இசை வலம்: பாடும் நிலாவின் குரலில் காதல் காத்தாடி!

இசை வலம்:
பாடும் நிலாவின் குரலில்
காதல் காத்தாடி!
காந்தர்வக் குரலோனின் ’காத்தாடி மேகம்’

நம் ஒவ்வொருவரின் மூச்சிலும் நிறைந்திருக்கும் மூன்றெழுத்து இசை சுவாசம் - எஸ்பிபி. தன் நீண்ட நெடிய இசைப் பயணத்தில் ஜாம்பவான்களின் இசையில் மட்டுமல்ல, பல அறிமுகக் கலைஞர்களின் இசையிலும் அவர் பாடியிருக்கிறார்.

யாருக்காகப் பாடினாலும் தனக்கும் இசையமைப்பாளருக்கும் திருப்தி ஏற்படும்வரை, சளைக்காமல் பாடிவிட்டுத்தான் ஒலிப்பதிவுக் கூடத்தைவிட்டு எஸ்பிபி கிளம்புவார். அவரின் இந்தத் தொழில் பக்தியை ஒட்டி நிறைய சம்பவங்களையும் நாம் கேட்டிருக்கிறோம். மறைவதற்கு முன்பாக அந்த மகா கலைஞன் பாடிய பாடல்களில், ஓர் அறிமுக இசையமைப்பாளரின் இசையில் உருவான`காத்தாடி மேகம்’ எனும் பாடலும் அடக்கம்.

‘ஸ்டார் மியூசிக் இந்தியா’ வெளியிட்டிருக்கும் இந்த சுயாதீனப் பாடலை, தனக்கே உரிய அசாத்தியமான சங்கதிகளை வெளிப்படுத்தி எஸ்பிபி பாடியிருக்கிறார். பாடலின் வரிகளைக் கவிஞர் குட்டி ரேவதி எழுத, விக்னேஷ் கல்யாணராமன் எனும் இளைஞர் இசையமைத்திருக்கிறார்.

‘தீராதா தூரங்கள் நீளாதா காலங்கள்

வான் போகும் மேகங்கள் போலானேன்

கால் போகும் தேசங்கள் நாம் போவோம் வா…’

என்று எஸ்பிபி பல்லவியைப் தொடங்கும்போதே, நாமும் மானசீகமாக காதலியின் விரல்பிடித்தபடி பயணிக்கத் தொடங்கிவிடுகிறோம்.

‘காற்றாடி கீழே நான் வீழ்ந்தேனே

நீ வந்தாய் காற்றேகி நீந்தேனோ

கண்களுக்குள் பாரடி காணும் காட்சியே நீயடி’

... எனும் கவித்துவமான வார்த்தைகளை எஸ்பிபி பாடும்போது, ‘பொட்டுவைத்த முகமோ’ எனும் பழைய பாட்டில் அவர் மெலடியைக் குழைத்துப் பாடியது நம் மனக் கண்ணில் வந்துபோகும்.

இப்பாடலுக்கு இசையமைத்திருக்கும் விக்னேஷ், ‘சன் ரைசர்ஸ்’ ஹைதராபாத் அணிக்கான ஆந்தம் (Anthem) இசை, சூரியன் பண்பலைக்காக ஜிங்கிள்ஸ் போன்றவற்றுக்கு இசையமைத்தவர். தற்போது `ஜாஸ்மின்’ எனும் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். இது தவிர 2 திரைப்படங்களுக்கு இசையமைக்கவிருக்கிறார். அருண்ராஜா காமராஜாவின் சுயாதீன பாடல் ஒன்றும் இவர் இசையில் வெளிவரவிருக்கிறது.

காந்தர்வக் குரலோனின் குரலில் காதல் மழையில் நனைய:

https://www.youtube.com/watch?v=g6PCF4G7i_w

பிஜார்ன் சுர்ராவ்
பிஜார்ன் சுர்ராவ்

உருகிவழியும் பிரேமம்

‘உன்னபோல் உன்னபோல் ஒரு பொண்ணு

நாநா தேடினேனே… ஒரு பார்வ ஒன்ன பார்த்தேன்

நான் காலி ஆனேனே...

ஒரு சொல்லு ஓகே சொல்லு

நாநா உயிரே தருவேனே…’


- இப்படி, காதலிக்காக உருகி எழுதப்பட்ட வார்த்தைகளைத் தன்னுடைய ஹஸ்கி குரலால் வழுக்கி வழுக்கிப் பாடியிருக்கிறார் பிஜார்ன் சுர்ராவ். விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின், `Got the Man with the plan right here’ எனும் சூப்பர் ஹிட் பாடலைத் தன்னுடைய தெறிக்கும் குரலில் பாடியவர்தான் இந்த பிஜார்ன்.

மிர்ச்சி இசை விருது வழங்கும் விழாவில், இந்தக் காதல் பாடலை அவர் பாடிய விதத்துக்கு இணையாக வயலின், புல்லாங்குழல் கலைஞர்கள் பாடலின் இறுதிப் பகுதியில் நிகழ்த்தும் இசை உரையாடலும் ரசிகர்களிடையேயும் கூட்டத்தில் அமர்ந்திருந்த பல இசையமைப்பாளர்களிடமும் கவனம் பெற்றது.

