பேசும் படம் - 10

பேசும் படம் - 10

ஆசியாவை ஒருங்கிணைத்த விளையாட்டு சுதந்திர இந்தியாவில் நடந்த முதலாவது பிரம்மாண்டமான விளையாட்டு நிகழ்ச்சி என்றால், அது 1951-ல் நடந்த முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிதான். நாடு விடுதலையடைந்த சில ஆண்டுகளிலேயே சர்வதேச அளவில் தங்களால் மிகப்பெரிய சர்வதேச விளையாட்டுப் போட்டியை நடத்த முடியும் என்று உலகுக்கு இந்தியா சாதித்துக் காட்டிய தருணம் அது.

1951-ம் ஆண்டுக்கு முன்னதாக அனைத்து ஆசிய நாடுகளுக்கும் பொதுவான விளையாட்டுப் போட்டிகள் ஏதும் இல்லை. அதே நேரத்தில் 1913-ம் ஆண்டு முதல், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஃபார் ஈஸ்டர்ன் கேம்ஸ்’ என்ற பெயரில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. இந்நிலையில் 1937-ல், சீனா மீது ஜப்பான் போர் தொடுத்ததால் அந்நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக 1938-ல், ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறுவதாக இருந்த ஃபார் ஈஸ்டர்ன் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகள் தடைபட்டன. அதுவே அந்த விளையாட்டுப் போட்டிக்கு முடிவுரை எழுதியது.
மற்றொருபுறம் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாலஸ்தீனம், இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து 1934 முதல், ‘வெஸ்டர்ன் ஏஷியாடிக் கேம்ஸ்’ என்ற விளையாட்டுப் போட்டிகளை தங்களுக்குள் நடத்தி வந்தன. இந்நிலையில் 1938-ல், டெல் அவிவ் நகரில் நடப்பதாக இருந்த இப்போட்டி உலகப் போரால் கைவிடப்பட்டது. இந்தச் சூழலில்தான் ஃபார் ஈஸ்டர்ன் கேம்ஸையும், வெஸ்டர்ன் ஏசியாடிக் கேம்ஸையும் இணைத்து ஆசிய அளவில் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தால் என்ன என்ற எண்ணம் ஆசிய நாடுகளிடையே ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டி உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் 1951-ல் நடைபெற்றன.

இப்போட்டியில் இந்தியா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 489 வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றனர். மொத்தம் 17 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஜப்பான் அணி 24 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தையும், இந்திய அணி 15 தங்கப்பதக்கங்களுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.

 இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி, இந்த விளையாட்டுப் போட்டிகளைக் காண்பதில் பெரிதும் ஆர்வமாக இருந்தார். தனது புதல்வர்களான சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தியுடன் தினமும் மைதானத்துக்கு வந்து விளையாட்டுப் போட்டிகளை அவர் கண்டுகளித்தார். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் இந்திரா தனது புதல்வர்களுடன் அமர்ந்து விளையாட்டுப் போட்டிகளை ரசிப்பதை இந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபரான ஒமாயி வியாரவாலா (Homai Vyarawalla) பதிவு செய்தார். அதைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

பிற்காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தபோது 1982-ல், ஆசிய விளையாட்டுப் போட்டியை மீண்டும் இந்தியாவில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒமாயி வியாரவாலா

இந்தியாவின் முதல் பெண் செய்தி புகைப்பட நிபுணரான ஒமாயி வியாரவலா (Homai Vyarawalla), 1913-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி குஜராத்தில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டிய இவர், 1930-களில் பத்திரிகைத் துறையில் நுழைந்தார். 2-வது உலகப் போரின்போது ‘தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ (The Illustrated Weekly of India) பத்திரிகைக்காக பல படங்களை எடுத்த இவர், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் படம் பிடித்துள்ளார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய இவர், சுதந்திர இந்தியாவிலும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைப் படம் பிடித்துள்ளார். தனது சேவைகளுக்காக, நாட்டின் 2-வது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் மிக முக்கியப் புகைப்படக்காரர்களில் ஒருவரான இவர் 2012-ம் ஆண்டு ஜனவரி 15-ல் காலமானார்.
 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in