடலாம், துரோகியை மன்னிக்கக் கூடாது எனும் தொனி பாடலில் வெளிப்படுகிறது. இன்னொரு பாடலில் `ஒன்றாகப் பயணிப்போம்... நானும் என் இசையும் ஒன்றாகவே பயணிப்போம்... நம் வாழும் இந்த வாழ்க்கையில் சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்’ என்று நம்பிக்கை பேசுகிறது.

மும்பையைப் போன்று சொல்லிசைக் கலைஞர்களுக்கோ சுயாதீன இசைக் கலைஞர்களுக்கோ இன்னமும் இங்கு பரவலாக மக்களின் ஆதரவு கிடைப்பதில்லை. அதற்கான மேடைகளோ, வாய்ப்புகளோ இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்.

“பள்ளி நாட்களிலிருந்தே சொல்லிசையைப் பழகிவருகிறேன். மலேசிய ராப்பர்களான யோகி பி, டாக்டர் பர்ன் ஆகியோரின் பாடல்கள் பிடிக்கும். சொல்லிசைக்கு அடிப்படையே நிறைய வாசிக்க வேண்டும். நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளைப் படிக்க வேண்டும். நானும் அப்படி மக்களின் பிரச்சினைகளைப் படித்துதான் பாடல்களை எழுதுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் சொல்லிசை பொழுதுபோக்கு அல்ல; புரட்சியின் வடிவம். மகிழ்ச்சியைப் பாடுவது மட்டுமல்ல, மக்களைப் பாடுவது, மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பதுதான் சொல்லிசை” என்று சொல்லும் நிகவித்ரனின் சமூக அக்கறை கொண்ட பாடல்கள், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

நல்லிசையுடன் கூடிய சொல்லிசைக்கு: https://www.youtube.com/watch?v=C6ypn1BKIsk

உறவுகளின் மேன்மை

பிறந்ததிலிருந்து தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி, குழந்தைகள் என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரும் நமக்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எல்லா உறவுகளுடனும் நாம் இறுதிவரை நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதில் நிறைய பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உறவுகளின் தேவை முடிந்துவிடுவதோடு உறவுகள் முடிந்துவிடுவது இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் இதுதான் இலக்கு என்பதை வரையறுக்க முடியாது. வாழ்க்கையில் இலக்கைவிட உறவுகளுடனான பயணம் முக்கியம் என்பதை ரசனையான காட்சி அனுபவத்தோடு நமக்கு புரியவைக்கிறது இந்தக் காணொலிப் பாடல். விவேகாவின் அர்த்தம் பொதிந்த வரிகளை இதமான காட்சிகளில் நம் கண்முன் நிறுத்துகிறது. காணொலிக்கான கதைக் கருவையும் இயக்கத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அருமையாகக் கையாண்டிருக்கிறார்.

காணொலியில் நடித்திருக்கும் ஜானி மாஸ்டரும், ஷ்ரஸ்டியும் கவனம் ஈர்க்கின்றனர். நாயகனின் வட மாநில தோற்றத்துக்கேற்ற அங்கித் திவாரியின் இசையில் அசத்தலாக பாடியிருக்கிறார் அனிருத். நம்முடன் எவர் பயணிக்கிறார் என்பதை ஆராய்வதைவிட பயணம் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு அடுத்தவருக்குப் புரியவைக்கவும் முயன்றிருக்கிறார் ஐஸ்வர்யா.

உறவுகளின் உன்னதத்தைச் சொல்லும் பாடல்: https://www.youtube.com/watch?v=aDHrTRyGw10

கிராமி வென்ற இசைக் கலைஞர்

ரிக்கி கேஜ் அமெரிக்காவில் பிறந்தவர். பெங்களூருவில் இசைப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர். இசைப் பங்களிப்புகளுக்காக 20 நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான விருதுகளை வென்றிருப்பவர். ‘விண்ட்ஸ் ஆஃப் சம்ஸாரா’ எனும் இவரின் இசை ஆல்பத்துக்காக கடந்த 2015-ல் இவருக்கு கிராமி விருது கொடுத்து பெருமைப்படுத்தினர். தற்போது இந்தாண்டுக்கான கிராமி விருதுக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டனின் ‘தி போலீஸ்’ ராக் இசைக் குழுவின் நிறுவனரும் புகழ்பெற்ற டிரம்மருமான ஸ்டீவர்ட் கோப்லேண்ட் என்பவருடன் இணைந்து ‘டிவைன் டைட்ஸ்’ எனும் இசை மாலையை இந்த முறை உருவாக்கியிருக்கிறார் ரிக்கி கேஜ்.

ரிக்கி கேஜ்
ரிக்கி கேஜ்

ஏறக்குறைய 9 பாடல்களில் 8 பாடல்களுக்கான காட்சிகள் உலகம் முழுவதும் பல பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பாரம்பரியத்தையும், அதன் தொன்மையையும் போற்றும் நிலப்பரப்புகள், கலைகள் போன்றவற்றை இசையின் பின்னணியோடு ஆவணப்படுத்துகின்றன இந்தப் பாடலின் காணொலிகள்.

இந்தியப் பாரம்பரியம் போற்றும் இசை: https://www.youtube.com/watch?v=wA1pf86wZ_A

காதலுக்காக உருகும் மனம்

தமிழ் சினிமாவில் 70-களில் வந்த படங்களில் நிச்சயமாக கிளப்பில் பாடப்படும் பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த பாப் கல்ச்சர் இன்றைக்கு பப் கல்ச்சராக காணொலிகளிலும் பீறிட்டு வழிகிறது. உருகி உருகிப் பெண்ணை வர்ணிக்கவும் வேண்டாம். தான் சரியில்லாமல் உருக்குலைந்து போவதற்கு பெண்ணைக் காரணமாக்கவும் வேண்டாம் எனும் தெளிவு இன்றைக்கு நிறைய இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால், அதற்கு எதிர்மறையாக ஊடகங்களிலும் வணிக சினிமாக்களிலும் ஆணின் தோல்விக்கும் குடிப் பழக்கத்துக்கும் பெண்ணையே காரணம் சொல்லும் நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது.

இந்தக் காணொலியில் ஓர் இளைஞர், ‘மையிட்ட மயிலே உன் பார்வையில் ஒருமுறை சரிந்தேன்… கைரேகை போல உன் கையோடு கை சேரத் துடித்தேன்…’ என்று உருகுகிறார். டிரெண்டிஸ் தயாரித்திருக்கும் இந்தக் காணொலிப் பாடலை எழுதியிருக்கும் சியன்னாரின் வரிகள் காதலைத் தாலாட்டுகின்றன. காணொலியில் நடித்திருக்கும் அபிஷேக் குமார், குரு லஷ்மண், தீபா பாலு ஆகியோரின் தோற்றப் பொலிவு பாடலுக்கு வலு சேர்க்கிறது. ஹஸ்கி வாய்ஸில் பாடியிருக்கும் கவுஸ்தப் ரவியின் குரலையும், மிதமான மெலடியை சாக்ஸபோனிலும் தாளத்திலும் தவழவிட்டிருக்கும் அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசைத் திறமையையும் இசை உலகம் கண்டுகொள்ள வேண்டும்.

காதலைத் தாலாட்டும் கானம்: https://www.youtube.com/watch?v=zaO5dvR0ChQ

Related Stories

No stories found.