இசை வலம்: குறுநகை போதுமடி!

இசை வலம்: குறுநகை போதுமடி!

இசை மேடைகளில் சிறப்பாகப் பரிமளிக்கும் பாடகி எனப் பெயர் எடுத்திருப்பவர் மாளவிகா. அவர் தன்னுடைய சக கலைஞர்களான அக் ஷய், பிரவீன், அக்கார்ஷ் ஆகியோருடன் இணைந்து, மிகவும் கேட்டுப் பழகிய பாடல்களுக்கு தற்போதைய நவீன இசை வாத்தியங்களைக் கொண்டு பின்னணியையும், சத்தங்களில் சில புதுமைகளையும் செய்து பாடுவதைக் காணொலியாக வெளியிட்டுள்ளார்.

காட்சி அனுபவத்தை மெருகூட்டுவதோடு, தெரிந்த பாடலை புதிய இசை சேர்த்து கேட்கும் அனுபவத்தையும் கூட்டுகிறது இந்தக் காணொலிப் பாடல்.

வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்

உள்ளம் குழையுதடி கிளியே

ஊனும் உருகுதடி கிளியே…

மாடுமனை போனாலென்ன

மக்கள் சுற்றம் போனாலென்ன

கோடிச் செம்பொன் போனாலென்ன கிளியே

குறுநகை போதுமடி

முருகன் குறுநகை போதுமடி!

இத்தனை அருமையான பாடலை பலரும் அதன் வரிகளிலும் காவடிச் சிந்து மெட்டிலும் உருகிப் பாடியிருந்தாலும் அந்தப் பாடலை எழுதியவரின் பெயரை பலரும் போடாமலே பதிவிட்டிருக்கின்றனர். மாளவிகா அந்தத் தவறைச் செய்யாமல், இந்தக் காவடிச் சிந்தை எழுதியவர் கள்ளிடைக்குறிச்சி சுப்பராய சுவாமிகள் என்று மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார்.

பாடலாசிரியர் குறித்து மேலும் விசாரித்தபோது, அவரது இயற்பெயர் அம்பாசமுத்திரம் சுப்பராயசாமி என்றும், காவல் துறையில் ஏட்டையாவாகப் பணிபுரிந்தவர் என்றும் சொல்கிறார்கள் இசை ஆர்வலர்கள். முருகனின் மீது இவ்வளவு காதல், ஒரு காக்கிச் சட்டைக்குள் இருந்திருக்கிறது என்பது ரசனையான விஷயம்தானே!

ஊனையும் உருகவைக்கும் பாடல்: https://www.youtube.com/watch?v=qBE88YymklU

இருவரும் இசையில் ஒருமுகம்!

டெல்லியைச் சேர்ந்த அமிரா கில் பாடகர், பாடலாசிரியர். 15 வயதிலிருந்தே சுயாதீன இசைக் குழுக்களின் மேடைகளில் தோன்றி டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற இந்தியாவின் மெட்ரோ நகரங்களின் இசை மேடைகளைத் தன் வசமாக்கியவர் அமிரா. 2015-ல் பாஸ்டனில் செயல்படும் பர்க்லி இசைக் கல்லூரியில் படிப்பதற்கான நிதிநல்கையும் இவருக்கு கிடைத்தது. அதன்மூலம் இசையின் மூலம் சிகிச்சை அளிக்கும் இளநிலை பட்டதாரியும் ஆனார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அம்ரித் என்பவரின் பாடல்கள் அறிமுகமாகியிருக்கின்றன.

இந்த இருவரும் ஒருவரை ஒருவர் முன்பின் பார்த்ததில்லை. வெவ்வேறு நகரங்களில், மொழி, கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த இவர்களை, இவர்களின் இசைக் காணொலிகளே பரஸ்பரம் அறிமுகப்படுத்தின. இந்த இருவரும் இணைந்து `ஜாகோ’ எனும் இசைப் பாடல்களின் தொகுப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

“தொகுப்பின் பெயரில் அமைந்திருக்கும் `ஜாகோ’ பாடலை ஜனவரியில் வெளியிட்டோம். தற்போது தொகுப்பின் இரண்டாவது பாடலான `நாம் இருவர்’ பாடலை அண்மையில் வெளியிட்டோம்” என்றார் இசைத் தொகுப்பின் தயாரிப்பாளர் அம்ரித் ராம்நாத்.