காதலின் உருக்கத்தை நீங்களும் கேளுங்களேன்:

https://www.youtube.com/watch?v=nETuE0pr1yE

சோபியா அஸ்ரஃப்
சோபியா அஸ்ரஃப்

சூழலைக் காக்கச் சொல்லிசை

சமூகத்தில் சூழலியலாளர்களுக்கு உதவும் வகையில், தன்னுடைய பாடல்களைச் சொல்லிசை வடிவில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கிவருபவர் சொல்லிசைக் கலைஞர் சோபியா அஸ்ரஃப். ‘கொடைக்கானல் வோன்ட்’ பாடல் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டவர் இவர். கலைஞர்கள் வழக்கமாக அவர்களின் பாடலில்தான் போராட்டக் குணத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில்லை, அவர்களின் பேச்சிலும் போராட்டக் குணம் வெளிப்படும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது சோபியா கொடைக்கானலில் யூனிலிவர் நிறுவனத்தின் அத்துமீறல்களை விவரிக்கும் அவல நகைச்சுவை பேச்சுக் காணொலி.

எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் அந்த நிறுவனம் மரங்களை வெட்டித் தள்ளுவதையும், அந்த நிறுவனத்தால் மண்ணில் புதைக்கப்படும் நச்சுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அருகில் இருக்கும் வனவிலங்குகள் சரணாலயத்தில் சேரும் அவலத்தையும், சுற்றுச்சூழல் காரணிகள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுவதையும் பிரச்சார நெடி இல்லாமல் எளிமையாகப் பதிவுசெய்கிறார் சோபியா.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், நீர் நிலைகளில் கலக்கும் கழிவு போன்றவற்றால் காற்று மாசு தலைநகர் டெல்லி போன்று பல நகரங்களிலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மணலி, எண்ணூர் போன்ற இடங்களில் காற்று மாசின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகம்.

லோகன்
லோகன்

காற்றுப் பரிசோதனைக் கண்காணிப்பு நிலையம் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில், ஒருநாளில் 60 சதவீத நேரம் மணலியைச் சேர்ந்த மக்கள் தரமற்ற காற்றையே சுவாசிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கும் வகையிலும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ‘காத்த வர விடு’ எனும் ராப் பாணி பாடலைப் பாடியிருக்கிறார் சோபியா. பாடலை எழுதி சோபியாவுடன் இணைந்து பாடியிருப்பவர் லோகன்.

எண்ணூர் கழிவேலி பாதுகாப்பு பிரச்சாரக் குழு, எக்ஸ்டின்சன் ரெபெலியன் சென்னை, ஃபிரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ‘சென்னை காலநிலை மாற்ற நடவடிக்கைக் கூட்டமைப்பு’ அண்மையில் வெளியிட்டிருக்கிறது.

‘காத்த வர விடு

மூச்ச விட விடு

கோட்ட தொட விடு

சடுகுடு சடுகுடு...’

துரித இசையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒலிக்கும் இந்த ராப் பாடலின் பின்னணியில், துள்ளல் இசையைத் தாண்டிய ஒரு சோகம் நம்மை அழுத்துகிறது. அதுதான் ‘காற்று மாசு’.

வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளின் விஷக் காற்றை வெளிப்படுத்தும் புகைக் கூண்டுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் திடல்களில் விளையாடும் கபடி, கால்பந்து, சிலம்பம், குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் பல மடங்கு குறைந்திருப்பதை விளையாட்டுப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இந்தப் பின்னணியில் ‘காத்த வர விடு’ என்ற பாடலை உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார் லோகன். ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்க, ஆப்ரோ இந்தப் பாடலுக்கான இசையை வழங்கியிருக்கிறார்.

பாடலின் காணொலியில் கபடி வீரர்களே இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தம். சென்னை மாநகராட்சிக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் கருத்துகளைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் இந்தப் பாடலின் நோக்கம்.

வடசென்னையிலிருந்துதான் கபடி, கால்பந்தாட்டம், சிலம்பம், குத்துச்சண்டை வீரர்கள் அதிகமாக உருவாகின்றனர். ஆனால், அங்கேதான் அதிக அளவில் காற்று மாசை ஏற்படுத்தும் 7 நிலக்கரி அனல் மின் நிலையங்கள், மாநிலத்திலேயே மிகப் பெரிய குப்பை மேடு, தென்னிந்தியாவின் 2-வது மிகப் பெரிய பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.

யூனிலிவருக்கு எதிரான சோபியாவின் அவல நகைச்சுவைப் பேச்சு: https://www.youtube.com/watch?v=9BrxvApG9Fc&t=7s

எண்ணூர் தொழிற்சாலைக் கழிவுகளால் காற்று மாசடைவதைச் சொல்லும் பாடல்: https://www.youtube.com/watch?v=qDwU0jSKmDc

Related Stories

No stories found.