இசைவலம்: மந்திரமாவது இசை!

இசைவலம்: மந்திரமாவது இசை!

‘மந்திரமாவது நமச்சிவாயமே’ என்பார்கள். எழுத்தறிவில்லாத வேடன், ‘மரா… மரா...’ என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருக்க.. அவருக்கே தெரியாமல் அது ராம… ராம… மந்திரமாகி, வேடன் வால்மீகியாகி ராமாயணத்தையே எழுதுகிறார். ராமநாமத்தைத் தொடர்ந்து பாராயணம் செய்ததின் பலனாக ஸ்ரீராம தரிசனம் தியாகராஜருக்குக் கிடைக்கிறது. இப்படி வேத மந்திரங்களைத் தங்களின் எலக்ட்ரானிக் இசையோடு சேர்த்து உலகின் பல பகுதிகளுக்குச் சென்று பரப்பிவருகிறார்கள் ‘சாந்தி பியூப்பிள்’ குழுவினர்.

பிரதானப் பாடகியான உமா தேவி, “மந்திரங்கள் நம் மனதில் குடிகொண்டிருக்கும் கவலைகளை நீக்குவதோடு, நம்மைச் சுய பரிசோதனை செய்யவைக்கிறது. இதனால் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வு நமக்குள் ஏற்படுகிறது. பிரம்மாண்டமான இந்தப் பேரண்டத்தில் நாம் ஒரு தூசுகூட இல்லை எனும் தெளிவு நமக்குள் ஏற்பட்டுவிட்டால், நம் ஆணவம் ஒடுங்கும். சக உயிர்களின் மீது அன்பு ஏற்படும்” என்கிறார். இந்தக் குழுவினர், அனுமன் குறித்த போற்றி மந்திரத்தை நேரடியான நிகழ்ச்சியாக வழங்கியிருக்கும் காணொலி இது.

இதுபோன்ற ஃபியூஷன் இசையை உருவாக்கும்போது, இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் வித்தியாசமான உணர்வைப் பெறுவார்கள். இந்தப் பாடலும் அப்படித்தான். ஆர்மோனியப் பெட்டி முன்னர் அமர்ந்து, ஒரு ராக் பாடகரின் உடல்மொழியுடன் உமா தேவி பாடுவதைக் கேட்பது அலாதியான உணர்வைத் தருகிறது. பாஸ் கிடாரின் ரீங்காரமும் டிரம்ஸின் துள்ளல் இசையும் பின்னணியில் ஒலிக்க உமாவின் குரல் மந்திர ஸ்தாயில் ஒலிக்கத் தொடங்குகிறது. டிரம்ஸ் தாளத்துக்குத் துணைபுரியும் தபேலாவின் நடை இந்த இசைக்கு இந்தியத் தன்மையை வழங்குகிறது. ஆர்ப்பரிக்கும் மனம் ஒடுங்குகிறது!

ராம கானத்தைக் கேட்க:

https://www.youtube.com/watch?v=cYhM4LMBfik

இடப்பெயர்வின் முக்கியத்துவம்!

‘அல்லாஹ் ஒருவரே நம்மை உய்விக்கும் ஒரேவழி’ என்னும் இறைச் செய்தியை, மக்காவைவிட்டு இடம்பெயர்ந்து மதினாவுக்குச் சென்று பரப்ப நபிபெருமானார் (ஸல்) முடிவுசெய்தார்கள். அதற்காக அல்லாவின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள்.

‘மக்காவிலிருந்து மதினாவுக்குச் செல்லுங்கள்’ என்னும் உத்தரவு ஒரு நிசப்தமான இரவில் நபிகளுக்கு வருகிறது. அன்று இரவு அண்ணல் நபி (ஸல்) வீட்டைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பே, ஆயுதங்களுடன் எதிரிகள் அவரின் வீட்டைச் சூழ்ந்துகொள்கின்றனர். அண்ணல் நபி சிறிதும் அஞ்சவில்லை. தன் கரங்களால் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகளின் முன்னிலையில் வீசினார்.

“அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும் பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடி விட்டோம். ஆதலால் அவர்களால் எதையும் பார்க்க முடியாது.” (திருக்குர்ஆன் 36:9)

இந்த வசனத்தைக் கேட்ட உடனே, எதிரிகள் அனைவரும் அப்படியே உணர்ச்சியற்றவர்களாக ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றனர். அல்லாஹ் திருமறையில் சொன்னதுபோல், அவர்களின் கண்கள் திறந்திருந்தும் அவர்களால் பார்க்க முடியவில்லை. மின்னும் கூர்மையான ஆயுதங்கள் அவர்களின் கைகளில் இருந்தும் அவை அசையவில்லை. மிகவும் நம்பிக்கையுடன் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார்.

