”ஆளும்கட்சியான பிறகும் மக்களுக்காகப் போராடுகிறோம்!”: உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைமையில் கருப்புக் கொடியேந்தி போராட்டம்
”ஆளும்கட்சியான பிறகும் மக்களுக்காகப் போராடுகிறோம்!”: உதயநிதி ஸ்டாலின்
தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம், பெட்ரொல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுதும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக, திமுக சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இன்று (செப். 20) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவிக தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா, மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை தா.வேலு உள்ளிட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர், மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது,

”நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் போராடினோம். இன்று ஆளும்கட்சியாக இருந்தாலும் போராடுகிறோம். எங்கள் போராட்டம் மக்களுக்கான போராட்டம். வேளாண் சட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு மத்திய அரசு தொடர்ச்சியாக விற்று வருகிறது. உடனடியாக இந்தப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும்” என்றார்.

மேலும், “தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். மகளிருக்கான இலவச பேருந்து, கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம், பெட்ரோல் மீது 3 ரூபாய் கலால் வரி குறைப்பு ஆகியவற்றைச் செய்துகாட்டியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக திமுக அறிக்கையில் கூறிய கேஸ் விலையிலிருந்து 100 ரூபாய் குறைப்பதற்கான வழியையும் விரைவில் தமிழக அரசு செயல்படுத்தும்”.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in