இந்தத் தொகுப்பில் தமிழ், இந்தி, வங்க மொழிப்பாடல்கள் உள்ளன. இசைத் தொகுப்பின் தலைப்பாகவே அமைந்துள்ள `ஜாகோ’ வங்க மொழிப் பாடலை தந்தை அமர்நாத் எழுத, மகன் அம்ரித் அதற்கு இசையமைத்து அமிராவுடன் பாடியிருக்கிறார். தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘நாம் இருவர்’ பாடலை எழுதி இசையமைத்து அமிராவுடன் இணைந்து பாடியிருக்கிறார் அம்ரித். தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் `என்னுள் இனிக்கும் இன்பமே’ பாடலை எழுதி இசையமைத்துப் பாடியிருக்கிறார் அம்ரித். அமிரா கில் எழுதி இசைமைத்திருக்கும் அஸ்மான் இந்திப் பாடலை அம்ரித்துடன் இணைந்து அமிரா பாடியிருக்கிறார்.

இன்றைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், நட்பு, காதல், மனிதநேயம், இயற்கையின் பல்வேறு அம்சங்கள் போன்றவற்றை முன்வைத்து இந்த இசைத் தொகுப்பின் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன என்றார் அம்ரித் ராம்நாத்.

இசை வழங்கும் இன்பத்தை உணர: https://bit.ly/NāmIruvar

https://bit.ly/NāmIruvar

டிஎம்எஸ் 100!

‘கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’, ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’, ‘உள்ளம் உருகுதையா’ போன்ற பாடல்களில் பல கடவுளர்களையும், ‘எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி’, `நான் ஆணையிட்டால்’ போன்ற பல பாடல்களின் மனிதர்களின் மனங்களையும் மகிழ்வித்தவர் டி.எம்.சௌந்தரராஜன். இவரின் நூற்றாண்டு இது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் மனங்களிலும் குடிகொண்டிருக்கும் அண்ணா, எம்ஜிஆர் போன்ற மூன்றெழுத்துகளுடன் ‘டிஎம்எஸ்’ என்ற மூன்றெழுத்தும் குடியேறியிருக்கும்.

‘கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் எஸ்.வி.சுப்பய்யா நாயுடு இசையில் ‘ராதே நீ என்னை விட்டு போகாதடி’ எனும் பாடலைப் பாடி தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆனார் டிஎம்எஸ்.

டிஎம்எஸ் பழனியில் தங்கியிருந்தபோது ஒரு இஸ்லாமிய இளைஞர் ‘உள்ளம் உருகுதடா’ என்று தொடங்கும் கவிதையைப் படித்துக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட டிஎம்எஸ், ‘இதை எழுதியவர் யார்?’ என்று விசாரித்திருக்கிறார். அவருக்கும் தெரியவில்லை. அவரைப் படிக்கச் சொல்லி, வரிகளை எழுதிக்கொண்டு, அதில் `உருகுதடா’ என்று முருகனை மிகவும் உரிமையாக கவிஞர் குறிப்பிடும் இடங்களை மட்டும் `உருகுதய்யா’ என்று அன்பைச் சுரக்கும் வார்த்தைகளைப் போட்டு, அதற்கு மெட்டமைத்து டிஎம்எஸ் பாடியிருக்கிறார். ஆனால், அதை எழுதியவர் யார் என்ற தேடலை அவர் தொடர்ந்தபடி இருந்தார். ஒருசமயம், வட சென்னை, தம்பு தெருவில் இருக்கும் காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கோயிலுக்குள் வலம் வரும்போது, ‘உள்ளம் உருகுதடா’ பாடல் கல்லில் பொறிக்கப்பட்டு அதன் கீழே ‘ஆண்டவன் பிச்சை’ என்று இருந்தது. ‘ஆண்டவன் பிச்சை’ என்பவர் துறவி மரகதம்மா என்பதை பின்னாளில் பல முயற்சிகளுக்குப் பின் அறிந்தார் டி.எம்.எஸ்.

ஒரு அஞ்சல் அட்டையில், `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ என்று தொடங்கி சில வரிகளோடு ஒரு கடிதம் டிஎம்எஸ்சுக்கு வந்திருந்தது. அந்த வரிகளில் பொதிந்திருந்த அருளை உணர்ந்து அதற்கு மெட்டமைத்து இசை சேர்த்து, அந்தப் பாடல் வானொலியில் என்றைக்கு ஒலிபரப்பாகிறது எனும் தகவலையும் அந்தப் பாடலுக்கான சன்மானத்தையும் உங்களுக்கு தர வேண்டும் என்று அந்தக் கவிஞருக்கு மறக்காமல் கடிதம் எழுதினார் டிஎம்எஸ். அந்தக் கவிஞர்தான் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனிப் பாதையை பின்னாளில் அமைத்துக்கொண்ட கவிஞர் வாலி. இத்தனை புகழுக்கும் உரிய டிஎம்எஸ்-சைப் போற்றுவோம்!

உள்ளத்தை உருகவைக்கும் குரல்: https://www.youtube.com/watch?v=s5HKS8LxJA8

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in