இப்படியாக மதினாவுக்குள் பிரவேசிக்கும் இறைத்தூதரை வரவேற்கும் `தலா அல் பத்ரு அலைனா’ பாடல், பாரம்பரியமாக அரபு மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அரபு மொழியில் எழுதப்பட்ட பாடலின் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாட, அந்தப் பாடலின் தமிழ் வரிகளை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துப் பாடியிருக்கிறார். உயிர்ப்பான இஸ்லாமியப் பாடல்களுக்கே உரித்தான மென் இசையை பாடலுக்கு அளித்திருக்கிறார் யுவன்.

‘வாதாவின் மலைகளிலிருந்து / முழு நிலவு எங்கள் முன் உதிக்க

இறைவனிடம் நன்றிகள் பல சொல்லி / தூதரே உங்களை வரவேற்க

தூதரே நீர் இறைவனின் சொல்லை / கடமை ஆக்கித் தந்தீரே

சிறந்தவர் நீர் வருகவே / எங்கள் மதீனா கண்ணியம் பெற்றதே...’

என்று அரபு மொழிப் பாடலின் அர்த்தத்தை, அப்படியே பொத்திப் பாதுகாத்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஸஃப்ரூன் நிஸார்.

பாரம்பரியமான `தலா அல் பத்ரு’ அரபு மொழிப் பாடலை, அமீன் பாடும் போது நம் மனத்துக்குள் சக மனிதரின் மேல் கரிசனம் ஏற்படுகிறது. இன்னொருமுறை கேட்கும்போது கண்களிலிருந்து வழியும் கண்ணீரில் மனதின் கறைகள் கரைந்து போகின்றன!

இசைஞானி இளையராஜாவின் மகனான யுவனும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான அமீனும் இணைந்து படைத்திருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ரஹ்மானின் தொடக்ககாலத்திலிருந்தே அவரது இசையைக் கொண்டாடிவருபவர் யுவன். யுவனின் திறமையைப் பலமுறை பாராட்டியிருக்கும் ரஹ்மான், தனது இசையிலும் யுவனைப் பாடவைத்தார். தவம் போல இசையை நேசிக்கும் மேதைகளின் அடுத்த தலைமுறை, ஆன்மிகத்தின் வழியில் இசைந்து இசைப்பது தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் இனிய விருந்து!

இசைப் புதல்வர்கள் இணைந்து படைக்கும் இசை:

https://www.youtube.com/watch?v=qtoUsx9olis

எம்.எஸ் பாடியிருக்கும் தமிழ் சுப்ரபாதம்!

'வந்துதித்தாய் ராமா நீ கோசலைதன் திருமகனாம்' என்று தொடங்கும் இந்தப் பாடல் - தமிழ் சுப்ரபாதம். பாடியிருப்பவர் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி. சுப்ரபாதம் பாடலை, தன்னுடைய தாய் கேட்டுக்கொண்டதற்காக மொழிபெயர்த்து மிகவும் நெருக்கமாகத் தமிழில் அதை எழுதியிருப்பவர் பார்த்தசாரதி. “வெங்கடேசுவர சுப்ரபாதத்தை தமிழில் எழுது” என்று பார்த்தசாரதிக்கு அன்புக் கட்டளை இட்டவர், அவரின் அன்னை கண்ணம்மாள்.

அன்னையின் கட்டளையை நிறைவேற்றினார் பார்த்தசாரதி. 1987-ம் ஆண்டு ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’ என்னும் ‘திருவேங்கடத்தான் திருப்பள்ளியெழுச்சி’ புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி

அதைத் தொடர்ந்து ஒரு சில திருத்தங்களுடன், திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி எம்.எஸ்ஸின் குரல் வடிவில் தயாரானது. ஒலிப்பதிவுக்கு முன்பாக உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள, முழு தமிழ் சுப்ரபாதத்தையும் பார்த்தசாரதி முன்னிலையில் பாடிக் காண்பித்தாராம் இசையரசி. இப்படிப்பட்ட பேறு பார்த்தசாரதிக்குக் கிடைத்தது. இந்தக் காணொலியைக் கேட்கும் உங்களுக்கும் அந்தப் பேறு கிடைக்கும்!

எம்.எஸ்ஸின் இனிய தமிழ் சுப்ரபாதம்:

https://www.youtube.com/watch?v=NAe6hOL5ZgQ

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in