கோரிக்கைகள் கவனிக்கப்படாததால் போராடத் தயாராகும் அரசு மருத்துவர்கள்

கோரிக்கைகள் கவனிக்கப்படாததால் போராடத் தயாராகும் அரசு மருத்துவர்கள்
பெருமாள் பிள்ளை

ஊதிய உயர்வு கோரிக்கை கிடப்பில் கிடக்கும் நிலையில், மீண்டும் போராட்டக் களத்துக்குச் செல்லும் சூழல் எழுந்திருப்பதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பெருமாள் பிள்ளை காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது நேரில் சந்தித்த இப்போதைய முதல்வர், ‘வருத்தப்பட வேண்டாம். போராட்டத்தை வாபஸ் பெறுங்கள். அடுத்து அமையும் திமுக ஆட்சியில், அரசாணை 354-ன் படி அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என உறுதியளித்தார். இருப்பினும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாததால், முதல்வரின் கவனத்திற்கு, உயர் அதிகாரிகள் எங்கள் பிரச்சினையைக் கொண்டு செல்லவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதியன்று தமிழக முதல்வர் கலந்து கொண்ட மருத்துவர்கள் தினவிழாவில், அரசு மருத்துவர்களின் நான்கு கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு, கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் முதல்வரிடம் சொல்லியிருந்தால் நிச்சயமாக முதல்வர் நிறைவேற்றியிருப்பார். ஆனால், சொல்ல வேண்டியவர்கள் அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.

கர்நாடகா, தெலங்கானா, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா நேரத்தில் மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்து ஊதிய உயர்வு அளித்துள்ளார்கள். அதைப்போல தமிழகத்திலும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் முதல்வரிடம் கேட்டிருந்தால், உடனடியாக ஆர்வமுடன் முதல்வர் நிறைவேற்றியிருப்பார்.

பயிற்சி மருத்துவர்களுக்கும், அரசு சாரா மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும் அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்த உடனே உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், 4 ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் எத்தனையோ வலிகளை சந்தித்த பிறகும், அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த கோரிக்கையை, ஒரு சிலர் மட்டுமே முன்னெடுத்துச் செல்வதாக, தவறான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, முதல்வரின் கவனத்திற்குச் சென்றுவிடாதபடி செயல்பட்டு வருகிறார்கள். கருணாநிதி பிறந்தநாள், மருத்துவர்கள் தினம், கருணாநிதியின் படத்திறப்பு விழா, பட்ஜெட் கூட்டத் தொடர் என முக்கிய நிகழ்வுகளின் போது, ஏராளமான மருத்துவர்கள், முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்தோம். இருப்பினும் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு பதில், சுகாதாரத் துறைக்கே அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா என்னும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள, அரசுக்கு உறுதுணையாக உள்ள அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்பதை சுகாதாரத் துறை செயலாளர் சொல்லியிருந்தால், எங்கள் கோரிக்கையை முதல்வர் எப்போதோ நிறைவேற்றி இருப்பார். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, தமிழகத்திலுள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு தரப்படுகிறது. இந்த உண்மை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தால், உடனே கோரிக்கை நிறைவேற்றப் பட்டிருக்கும். இதனால் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் போராட்டம் நடத்த அரசு மருத்துவர்கள் தயாராகி வருகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.