குளிர்பானம் குடித்த சிறுவர்கள் ரத்தவாந்தி: பெட்டிக்கடை, குளிர்பான தயாரிப்பு ஆலையில் அதிரடி ஆய்வு

குளிர்பானம் குடித்த சிறுவர்கள் ரத்தவாந்தி: பெட்டிக்கடை, குளிர்பான தயாரிப்பு ஆலையில் அதிரடி ஆய்வு

புது வண்ணாரப்பேட்டை வெங்கடேஷ்வரன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகன் லக்ஷ்மண் சாய்(6), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவருகிறார்.

நேற்று (செப்.21) மதியம் செந்தில்குமாரின் மகன் லக்ஷ்மண் சாய் மற்றும் அவரது உறவினர் மகன் ஓமேஷ்வர் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடை ஒன்றில், பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த குளிர்பானத்தை வாங்கி அருந்தியுள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த சிறுவர்கள், சில நிமிடங்களில் மயக்கம் வருவதாகக் கூறியிருக்கின்றனர். உடனே ரத்த வாந்தியும் எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெட்டிக்கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது...
பெட்டிக்கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது...

இதற்கிடையே லக்ஷ்மண் சாயின் பெற்றோர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் சிறுவன் அருந்திய குளிர்பான பாட்டிலைப் பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அடுத்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குளிர்பானத்தின் தரத்தைச் சோதனைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில், இன்று காலை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குளிர்பானம் விற்பனை செய்த பெட்டிக்கடையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயங்கிவரும் குளிர்பான ஆலைககளில் சோதனை நடத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி, சென்னை பெசன்ட் நகரில் உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி ஒருவர் இதே போன்ற குளிர்பானம் குடித்து உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.