இசைவலம்: ஆண்டாளைக் கொண்டாடுவோம்!

இசைவலம்: ஆண்டாளைக் கொண்டாடுவோம்!

மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்றார் பகவான் கிருஷ்ணர். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் அதற்கு ஒரு காரணம் எனலாம். இன்றைக்கு 21-ம் நூற்றாண்டில்கூட ஒரு பெண் தன்னுடைய அக உணர்ச்சிகளைப் பொதுவெளியில் பேசுவதற்கும் தன்னுடைய கருத்துகளை எழுதுவதற்கும் தயக்கம் இருக்கும்போது, தன்னுடைய அக உலகை, விருப்பத்தை, காதலை இறைவனிடமே எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் உரைத்த முன்னோடிப் பெண்ணாக ஆண்டாள் என்றென்றைக்கும் நம்மிடையே வாழும் உன்னதமாக இருக்கிறார். தலைமுறைகளைத் தாண்டி பல கலைஞர்களும் ஆண்டாளைக் காலம் காலமாகக் கொண்டாடிவருகின்றனர். அதில் சிலரைப் பற்றிய காணொலிகளை இந்த வாரம் அளிப்பதன் மூலம் மார்கழியோடு சேர்த்து ஆண்டாளையும் கொண்டாடுவோம்.

ஆண்டாளும் அனிதாவும்!

பரதநாட்டியக் கலையை, பாரம்பரியத்தின் பெருமையோடும் நவீனத்தின் உள்ளீடோடும் கவனப்படுத்தும் கலைஞர் அனிதா ரத்னம். தனக்கும் ஆண்டாளுக்கும் இருக்கும் அன்யோன்யத்தைப் பேசி காணொலியாக அவர் வெளியிட்டிருக்கிறார். கலைக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் ஆண்டாள் எப்படிப் பாலமாக இருக்கிறார், இன்றைக்கும் என்றென்றைக்கும் ஆண்டாள் ஏன் நமக்குத் தேவைப்படுகிறார் என்பதை விளக்கியிருக்கிறார் அனிதா.

அவர் தனது குழுவினருடன் அரங்கேற்றிய `நாச்சியார் நெக்ஸ்’ட்’ நாட்டிய நாடகத்தைப் பார்த்த அனுபவத்தை, இங்கே பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். வரலாற்று ரீதியாகத் தன்னுடைய காதலை முதன்முதலாகப் பொதுவெளியில் மிகவும் தீர்க்கமாகப் பேசிய பெண்ணின் குரலாகப் பதிவாகியிருப்பது, ஆண்டாளின் குரல்தான். கிருஷ்ணன் மீதான ஆண்டாளின் அன்பை விளக்கும் காட்சிகளுக்கு ஊடாகவே பசு, மரம், செடி, கொடி, குயில், கிளி, சங்கு, புல்லாங்குழல் என எல்லாவற்றின் மீதான ஆண்டாளின் நேசமும் நாடகத்தில் ரம்யமான காட்சிகளாகியிருக்கும். மழை, புல்பூண்டு என எல்லா அழகியலும் ஆண்டாளாகவே நமக்கு தரிசனமாகும்.

கிருஷ்ணர் மீதான பாசம், காதல், பிரிவு போன்ற எல்லா உணர்ச்சிகளையும் சமகாலப் பெண் எழுச்சிக்கான பிரதிநிதியாகவே ஆண்டாள் பிரதிபலிப்பதை உணர முடியும். ‘கற்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ’, `கண்ணன் என் கருந்தெய்வம்’ ஆகிய பாசுரங்களை நாடகத்தில் காட்சிப்படுத்தியிருந்த விதம், ஆண்டாளின் ஒட்டுமொத்த கிருஷ்ண பிரேமையை ரசிகர்களிடமும் கடத்தியது போல் இருக்கும். பாற்கடல் வண்ணனிடம் சேர்ப்பிக்கும்படி ஆண்டாள், மன்மதனை வேண்டுவது, குயிலைத் தூதுவிடுவது, கிளியைத் துணைக்கு அனுப்புவது, மேகத்தைத் தூதுவிடுவது போன்ற காட்சிகளில் இறைவனையே விரும்பும் ஆண்டாளின் உன்னதமான காதல் ரசனையோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பல்லக்கில் கிருஷ்ணன் வரும் காட்சியும், கிருஷ்ணனோடு ஆண்டாள் ஐக்கியம் ஆகும் காட்சியும், ரசிகர்களை பக்தர்களாக மாற்றும் வகையில் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அரங்கரிடம் முத்துக்குறி கேட்கும் வழக்கம் இன்றைக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கிறது. அதுவும் நாடகத்தில் ஒரு காட்சியாக எடுத்தாளப்பட்டிருக்கும். இதுபோன்ற வழக்கத்திலிருக்கும் பழக்கங்கள், எக்காலத்துக்கும் பொருந்துபவளாக ஆண்டாளை நம்முன் நிறுத்தும்.

