இசை வலம்: இசையுடை தரித்த கவிதை!

இசை வலம்: இசையுடை தரித்த கவிதை!

இன்றைக்கு, பிரபலமான பத்திரிகையாளராக இருக்கட்டும் கட்டுரையாளராக இருக்கட்டும் சினிமா வசனகர்த்தாவாக இருக்கட்டும் அவரின் முதல் எழுத்து வடிவம் பெரும்பாலும் கவிதையாகத்தான் இருக்கும். "சொல்லவரும் விஷயத்தைச் சுருக்கமாகவும் சுவையாகவும் தீவிரமாகவும் வார்த்தைகளை ஏற்றிச்செல்வதற்குக் கவிதை வாகனமே என்னுடைய தேர்வாக இருந்தது" என்று பல பிரபலங்கள் அவர்களின் அனுபவப் பகிர்வாக கூறியிருக்கின்றனர்.

அப்படி, பலமான எழுத்து வடிவமான தங்களின் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுவது என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரிய லட்சிய வேட்கையாக இருக்கும். ஆனால் இன்றைக்குக் கவிதைகளையே மெல்லிய இசையோடு படித்து, கவித்துவமான ஒளிப்படங்களோடு ஆல்பமாக வெளியிட்டுவிடுகின்றனர். அப்படி என்.ஆர்.தினோஷ் எனும் இளைஞரின் கவிதை வாசிப்பு இது.

‘நடக்கும் அழகு

நேர்கொண்ட பார்வை

முகத்தில் தெரியும் புன்னகை நேர்மை

கடத்தும் விழிகள் அறிவியல் கூர்மை

நகரும் நொடிகள் சொல்லிடும் தீர்வை’

- என நீள்கிறது அவரின் வசன கவிதை. அது இசைப் பாடலாகவே இனிக்கிறது. காணொலியில் தோன்றும் அழகு தேவதைகளின் முகபாவனைகளிலும் மிளிர்கிறது கவித்துவம்!

அலைபாயும் மனதின் தேடலுக்கான விடையாய் மலர்கிறது அவரின் கவிதை இங்கே:

https://www.youtube.com/watch?v=pwR3f4GjGNg&list=PL5pk30dTND1jEXX_pN--zB8p_kQ4Ikr9z

காதல் செய்யப் பழகு!

பனியான காற்று இங்கு வீசுது

நீல வானக் கண்கள் என்னை பார்க்குது

நீ பார்த்த பார்வை மட்டும் பேசுது

தூரத்தில் நின்றும்கூட தாக்குது...

- இப்படித் தொடங்கும் பாடல் எங்கு போய் முடியும்? நீங்கள் நினைப்பதுதான் சரி. ‘உன்னையே கட்டிக்கிறேன்... உன் மேல் அன்பைப் பொழியும் என்மீது நீ ஒட்டிக்கொள்...’ என்று பாடலை முடிக்கிறார் இசையமைத்துப் பாடியிருக்கும் அகஷ்.

டிரீம்பிராட்டின் தயாரிப்பான இந்தப் பாடலை, திரைப்படங்களை விஞ்சும் அளவுக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் வினோ எஸ். தங்கள் திரைப்படங்களுக்கு அறிமுக நாயகியைத் தேடிக்கொண்டிருப்பவர்கள், இப்பாடல் காட்சியில் தோன்றும் துர்காவைப் பார்த்தால் நிச்சயம் நாயகியாக்கிவிடுவார்கள்!

காதல் கானத்தை ரசிக்க:

https://www.youtube.com/watch?v=KBCUVM5lK7s

நாமசங்கீர்த்தனம் ஏன் சிறந்தது?

திருமலையில் இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகள், கரோனா பேரிடரால் பெரும் பக்தர்கள் சூழ நடைபெறவில்லை. குழுமியிருக்கும் சொற்ப பக்தர்களுக்கும் தேவஸ்தான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் ஒரே ஆறுதல். விட்டல் ஸ்ரீமாத்மிகா குழுவினரின் நாமசங்கீர்த்தன பஜனைப் பாடல்களை, ஸ்ரீ வேங்டேஸ்வர பக்தி சேனல் `நாமம் திவ்ய நாமம்’ எனும் தலைப்பின்கீழ் யூடியூபில் பதிவேற்றியிருக்கின்றனர்.

நாராயண நாமத்தைச் சொல்லி பக்தன் ஒரு அடி எடுத்துவைத்தால், நாராயணன் 10 அடிகள் பக்தனை நோக்கி எடுத்துவைப்பான் என்பார்கள். ஆனால், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீமாத்மிகாவுடன் இணைந்து பாடுவதை அந்த நாராயணனே பக்தர்களோடு பக்தராக சேர்ந்து கேட்டிருப்பான் என்றே தோன்றுகிறது.

`சாதுளரா மீரு ரண்டி

பக்துளரா மீரு ரண்டி

பாண்டுரங்கன சேவித்தமோ.. பாண்டுரங்கா பாண்டுரங்கா...

ரண்டி பாண்டுரங்கா...’

`ரா..ரா... நா வெண்ணமுத்து கோபாலா...

கோபாலா கோபாலா கோவிந்த கோபாலா...’

- இரண்டு கைகளிலும் சப்ளா கட்டையை ஒலித்தபடி தன்னை மறந்து மந்திர ஸ்தாயியிலும் உச்ச ஸ்தாயியிலும் பாடும் ஸ்ரீமாத்மிகாவின் குரலும் இணைந்து பாடும் குழந்தைகளின் குரலும், மெலிதாகப் பின்னணியில் ஒலிக்கும் ஹார்மோனியம் மிருதங்கத்தின் தாளமும் கேட்கும் நம்மையும் அவர்களோடு சேர்ந்து பாடவைக்கிறது. இதுதான் பஜனை பத்ததியின் சிறப்பு.

