‘வாரந்தோறும் முட்டை’ மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிபர் கைது!

மோசடி கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிரம்
‘வாரந்தோறும் முட்டை’  மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிபர் கைது!
பாதிக்கப்பட்டார் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தபோது..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஃபோல் ரீடெய்ல்ஸ் எக் மார்ட் (Rafoll retails pvt ltd egg mart) என்ற தனியார் நிறுவனம், குறைந்த விலையில் முட்டை தருவதாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டது.

அதில், ஒரு முட்டையின் விலை 2.24 பைசா மட்டுமே எனவும் ரூ.700 முதலீடு செய்தால் வாரம் 6 முட்டைகள், ரூ.1,400 முதலீடு செய்தால் வாரம் 12 முட்டைகள், ரூ.2,800 முதலீடு செய்தால் 24 முட்டைகள் டோர் டெலிவரி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி பொதுமக்கள் சிலர் பணத்தை செலுத்தினர்.

மளிகைப் பொருட்களில் ரூ.35 ஆயிரம் முதலீடு செய்தால், வாரம் ரூ.2,500 பணமாகவோ அல்லது மளிகைப்பொருட்களாகவோ கிடைக்கும்.

இது மோசடி விளம்பரமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இது மோசடி நிறுவனம் என்பது தெரியவந்ததை அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இந்நிறுவனத்தில் பொதுமக்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், அந்த நிறுவனத்தின் நிறுவனரான அரக்கோணத்தைச் சேர்ந்த சிவம் நரேந்திரனைப் பிடித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் முறையான உரிமம் பெறாமல் திருமுல்லைவாயிலில் நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது.

இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மேற்படி நிறுவனத்தின் மீது, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்தன.

குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். அப்புகாரில் மளிகைப் பொருட்களில் ரூ.35 ஆயிரம் முதலீடு செய்தால், வாரம் ரூ.2,500 பணமாகவோ அல்லது மளிகைப் பொருட்களாகவோ கிடைக்கும் என நூதன முறையில் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சிவன் நரேந்திரன்
கைதுசெய்யப்பட்ட சிவன் நரேந்திரன்

இதைத் தொடர்ந்து சிவன் நரேந்திரன் உட்பட 12 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மோசடி கும்பல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்வரை மோசடி செய்து, அந்தப் பணத்தில் 2 கார்கள் மற்றும் 10 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நிறுவன உரிமையாளர் சிவன் நரேந்திரனை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், மோசடியில் தொடர்புடைய மற்றவர்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலமாக, வேறு எங்கேனும் சொத்துகளை இந்த கும்பல் வாங்கியுள்ளனரா என்ற விவரங்களையும் சேகரித்து வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.