18 ஆண்டுகளுக்கு முன் அனிதா அரங்கேற்றிய ஆண்டாள் நாட்டிய நாடகத்தில், ரேவதி சங்கரன் செவிலித் தாயாகவும் அனிதா ரத்னம் ஆண்டாளாகவும் தோன்றினர். இப்போது அனிதா ரத்னம் செவிலித் தாயாகவும் அர்ச்சனா எனும் இளம்பெண் ஆண்டாளாகவும் தோன்றினர். கலைஞர்களுக்கு மூப்பு ஏற்படலாம். கலைக்கும் கலைஞர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் ஆண்டாள், இன்றைக்கும் இளமைப் பொலிவோடு எல்லோரின் மனங்களிலும் நிறைந்திருக்கிறாள்!

ஆண்டாளுக்கு அனிதா செய்யும் ஆராதனை: https://www.youtube.com/watch?v=UCl-N2GHh7Q

ஞாபகமாய் மறக்கப்படும் நாச்சியார் மொழி!

ஆண்டாளைக் கொண்டாடுவதில்கூட எல்லைகளை வகுத்துக்கொண்டிருக்கும் கலைஞர்கள் நம்மிடையே உண்டு. ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை விழுந்து விழுந்து பாராயணம் செய்பவர்கள்கூட, ஆண்டாளின் நாச்சியார் திருமொழியை ஞாபகமாய் மறந்துவிடுவார்கள்!

அப்படி மூத்த தலைமுறையினர் சிலர் ஞாபகமாய் மறந்த நாச்சியார் திருமொழியை, எல்லாக் கலை வடிவங்களிலும் கொண்டாடிவருகிறது இன்றைய இளைய தலைமுறை. அப்படிப்பட்ட தமிழை ஆண்ட ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் உள்ள பாடலான ‘கற்பூரம் நாறுமோ’ எனும் பாடலை விதிதா கன்னிக்ஸ், கீரவாணி ராகத்தின் ஏற்ற இறக்கத்துடன் பாடிமுடிக்க, அர்த்தம் பொதிந்த பாடலின் வார்த்தைகளிலும் உருக்கத்திலும் மெய்மறந்துபோன ரசிகர் கூட்டம் சில நொடிகள் அமைதிக்குப் பின், எழுந்து நின்று ஆரவாரிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 2019-ல் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-வது ஆண்டு விழா மற்றும் 10-வது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி நடந்த நிகழ்வில் பாடப்பட்ட இந்தப் பாடலை, பிரத்யேகமான அரங்கத்தில் மீண்டும் பாடி, அதே சிம்பொனிக் கலைஞர்களைக் கொண்டு வாசிக்கவைத்து ஒலிப்பதிவு செய்து காணொலியாக யூடியூபில் வெளியிட்டிருக்கின்றனர்.

ஏறக்குறைய 80 பாடகர்கள். 35 இளம் பாடகர்கள் தொல்காப்பியம் தொடங்கி, சங்க காலத்தின் திருக்குறள், தேவாரம், நாச்சியார் திருமொழி, திருமந்திரம், சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்து பரணி ஆகியவற்றிலிருந்து பல பாடல்களைச் சேர்ந்திசையாக வழங்கினர். ‘கற்பூரம் நாறுமோ’ பாடலைத் தனியாக மேடையில் பாடிய விதிதா, கன்னிகேஸ்வரனின் மகள். இவர் மெக்கில் பல்கலைக்கழகத்தில் மேற்கத்திய இசையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கன்னிகேஸ்வரனிடமிருந்தே கர்னாடக இசையை முறையாகப் பயின்றிருக்கிறார். மீரா பஜனை அடியொற்றி ஆங்கிலத்தில் ஒரு பாடலை எழுதி இசையமைத்துப் பாடியிருக்கிறார்.

சிம்பொனி இசையில் சிலிர்க்கவைக்கும் கற்பூர கானம்: https://www.youtube.com/watch?v=2nMLpGYOiEQ

இயற்கையின் மடியில் நாச்சியார் கவுத்துவம்!

பரதநாட்டிய அரங்கேற்றங்களில் ஒவ்வொரு திசைக்கும் உரிய தெய்வங்களை வணங்கியும் தொழுதும் தமது நடனத்தைச் சமர்ப்பிப்பதற்கு ‘கவுத்துவம்’ என்று பெயர். கணபதி கவுத்துவம், நவசந்தி கவுத்துவம் என்று பல கவுத்துவங்கள் பரதநாட்டிய அரங்கேற்றங்களில் பாரம்பரியமாக ஆடப்பட்டு வருகின்றன.

இதில் அரிதானது நாச்சியார் கவுத்துவம். கலையின் தாயாக திசைகளுக்கு அப்பாற்பட்டு ஆட்சி செலுத்தும் ஆண்டாளை முன்னிறுத்தி ஆடப்படும் இந்த நாச்சியார் கவுத்துவத்தை, பரதநாட்டியக் கலையில் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையைப் பதித்துவரும் ருக்மிணி விஜயகுமார், அரங்கத்தில் ஆடாமல் இயற்கையின் மடியில் இந்த கவுத்துவத்தை அரங்கேற்றும் இந்தக் காணொலி, கலை மக்களுக்கானது மட்டுமல்ல... மரம், செடி, கொடிகளுக்குமானவை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கின்றது.

கவுத்துவத்தின் மகத்துவம்: https://www.youtube.com/watch?v=3bdI4TONXKo

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in