சென்னையைச் சேர்ந்த விட்டல் ஸ்ரீமாத்மிகா குழுவினரின் நாமசங்கீர்த்தன பஜனைப் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இவர்களின் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. மிருதங்கம் வாசிக்கும் சாய்ராம், ஸ்ரீமாத்மிகாவின் அண்ணன். இவர்களின் இசையில் அன்னமாச்சார்யா, புரந்தரதாசர், ராமதாசர் போன்ற பலரின் பாடல்களும் செவிக்கு விருந்தாகின்றன. கர்னாடக இசை, இந்துஸ்தானி, நாமசங்கீர்த்தனம் சேர்ந்த புதிய பாணியைத் தங்களுக்கென உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர் இந்தக் குழந்தைகள்.

‘தானுஜயே கா… தானுஜயே கா…’ எனும் உருதுப் பாடலாக இருந்தாலும் சரி, `கின்கின் தாரே லங்குதியராத்தா’ எனும் பர்ரி நிஸாமியின் கஸலாக இருக்கட்டும், சாகர் ஸித்திக்கின் உருது கஸல்களாகட்டும் மாத்மிகாவின் குரல் அவ்வளவு உருக்கமாக ஒலிக்கிறது. இவர்களின் இசை நிகழ்ச்சிகளைத் தென் அமெரிக்காவிலிருக்கும் பஞ்சாபியரான பால்ராஜும், வாகா எல்லையிலிருக்கும் குர்ரான் இம்தியாஸும் தங்களின் இணைய பக்கங்களில் பதிவிட்டிருக்கின்றனர். இதன் மூலம் ஸ்ரீமாத்மிகாவின் கவாலி, கஸலுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அமெரிக்காவிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இறைவனைவிட இறைவனின் நாமமே சிறந்தது என்பார்கள் அருளாளர்கள். அதனால்தான், இறைவனை உபாசனை செய்வதில் மிக உயர்ந்த மார்க்கமாக விளங்குகிறது நாமசங்கீர்த்தனம். ராமா, கிருஷ்ணா எனும் நாமங்களே, தீமைகள் நம்மை அண்டாமல் தடுத்திடும் வல்லமை உடையவை.

ரங்கம்மா பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=eJoTf_2MHdQ

ஆழ்கடலின் அமைதியைத் தரும் இசை

இறைவனின் கருணையையும் காதலையும் ஒருங்கே பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடும் ஓர் இளைஞரின் முயற்சியே, சிறந்ததோர் இறைப் பாடலாகிறது. அடர்த்தியான புல்லாங்குழலின் ஒலியைக் கேட்டதுமே நம்முடலின் பதற்றம் குறைகிறது. அந்தக் குழலின் ஒலி முடியும் புள்ளியில் `யா மீரா…’ என உமரின் குரல் தொடங்குகிறது. ஆர்ப்பரிக்கும் பிரம்மாண்டத்தின் சாட்சியாக விரிந்திருக்கும் கடலின் முன்பாக ஏகாந்தமாக ஒலிக்கிறது உமரின் குரல். பொருத்தமான இடங்களில் கோரஸாக சிலர் பாடினாலும், உமரின் குரலில் வெளிப்படும் ஏற்ற இறக்கங்களின் உருக்கம் கேட்பவரின் மனதைக் கரைக்கும். இறைவனே மிகப் பெரியவன். அவனுடைய கருணைக் கடலே பிரம்மாண்டமானது. அதில் லயிக்கவும் துய்க்கவும் துணைபோவதே இசை.

நீண்ட மூங்கில் கழியுடன் தர்கா நோக்கி நடைபோடும் யாத்ரிகர், இறைப் பாடல்களைப் பாடியபடி வரும் பக்ரிகள், தர்காவில் தொழுகைக்குப் போகும் மக்கள், மயிற்பீலியால் சாம்பிராணி புகையை விசிறிக் கொடுப்பவர், குறுக்கும் நெடுக்கும் ஓடும் குழந்தைகள்... என உயிரோட்டமான பாடலுக்கான காட்சி வடிவமும் நம்மை ஈர்க்கிறது.

மஷூக் ரஹ்மான் எழுதியிருக்கும் இந்தப் பாடலின் வரிகள் இறையுடனான நெருக்கத்தை கேட்பவர்களுக்கும் அளிக்கும் வகையில் உள்ளன. `இறவா கதிரே உன் மீதே காதலானேன்’, `என்னைத் துண்டாடி காதல் செய்ய வேண்டுமே’, `மீட்சி இன்றி வாடும் என்னை... சூழ்ச்சி நீக்கி காப்பாய்’ எனும் வரிகள், கேட்கும் நம்மை உருவகவைக்கும். ஷாஜித் கான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான மெட்டும் நம்மை இறைத் தாலாட்டில் ஈடுபடவைக்கிறது.

அமின் பாயட்டின் சிதார் உமரின் குரலோடு சில சமயங்களில் உரையாடுகிறது. சில சமயங்களில் உமரின் குரலுக்குப் பதிலாகவே ஒலிக்கிறது. இந்த உரையாடலுக்கு ஒத்திசைவாக மஜித் யக்னே ராட், மோர்டஸா யக்னே ராட், சோகந்த் அப்பாஸி ஆகியோர் ஈரானிய டஃப் மேளத்தை அடக்கி வாசித்திருக்கின்றனர். பாடலின் ஒவ்வொரு சரணம் முடியும்போதும் ஆழ்கடலின் அமைதியை நம் மனம் உணர்கிறது.

‘யா மீரா’ பாடலைக் காண:

https://www.youtube.com/watch?v=rwUFinpRiUI

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in